Published:Updated:

என்.டி.ஏ-விலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாதது ஏன்?

என்.டி.ஏ-விலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாதது ஏன்?
என்.டி.ஏ-விலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாதது ஏன்?

த்திய அமைச்சரவையில் இருந்தும், பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியேறுவார் என்று ஆந்திர மாநில மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுமே எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் இப்போதைக்கு அந்த முடிவை எடுக்காமல் தவிர்த்துள்ளார். 

அமராவதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.பி.-க்கள் கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்தும், பி.ஜே.பி. கூட்டணியில் இருந்தும் வெளியேறுவது பற்றி முடிவெடுக்கப்படவில்லை.

அமித்ஷாவிடமிருந்து வந்த போன்கால்

அதற்குக் காரணம், கூட்டத்திற்கு முன், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதே என்று தெரிய வந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறும் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அப்போது, சந்திரபாயு நாயுடுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது. 

பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்றும், மகாராஷ்டிராவில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடும் என்றும் உத்தவ் தாக்கரே அறிவித்துவிட்ட நிலையில், ஆந்திராவிலும் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினால், அது மத்தியில் பி.ஜே.பி-க்கு நெருக்கடியை உருவாக்கும் என்று கருதியே அமித் ஷா பேசியதாகக் கூறப்படுகிறது. 

1996-ம் ஆண்டு தேசிய முன்னணி உருவாக்கப்பட்டதில், சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்காற்றியது போன்று, காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத இதர முக்கியமான மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்குவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏதுவாக ஞாயிறன்று நடைபெற்ற தெலுங்குதேசம் கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், மத்திய அரசில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பி.ஜே.பி கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஒய்.எஸ்.சவுத்ரி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்து வைப்போம்; அவை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். எனினும், அமித் ஷா தொடர்புகொண்டு பேசியது பற்றி, ஒய்.எஸ். சவுத்ரியிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்துவிட்டார். அதுபோன்ற தகவல்கள் யூகமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

தெலுங்குதேசம் கட்சியைப் பொறுத்தவரை, உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என்றும், கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறும் என்று கூறுவது ஊடகங்களின் கணிப்பு என்றும் சவுத்ரி தெரிவித்தார். மேலும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் சந்திரபாபு நாயுடு பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

எனவே, மத்திய பி.ஜே.பி. அரசை மிரட்டும் நோக்கில் சம்பிரதாயத்திற்காகவே தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

பட்ஜெட்டில் காணாமல்போன ஆந்திரா

இதற்கிடையே ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு நிதி ஒதுக்கப்படாதது பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேவையான நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளது என்றும், கூட்டணிக் கட்சிகளுடனான கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் பதிலளித்தார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி. எதிர்கொள்ளும் என்றும் அருண் ஜெட்லி கூறினார். ஆந்திர மக்களுக்கு பி.ஜே.பி. அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், மாநில மேம்பாட்டிற்காகத் தனியாக நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சந்திரபாபு நாயுடு, கடந்த சில தினங்களுக்கு முன் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

பி.ஜே.பி-யுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள அதிருப்தியைப் போக்க, பி.ஜே.பி. விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும், அவருடன் பேச்சு நடத்துவோம் என்றும், பி.ஜே.பி. பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் நலன்களுக்காக பி.ஜே.பி. உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஒருமாத காலமாகவே பி.ஜே.பி - தெலுங்குதேசம் கட்சிகளுக்கு இடையே நல்லுறவு இல்லாத சூழல் நிலவி வருகிறது. எனினும், சந்திரபாபு நாயுடு இந்த முறை எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளிப்போட்டுள்ளார். 

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை, சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்குதேசம் கட்சியின் செல்வாக்கை நிருபிக்க வேண்டும் என்பதில் நாயுடு மிகவும் உறுதியாக உள்ளார். அதன் முன்னோட்டமாக, ஞாயிற்றுக்கிழமை எம்.பி.-க்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அவர் எந்த முடிவும் எடுக்காவிட்டாலும், அடுத்த சில மாதங்களில் பி.ஜே.பி- கூட்டணியை விட்டு வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக சந்திரபாபு நாயுடு திகழ்வார் என்றே கூறப்படுகிறது. சிவசேனா வெளியேறிவிட்ட நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எஞ்சிய கட்சிகளை பி.ஜே.பி. தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது அந்தக் கட்சிகளை உதாசீனப்படுத்துவதன் மூலம் தனித்துப் போட்டியிடுமா என்பதை அக்கட்சியின் செயல்பாடுகளை முடிவு செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் இப்போது கணிப்பு வெளியிடத் தொடங்கியுள்ளனர்.