Published:Updated:

"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்!"

"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள்  ஜெயிப்போம்!"
News
"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்!"

ம.ந.கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை!ஜோ.ஸ்டாலின், படங்கள்: சு.குமரேசன், அ.குரூஸ்தனம்

`மக்கள் நலக் கூட்டணி நீடிக்காது. ஓட்டுக் களைப் பிரிக்க, ஜெயலலிதா உருவாக்கிய அணி இது' என்றெல்லாம் கேலியாகப் பார்க்கப்பட்ட அணிதான், இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆக்டிவ் அணியாக மாறி உள்ளது. மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டை, மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு, பாண்டிச்சேரியில் நான்கு தலைவர்களும் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாகத் தொடங்கிவிட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு, மறுமலர்ச்சி தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் நால்வரையும் ஒன்றாகச் சந்தித்தோம்.

"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள்  ஜெயிப்போம்!"

``கண்ணாடிப் பாத்திரத்தைப்போல இந்தக் கூட்டணியை நாங்கள் பாதுகாத்துக்கொண்டு செல்கிறோம்.இதை உடைத்துவிட வேண்டும் என நினைப்பவர்கள், நேர்மறையான எங்கள் செயல்பாடுகளிலும் எதிர்மறையைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்கின்றனர். அதனால் நீங்கள் உங்கள் கேள்விகளை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; நாங்களும் கவனமாகப் பதில் சொல்கிறோம்'' என்ற கோரிக்கையோடு பேட்டியை ஆரம்பித்தனர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.

``இன்றைய தேதியில் மக்கள் நலக் கூட்டணி, தமிழக அரசியலில் ‘சென்டர் ஆஃப் தி அட்ராக்‌ஷன்' ஆக மாறி உள்ளது. ஆனால் இந்தக் கூட்டணி, தேர்தலுக்குச் சற்று முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. `மக்கள் நலன்' என்பது பெயரில் இருந்தாலும், தேர்தல் நலன்தான் ஒரே நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், இது கைவிடப்பட்ட கட்சிகளின் அணியாகவும், தனித்து வெற்றிபெற சக்தி இல்லாத கட்சிகளின் அணியாகவும் இருக்கிறது என்ற விமர்சனம் பற்றி?''

ஜி.ஆர்: இது சரியான விமர்சனம் அல்ல. நாங்கள் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி, முதன்முதலில் சந்தித்தபோது தேர்தலைப் பற்றிப் பேசவில்லை. அப்போது நாங்கள் விவாதித்தது, மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைப் பற்றித்தான். இதற்கு இடையில், மது ஒழிப்புப் போராளி சசிபெருமாளின் மரணம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி, முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றிபெற்றது. அதன் பிறகு, ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி, ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது பிரமாண்ட வெற்றிபெற்றது. பிறகு, ஆகஸ்ட் 26-ம் தேதி, ஆந்திர வனப் பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழ்த் தொழிலாளர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் பட்டினிப் போராட்டம் நடத்தினோம். இப்படி மக்கள் பிரச்னைகளில் ஒன்றுபட்டு செயல்பட்ட நாங்கள், வரும் தேர்தலையும் ஒன்றாகவே எதிர்கொள்ளலாம் என்று அதன் பிறகுதான் முடிவெடுத்தோம்.

தமிழக அரசியல் வரலாற்றில், தேர்தலுக்காக சில கட்சிகள் கூடி, தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு தேர்தலைச் சந்திப்பதுதான் வழக்கம். ஆனால், தேர்தலைப் பற்றி யோசிக்காமல், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து போராட்டங்களைத் தொடங்கி, பிறகு குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, தேர்தல் நெருங்கிய நேரத்தில் அந்த மக்கள் நலக் கூட்டு இயக்கத்தைத் தேர்தல் கூட்டணியாக மாற்றினோம். அதன் பிறகுதான் அதை தாயகத்தில் அறிவித்தோம்.

``மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களில், தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவது யார், யார்?''

திருமா: நான் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை.

வைகோ: நான் போட்டியிடுவது குறித்து ம.தி.மு.க-வின் ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும்.

ஜி.ஆர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, மாநிலச் செயலாளராக இருப்பவர்கள் கட்சிப் பணிகளைப் பிரதானமாக மேற்கொள்ளவேண்டி இருப்பதால், தேர்தலில் பங்கெடுப்பது இல்லை.

முத்தரசன்:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அதை முடிவுசெய்யும்.

``தேர்தல் பிரசாரத்தையே நீங்கள் தொடங்கி விட்டாலும்கூட, இன்னும் உங்கள் அணி பற்றிய சர்ச்சைகள் வலுவாக இருக்கின்றனவே? `வைகோவும் திருமாவளவனும் இந்த அணியில் நீடிக்க மாட்டார்கள்' என்ற கருத்து, மீண்டும் மீண்டும் வலுவாகப் பரவுவதன் காரணம் என்ன?''


திருமா: வேண்டாதவர்கள் பரப்புகிற அவதூறு இது. கூட்டணி அமைந்ததைக் கண்டு அச்சப்படு பவர்கள் பரப்பும் பொய். இந்த அணியைச் சீர்குலைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, கடந்த ஆறு மாத காலமாக இதைப் பரப்பிக்கொண்டிருக் கின்றனர். எங்கள் அணியில் இருந்து ஜவாஹிருல்லா மட்டும்தான் பிரிந்து சென்றார். அவரும், தேர்தல் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லவில்லை; மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றார்.

வைகோ: இந்த நச்சுத்தன்மை வாய்ந்த வதந்தி களுக்குப் பின்னால், தி.மு.க-அதி.மு.க இரண்டு கட்சிளும் இருக்கின்றன. எங்கள் கூட்டணி, தேர்தலிலும் தேர்தலுக்குப் பிறகும் உறுதியாகத் தொடரும். நானும் திருமாவளவனும் இடதுசாரி தலைவர்களும் மிகுந்த புரிதலோடு ஒன்றாக இருக்கிறோம்.

திருமா: வேறு வழி இல்லாமல் நாங்கள் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள். நாங்கள், வேறு வழி இல்லாமல் இந்தக் கூட்டணியை உருவாக்க வில்லை; வேறு வழியை உருவாக்குவதற்காக இந்த அணியை உருவாக்கியிருக்கிறோம்.

``இந்த அணி, நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அ.தி.மு.க-வின் வெற்றிக்குத்தான் உதவும். தி.மு.க-வின் ஓட்டுக்களைப் பிரித்து, அதற்காக வைகோ உருவாக்கியுள்ள அணிதான் மக்கள் நலக் கூட்டணி என்ற குற்றச்சாட்டு?''

வைகோ: தி.மு.க - அ.தி.மு.க இரண்டுமே ஊழல் கட்சிகள். இந்த அணியால் அதிகம் கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., இந்த நச்சுப் பிரசாரத்தைத் திட்டமிட்டுப் பரப்புகிறது. சில ஊடகங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், சில பத்திரிகை களில் இந்த அவதூறுப் பிரசாரம் தொடர்கிறது. ஆனால், அதே தி.மு.க., சமீப காலங்களில் நாங்கள் எதிர்த்துப் போராடிய அளவுக்கு அ.தி.மு.க-வை எதிர்த்துப் போராடவில்லை.

சசிபெருமாள் மரணத்தின்போது, `ஜெயலலிதா ஒரு கொலைகார ஆட்சி நடத்துகிறார்' என்று நாங்கள் சொன்னோம். சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, `முடங்கிக் கிடக்கிற இந்த அரசாங்கத்தை நடத்தும் தார்மீக உரிமையை ஜெயலலிதா இழந்துவிட்டார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று நாங்கள்தான் சொன்னோம். இவை எல்லாம், அ.தி.மு.க-வுக்கு ஆதரவான செயல்பாடுகளா?

ஜி.ஆர்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு வழங்கிய தண்டனை குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, `எனக்கு கருத்து எதுவும் இல்லை’ எனச் சொன்னார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும், ‘ஜெயலலிதா உடனடி யாகப் பதவி விலக வேண்டும்’ எனத் தெரிவித்தோம்.

இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சமூகக் கொடுமைகளை எதிர்ப்பதிலும் ஒழிப்பதிலும் இவர்கள் முன்வருவது இல்லை. இதை உணர்ந்துதான் இந்த மாற்று அணியை உருவாக்கியுள்ளோம்.

முத்தரசன்: வைகோதான் இந்தக் கூட்டணிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்ற கருத்தை, தி.மு.க திட்டமிட்டுப் பரப்பிவருகிறது. அது பொய். நாங்கள் கொள்கையின் அடிப்படையில்; செயல்பாடுகளின் அடிப்படையில் இணைந்திருக் கிறோம். எங்களுக்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்று இருக்கிறது. எங்களைப் பொறுத் தவரை, தி.மு.க-அ.தி.மு.க கட்சிகளின் முகங்கள் தான் வேறு வேறு; குணம் ஒன்றுதான்.

திருமா: இந்த அணி, தி.மு.க ஓட்டுக்களைப் பிரிக்கும் என்பதும் தவறான பார்வை. உதாரண மாக, ம.தி.மு.க என்பது, தி.மு.க எதிர்ப்பிலேயே வளர்ந்த கட்சி. இந்த அணிக்கு அடிப்படையாக இருக்கும் ஓட்டுக்கள் எல்லாம், தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்களே. தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்கள் எல்லாம் எங்கு போகும்? அ.தி.மு.க-வுக்குப் போகும். தற்போது வைகோ தனியாக இருப்பதால், அந்த ஓட்டுக்கள் ம.தி.மு.க-வுக்கு விழப்போகின்றன. இதில் நஷ்டம் அ.தி.மு.க-வுக்குத்தான்.

அதேபோல தலித் ஓட்டு வங்கி என்பது, பெரும் அளவில் அ.தி.மு.க வாக்கு வாங்கி என்பது ஊர் அறிந்த செய்தி. எம்.ஜி.ஆர் மேல் உள்ள அபிமானத்தால், தலித்துகள் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடுவார்கள். தற்போது அதை விடுதலைச் சிறுத்தைகள் பிரிக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது, ஒருகாலத்தில் எம்.ஜி.ஆருக்குப் பெரிய பக்கபலமாக இருந்த கட்சி. அதன் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில்தான், எம்.ஜி.ஆர் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, கருணாநிதி மீது ஊழல் புகார் கொடுத்தார். தற்போது அந்த கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க-வுக்குப் பக்கபலமாக இருந்த வாக்குகள் அவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, நியாயமாகப் பார்த்தால், தி.மு.க-வை வெற்றிபெற வைப்பதற்காக உருவான அணி என எங்களை அ.தி.மு.க-தான் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால், எங்கள் சீரான பயணத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற் காக எதையோ அவதூறாகச் சொல்கின்றனர்.

``மதுரை மாநாட்டில், நீங்கள், `கண்ணாடிவிரியனும் வேண்டாம்; கட்டுவிரியனும் வேண்டாம்' எனப் பேசிவிட்டு, அதற்கு மறுநாள் `கலைஞரையும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு அப்படிப் பேசவில்லை' என அவ்வளவு பணிவாக ஓர் அறிக்கை விடவேண்டிய அவசியம் என்ன?''

``இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்'' என்று குறுக்கிட்ட வைகோ, “திருமாவளவன் அன்று மாநாட்டில் பேசியதில் எந்தத் தவறும் கிடையாது. ஒரு கருத்தை வலியுறுத்த உவமையும் ஒப்புமையும் சொல்வது வழக்கம். 1998-ம் ஆண்டு, அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றது. அந்த அணியில் பா.ஜ.க-வும் வந்து சேர்ந்தபோது, `பண்டாரம்... பரதேசிகள்... நச்சுப்பாம்புகள் தமிழகத்தில் ஊடுருவத் துடிக்கின்றனர். இவர்களை அடித்துத் துரத்த வேண்டும்' என அறிக்கைவிட்டார் கருணாநிதி. அதற்கு மறுநாள் நாகப்பாம்பு சீறுவதுபோல் பா.ஜ.க-வையும் எங்களையும் சித்தரித்து, எல்லா பத்திரிகைகளுக்கும் முழுப் பக்க விளம்பரத்தை தி.மு.க தலைமைக் கழகம் கொடுத்தது. அப்படியென்றால், அதில், நாகப்பாம்பு வாஜ்பாய்... நச்சுப்பாம்பு அத்வானியா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள்  ஜெயிப்போம்!"

திருமாவளவன், அப்படிப் பேசியதும் அவரை வார்த்தைகளால் இழிவுபடுத்தி, தி.மு.க தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டன. `உங்களை வீட்டுக்குள்விட்டது தப்பு. உங்களை சரிசமமாக உட்காரவைத்தது தப்பு' என விஷத்தைக் கக்கினர். அப்படி சாதிய மேலாண்மைத் திமிரைக் காட்டுவதுபோல், பலர் விமர்சனம் செய்யத் தொடங்கிய நேரத்தில், பிரச்னை திசைதிரும்பி, மோதலுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, `நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை' என திருமாவளவன் நாகரிகத்தோடு விளக்கம் அளித்தார். அது, அச்சம் அல்ல; பண்பாடு.''

``தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க கூட்டணி அமையப் போவதாக வரும் தகவல்கள் பற்றி?''

வைகோ:
`எல்லோரும் உடன் வரலாம்' எனச் சொல்லிவிட்டார் அண்ணன் கருணாநிதி. அதனால், நீங்கள் குறிப்பிடும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை எனக் கூறிவிட முடியாது. கூடவே காங்கிரஸையும் உடன்  சேர்த்துக்கொள்ளக் கூடும். நாங்கள் `எங்கள் அணிக்கு வாருங்கள்' என விஜயகாந்த்தை அழைத்தோம். வந்தால் மகிழ்ச்சி. இனி முடிவெடுக்கவேண்டியது அவர்கள்தான்.

``வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள பா.ம.க-வும், தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்கிறது. அவர்களுடன் நீங்களோ, உங்களுடன் அவர்களோ இணைய வாய்ப்பு உள்ளதா?''

முத்தரசன்: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்கும் காலத்திலேயே நாங்கள் யாருடன் எல்லாம் கூட்டணி வைக்க மாட்டோம் எனப் பட்டியலிட்டோம். அதில் பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கிறது. அதனால், அவர்களுடன் கூட்டுக்கான எந்த வாய்ப்பும் இல்லை.

``கடந்த வாரம்கூட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அளித்துள்ளார். அவருடைய சாதியக் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றமாக இதை நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாதா?''

திருமா:
ராமதாஸ், ஒவ்வொரு காலச் சூழலுக்கு ஏற்ப, ஒரு வேடம் தரிப்பார். அந்த வேடங்கள் அனைத்தும் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே. உண்மையான சமூக அக்கறையோ, சமூக மாற்றம் பற்றிய சிந்தனைகளோ அவரிடத்தில் துளியளவும் கிடையாது. இந்தத் தேர்தலில்கூட, கடைசி நேரத்தில் அவர் தி.மு.க-வுடனோ, அ.தி.மு.க- வுடனோ கூட்டணி சேர நிறைய வாய்ப்புகள் உண்டு.

``மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை, அடிக்கடி எழுவதும் அடங்குவதுமாக இருக்கிறதே... அதில் என்னதான் நிலைப்பாடு?''

முத்தரசன் : முதலமைச்சர் வேட்பாளர் பற்றி நாங்கள் இப்போதைக்கு எதுவும் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் முன்னர் எழுதிய ஒரு கட்டுரையால் எழுந்த சர்ச்சை. அது பற்றி திருமாவளவன் தெளிவாக தன் அறிக்கையில் தெளிவுபடுத்தி விட்டாரே.

``உங்களுடைய வெற்றி வாய்ப்பு?''

`` `நாங்கள் ஒன்றாகச் சேர மாட்டோம்' என்றார்கள். நாங்கள் சேர்ந்தோம். `சேர்ந்தவர்கள், தொடர்ந்து இணைந்திருக்க மாட்டார்கள்' என்றார்கள். நாங்கள் இணைந்திருக்கிறோம். `இவர்கள் ஜெயிக்க மாட்டார்கள்' என்கிறார்கள். நாங்கள் ஜெயிக்கப்போகிறோம்; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைக்கப்போகிறோம். அதை, மக்கள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி சாத்தியப்படுத்தும்.''