Published:Updated:

அவதூறு - அவரும்... இவரும்!

அவதூறு - அவரும்... இவரும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவதூறு - அவரும்... இவரும்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சம்பவம் - 1

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்,  மூன்று மாதங்களுக்கு முன்னர், இணையத்தில் வெளியாகும் ஒரு பத்திரிகைக்காக எழுதிய செய்தியில், `தமிழக முதலமைச்சரின் உடல்நிலை பற்றி பல தகவல்கள் வதந்திகளாக உலவுகின்றன. ஆனால், அதற்கு தமிழக அரசு சார்பில் இருந்தும் முதலமைச்சர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் வெளிவரவில்லை. இது மேலும், சந்தேகங்களை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்தார்.

தமிழக முதலமைச்சர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை எனச் சொன்னதே அவதூறு ஆகிவிட்டது!

சம்பவம் - 2

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நடத்தும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர் அவர். ஆசிரியர் குழுவினர் எழுதிக்கொடுத்த செய்தியை வாசித்துவிட்டுச் சென்ற அவருக்கு, மூன்றாவது நாள் காத்திருந்தது அதிர்ச்சி. முதலமைச்சரைத் தரக்குறைவாக விமர்சித்து, அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக அந்தத் தொலைக் காட்சியின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் அந்தச் செய்தி வாசிப்பாளரின் பெயரும் இருந்தது. தற்போது வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருக் கிறார் அந்தப் பெண் செய்தி வாசிப்பாளர். அவருடன் பேசியபோது, ‘‘இந்த வழக்கின் காரணமாக என் திருமணம் தள்ளிப் போகிறது. பெண் பார்க்க வருபவர்களுக்கு இந்த வழக்கின் தன்மை பற்றி புரியவைக்க முடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, `பெண் மீது கோர்ட்டில் வழக்கு இருக்கிறது’  என்ற ரீதியில் மட்டும் புரிந்துகொண்டு திரும்பிச் சென்றுவிடுகின்றனர்” என்றார். 

இத்தனைக்கும் அவர் அந்த நிறுவனத்தின் முழு நேர ஊழியர் இல்லை. வாரத்தில் ஓரிரு நாட்கள் செய்தி வாசிக்கும் பகுதி நேர ஊழியர். அதனால், வழக்கை அவர்தான் எதிர்கொள்கிறார்!

அவதூறு - அவரும்... இவரும்!

சம்பவம் - 3

ஆங்கிலச் செய்தி சேனல் ஒன்றில் முதன்மைச் செய்தி ஆசிரியர் அவர். இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரபலங்களையும் பேட்டி கண்டவர். வட இந்திய அரசியல் பிரபலங்களை வைத்து அவர் நடத்தும் விவாத நிகழ்ச்சி, இந்திய அளவில் பிரபலம். அந்தத் தொலைக்காட்சியின் சென்னைச் செய்தியாளர், `அரசு வழங்கும் இலவச முட்டையில் ஊழல் நடந்துள்ளது’ என ஆதாரங்களுடன் ஒரு செய்தி வெளியிட்டார். அதற்காக அரசாங்கம் அவர் மீதும் முதன்மைச் செய்தி ஆசிரியர் மீதும் வழக்கு தொடுத்தது. ஒருநாள் டெல்லியில் இருந்து தமிழகம் வந்து, வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகிச் சென்ற அந்த முதன்மைச் செய்தி ஆசிரியர், அதன் பிறகு தமிழக அரசு பற்றிய விமர்சனச் செய்திகள் எதையும் தன் தொலைக்காட்சியில் வெளியிடவில்லை.  இத்தனைக்கும் அவர் வட இந்திய அரசியல் பிரபலங்களை, சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக, தன் கேள்விகளால் வறுத்தெடுப்பவர்.

இந்த அச்சத்தை விதைப்பதுதான் அவதூறு வழக்குகளின் நோக்கம். இந்த அச்சத்தையும் பதற்றத்தையும் பாதிப்பு களையும் பாய்ச்சுவதே தமிழக அரசின் நோக்கம். பத்திரிகையாளர்கள் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது தமிழக அரசாங்கம். சட்டத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, அதே சட்டம் வழங்கிய கருத்துரிமையின் கழுத்தை நெரித்து, மெள்ளக் கொல்லும் உத்தி. அதைச் சரியாகக் கடைப்பிடிக்கிறது தமிழக அரசு. அதன் விளைவுதான், இதுவரை மொத்தம் 220 அவதூறு வழக்குகள்... இந்த ஆட்சியில் மட்டும்.

அவரும்... இவரும்!

பத்திரிகைகளின் வாயை அடைக்க, அவதூறு வழக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் தி.மு.க - அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் சளைத்தவை அல்ல. இருவரின் ஆயுதமும் அவதூறு வழக்குத்தான். ஆனால், அதைப் பிரயோகிக்கும் முறை வேறு வேறு.

தன்னைப் பற்றியும் தன் அரசாங்கம் பற்றியும் பத்திரிகைகளில் எது வந்தாலும், அ.தி.மு.க ஆட்சியில் அவதூறு வழக்கு பாயும். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வழி இன்னும் விநோதமானது.
கருணாநிதியைப் பற்றியோ, அவரது குடும்ப ஆதிக்கம் பற்றியோ, அவரது  ஆட்சியைப் பற்றியோ ஏதேனும் விமர்சனம் செய்து, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், `முரசொலி’யில் கட்டுரை எழுதுவார். அதில் விஷம் கக்கப்பட்டிருக்கும்; உள்நோக்கம் தெறிக்கும்; சாதியைச் சொல்லி சிண்டு முடியப்பட்டிருக்கும். `பார்ப்பன ஏடுகள்’ என்பார்; பட்டப்பெயர் சூட்டுவார். அனைத்தையும் செய்துவிட்டு, அதன்பிறகு, அவதூறு வழக்கு போடுவார்.

கடந்த முறை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, தமிழக அரசியலில் ஈழத்தமிழர் பிரச்னை,  கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட பிளவுகள், 2ஜி ஊழல் வழக்கு போன்றவை விஸ்வரூபம் எடுத்து நின்றன. அப்போது அவை பற்றி, ஆனந்த விகடன் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டது. உடனே, ஆனந்த விகடனைத் திட்டி முரசொலியில் கட்டுரை எழுதிய கருணாநிதி, `பார்ப்பன ஏடுகளின் சதி’, `ஜெயலலிதாவின் ஊதுகுழல்’, `ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அரியணையில் அமர்த்தத் துடிப்பவர்கள்’ என விமர்சித்தார். அதன் உச்சக்கட்டமாக ஆக்டோபஸ் போல் ஜெயலலிதாவின் படத்தை கார்ட்டூனாகப் போட்டு, `ஆக்டோபஸின் கோரக்கரங்கள்’ என்று ஆனந்த விகடன், துக்ளக், கல்கி, தினமணி, தினமலர்... பத்திரிகைகளைச் சித்திரித்திருந்தனர். அதன்பிறகு, அவதூறு வழக்குகள் பாய்ந்தன.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல, அந்தக் கட்சியின் அடுத்தமட்டத்தில் இருக்கும் உடன்பிறப்புகள். குறிப்பாக 2-ஜி ஊழல் வழக்கு பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழ், தன்னைப் பற்றி இனி எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது என வழக்கு போட்டார் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, `பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் இதுபோன்ற விமர்சனங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அதனால், விகடன் பத்திரிகைகளில் செய்தி வரத் தடை விதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தார்.

தி.மு.க-வின் மற்றொரு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜூனியர் விகடன் இதழ் மீது, சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகளைத் தொடுத்தார். தி.மு.க செயற்குழுவில், ராகுல் காந்தி பற்றி அவர் பேசியது தொடர்பாக ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளியானது. அதற்கு ஓர் அவதூறு வழக்கும் அதன் பிறகு, சேதுசமுத்திரத் திட்டம் பற்றி ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளியானபோது, இன்னோர் அவதூறு வழக்கும் போட்டார் டி.ஆர்.பாலு.

அதுபோல, மு.க.அழகிரியின் வலது கரமாகவும், தி.மு.க செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பொட்டு சுரேஷ் (பின்னாளில் மதுரையில் படுகொலை செய்யப்பட்டவர்) பற்றி ஒரு செய்தி  ஜூனியர் விகடனில் வெளியானது. அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தைத் தூண்டிவிட்டு, விகடன் அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தத் தூண்டினார்.

மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விரிவாகச் செய்தி வெளியிட்ட தினபூமி ஆசிரியர் மணிமாறன் மற்றும் அவரது மகன் ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, போலீஸ் தொல்லைகளுக்கு ஆளானது அன்றைய பரபரப்புச் செய்தி. எப்போதும் அரசை விமர்சித்து செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு இரண்டு ஆட்சிகளிலும் இதுதான் நிலை.

பேசியதை எழுதினாலும் வழக்கு

உலகத்தில் எங்கும் இல்லாத உச்சக்கட்ட அராஜகம் இதுதான். ஒரு பத்திரிகை, கட்டுரை வடிவத்திலோ அல்லது தலையங்கம் என்ற பெயரிலோ அரசாங்கத்தை விமர்சனம் செய்யும்போது, அதன் மீது அவதூறு வழக்கு போடப்படுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை விமர்சனம் செய்து பேசியதை, செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு போடும் புதிய கலாசாரம் அ.தி.மு.க அரசால்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

நக்கீரன் பத்திரிகை, ஜெயலலிதாவின் உணவுப்பழக்கம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டது. அதற்காக அந்தப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதுடன், அதன் அலுவலகமும் கடுமையாகத் தாக்கப்பட்டது. இது ‘இந்து’ நாளிதழில் செய்தியாக வெளியானது. இதையடுத்து அந்தப் பத்திரிகை மீதும், முதலமைச்சரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
சென்னையில் பரவிவந்த காலரா நோய், மாநகராட்சியின் செயல் இழந்த தன்மையைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘மாநிலத்தின் தலைநகரில் காலரா பரவிவரும்போது, ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாக கொடநாட்டில் ஓய்வெடுக்க முடிகிறது?’ எனக் கேள்வி எழுப்பினார். அப்போது மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. அத்துடன், மு.க.ஸ்டாலினின் பேச்சை வெளியிட்ட, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, `தினகரன்’ நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

‘ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னதற்காக கருணாநிதி மீதும், அதைச் செய்தியாக வெளியிட்ட முரசொலி நாளேட்டின் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்தன.
இதுபோன்ற ஓர் அச்சுறுத்தல் நடவடிக்கை தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

அணி திரளாத ஊடகங்கள்!

தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல் பற்றி அவதூறு வழக்குகளைச் சந்தித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ராம சுப்பிரமணியிடம் பேசினோம்...

‘‘ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்ய எந்தத் தடையும் இல்லை. உலக நாடுகள் அனைத்திலும் அதுதான் நடைமுறை. ஆனால், இந்தியாவில் மட்டும்தான், அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக கிரிமினல் நடவடிக்கை கோரி அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன.  ஓர் அரசாங்கம் தன் கொள்கைகளை விமர்சித்த பத்திரிகைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் 230 வழக்குகளைப் போட்டது, தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதை மிக மிக மோசமான சர்வாதிகாரப் போக்கு என்றே வரையறுக்க முடியும். இத்தனை வழக்குகள் பாய்ந்தும்கூட அவற்றுக்கு எதிராக ஊடகங்கள் ஒன்று திரளாததுதான்  இந்த ஆட்சியாளர்களின் வெற்றி; அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேரளா பத்திரிகையாளர்கள், ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். அப்போது ஆனந்த விகடன் மீது போடப்பட்டிருந்த வழக்கு பற்றி என்னிடம் கேட்டனர். `ஆனந்த விகடன் பத்திரிகை மீது மட்டும் 30-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன’ என நான் சொன்னதும் அவர்களுக்கு பெரும்  அதிர்ச்சி. `இங்குள்ள மற்ற பத்திரிகைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன. இதை பத்திரிகையாளர்கள் ஏன் ஒரு வலுவான போராட்டமாக முன்னெடுக்கவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கு நம்மிடம் பதில் இல்லை. இப்படி `இம்’ என்பதற்கும் `ஏன்?’ என்பதற்கும் அவதூறு வழக்கு போடுவது ஆளும் அரசாங்கம் செய்யும் சர்வாதிகாரம்” என்றார்.

அவதூறு வழக்கு பற்றி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் பேசினோம்...

‘‘அவதூறு என்பதற்கு சரியான வரையறை கிடையாது. தமிழில் `அவதூறு’ என்றும் `மானநஷ்டம்’ என்றும் குறிப்பிடுகிறோம். அதன் அடிப்படையில், ஆரம்பத்தில் சிவில் வழக்காகத்தான் அவதூறு வழக்குகள் இருந்தன. அதாவது தனக்கு சமூகத்தில் ஒரு கௌரவம் இருக்கிறது. அதை ஒருவர் வெளியிட்ட செய்தி குறைத்துவிட்டது; நட்டப்படுத்திவிட்டது. அதனால், எனக்கு நஷ்டஈடு வேண்டும் என்ற அர்த்தத்தில் தொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு, கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 499-வது பிரிவில் சேர்த்தனர். அதற்கான தண்டனைகள் 500-வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு பொது அரசு ஊழியர், தங்களை அவதூறு செய்தவர்கள் மீது வழக்கு போடும்போது அரசுத் தரப்பு வழக்குரைஞரை வைத்து வழக்கு போடுகின்றனர். இது `சம்மன் வழக்கு’ எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், இதில் கைது கிடையாது. நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் சொல்லவேண்டியதுதான் எதிர்வாதியின் வேலை. குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகுதான் தண்டனை என்பது வரும். ஆரம்பத்திலேயே மற்ற கிரிமினல் வழக்குகள்போல் இதில் கைது நடவடிக்கை கிடையாது. சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றால், கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு பிரச்னை என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பதை எப்படி சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ, அதுபோல கருத்துச் சொல்வதற்கு சட்டம் ஏற்படுத்தியுள்ள தடைகளையும் சிலர் தவறாகப் பயன்படுத்து கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் 19(2)-ல் கருத்துச் சுதந்திரத்துக்குத் தடை உள்ளது. ஏனென்றால், அடுத்தவரை விமர்சனம் செய்வதற்கு கருத்துச் சுதந்திரம் இல்லை. அதைத்தான் அரசாங்கம் சலுகையாக எடுத்துக்கொண்டு அவதூறு வழக்குகளைப் போடுகிறது. இதில் முந்தைய தி.மு.க அரசாங்கம் இன்றைய அ.தி.மு.க அரசாங்கம் என எந்தப் பாரபட்சமும் இல்லை. இருவரும் தங்களுக்கு எதிரான கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாதபோது, இதை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.  இவர்கள் யாருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் எண்ணம்தான் உள்ளது. தன்னைப் பற்றி செய்தியே வெளியிடக் கூடாது என முன்தடை கேட்டவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. ஆனால், அவர் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு பலதடவை நீதிமன்றம் சென்றுவருகிறார். அதை ஏன் பத்திரிகைகள் செய்தியாக வெளியிடக் கூடாது? அதற்கு நீதிமன்றங்கள் முன்தடை கொடுத்ததும்கூட கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல்தான்.

அதனால், `இந்தச் சட்டப் பிரிவை நீக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. அந்தத் தீர்ப்பு வந்த பிறகுதான் கருத்துச் சுதந்திரம் காக்கப்படுமா... அல்லது அதன் குரல்வளை நெரிக்கப்படுமா எனத் தெரிய வரும்” என்றார்.

உச்ச நீதிமன்றம் கண்டனம்

`எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் செய்யும் விமர்சனம், ஆட்சி, நிர்வாகம் அரசின் கொள்கையின் மீதான விமர்சனங்களே. அவற்றில் தனிநபர் விமர்சனம் இல்லை. தனிநபருக்கு எதிரான கருத்து இல்லை. பிறகு ஏன் இந்தக் குற்ற அவதூறு வழக்குகள்?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி.பன்ட் ஆகியோர், ‘ஆட்சி, அரசின் நிர்வாகம், அரசின் கொள்கைகள் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் போக்கை தமிழக அரசு முதலில் கைவிட வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் குறிப்பிட்டனர்.

தமிழக அரசுக்கு எப்போது புரியுமோ?

கருணாநிதியும் ஜெயலலிதாவும்!

கடந்த முறை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது 50 அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குறிப்பாக, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், கருணாநிதியின் அரசாங்கத்தை தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அந்த நேரத்தில்,
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர் பாரதிராஜா, சீமான், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதும் ஆனந்த விகடன் பத்திரிகை மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

அவதூறு - அவரும்... இவரும்!

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமே, அவதூறு வழக்குகள் போடும் வேலை தொடங்கிவிட்டது. இதுவரை 220 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதும் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன், தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட பத்திரிகைகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

அவதூறு வழக்குக்கு என தனியாக ஒரு வழக்குரைஞர்!

எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள், அவர்களுடைய பத்திரிகை - தொலைக்காட்சிப் பேட்டிகள், பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகள், தலையங்கங்களை தமிழக அரசின் சட்டத் துறை பிரித்தெடுக்கிறது. அதில் தமிழக அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி எதிர்மறையான விமர்சனம் என எதை எல்லாம் கருதுகிறார்களோ, அதை எல்லாம், அரசு குற்றவியல் தலைமை வழக்குரைஞருக்கு அனுப்பிவைக்கின்றனர். அவர், எதில் அவதூறு வழக்கு தொடுக்க முகாந்திரம் உள்ளது என ‘நோட்’ போட்டு சட்டத் துறைக்கு அனுப்புகிறார். அது தலைமைச் செயலாளருக்குப் போகிறது. அதன் பிறகு, அவதூறு வழக்கு தொடுக்க அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த அரசாணையை அடிப்படையாக வைத்து, சென்னை மாநகரக் குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஜெகன், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்கிறார். அதன் பிறகு அந்த வழக்குகளைத் தொடர்ந்து நடத்தவும் கண்காணிக்கவும் என அதற்கும் தனியாக அசோகன் என்கிற ஒரு வழக்குரைஞரை நியமித்துள்ளனர்!

வழக்குரைஞர் என்.ரமேஷ், விகடன் குழும வழக்குரைஞர்.

அவதூறு - அவரும்... இவரும்!

``இந்த ஆட்சியில் அதிகமான அவதூறு வழக்குகளைச் சந்தித்தது விகடன் குழுமப் பத்திரிகைகள் தான். ஆனால், எந்த வழக்குக்கும் தடைகேட்டு விகடன் குழுமம் சார்பில் உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ முறையீடு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்பட பலர் தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்குத் தடை விதிக்கக் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். ஆனால், விகடன் குழுமப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளையும் தைரியமாகச் சந்தித்துவருகின்றன. காரணம், இந்த வழக்குகளை நடத்தும்போது, அவற்றில் எந்தவிதமான அவதூறும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்!’’