Published:Updated:

பிரதமர் மோடிக்கு நெருங்கும் தலைவலி...தெலுங்குதேசம் வரிசையில் அடுத்த கட்சி!

பிரதமர் மோடிக்கு நெருங்கும் தலைவலி...தெலுங்குதேசம் வரிசையில் அடுத்த கட்சி!
பிரதமர் மோடிக்கு நெருங்கும் தலைவலி...தெலுங்குதேசம் வரிசையில் அடுத்த கட்சி!

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில், 2018 தொடக்கமே பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பி.ஜே.பி.-யின் முக்கியக் கூட்டணியான சிவசேனா, கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள அம்மாநில சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பி.ஜே.பி-யுடன் சற்றே மனக்கசப்பைக் கொண்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்காதது பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இப்போதைக்கு வெளியேறப்போவதில்லை என்று சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் முன் வைப்பது என்றும், அதற்கு பி.ஜே.பி. செவிமடுக்காமல் போனால், அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெலுங்குதேசம் முடிவெடுத்துள்ளது. அநேகமாக, அடுத்தாண்டு நாடாளுமன்ற, ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன், கூட்டணியிலிருந்து வெளியேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் நீண்டநெடுங்கால கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் மத்திய அரசின் மீது அதிருப்தியுடன் இருப்பதாகவே அறியப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளை பி.ஜே.பி. மதிப்பதில்லை என்று சிரோன்மணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் முக்கிய தாரக மந்திரமான, "அனைவரின் வளர்ச்சியும், ஒத்துழைப்பும் அவசியம்" என்பது கூட்டணிக் கட்சிகளை நடத்துவதிலும் தொடர வேண்டும் என்று அகாலிதளம் குறைகூறியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் நியமனங்களில் அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் அகாலிதளம் தெரிவித்துள்ளது. 

அகாலிதளம் போன்று, கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சியான ஆர்.எல்.எஸ்.பி.-யின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹாவும் பி.ஜே.பி. மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பி.ஜே.பி. கூட்டணி வைத்ததால், அவர் கோபமடைந்துள்ளார். 

வடகிழக்கு மாநிலத்தைப் பொறுத்தவரை, நாகாலாந்தில் 15 ஆண்டுகளாக பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருந்த நாகா மக்கள் முன்னணி, தேர்தல் தொகுதிப்பங்கீடு பிரச்னையில், கூட்டணியை விட்டு விலகியது. தற்போது அங்கு புதிதாக உருவாகியுள்ள தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியான என்.டி.டி.பி-யுடன் பி.ஜே.பி கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. 

சிரோன்மணி அகாலிதள மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால், "பி.ஜே.பி-யுடனான கூட்டணியை அகாலி தளம் முறித்துக்கொள்ளும் என்ற தகவல் உண்மையற்றது. எங்களின் கூட்டணி பிரிக்க முடியாத ஒன்று. பி.ஜே.பி. எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று சொல்வதும் அர்த்தமற்றது. பி.ஜே.பி-யின் மிகவும் பழைமையான கூட்டணியாக அகாலிதளம் உள்ளது. எனவே, மற்ற கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டுச்சென்றாலும், நாங்கள் பி.ஜே.பி. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். 

அதேநேரத்தில், பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை இதரக் கூட்டணிக் கட்சிகளான தெலுங்குதேசம், சிவசேனா போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெளியேறும் என்று நாங்கள் கருதவில்லை. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்" என்றார்.

ஏற்கெனவே, நரேஷ் குஜ்ரால் கூறுகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை பி.ஜே.பி. அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய அளவில் பெரிய கட்சிகளான காங்கிரஸ் - பி.ஜே.பி. ஆகியன இப்போதே உத்திகளை வகுக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, அடுத்தடுத்து மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது, அதிருப்தி தெரிவிப்பது, பி.ஜே.பி-யின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித் ஷா-வும் உணர்ந்தால் சரி...!