Published:Updated:

மாலத்தீவு அவசர நிலை - ஆப்ரேஷன் காக்டஸை மீண்டும் கையில் எடுக்குமா இந்தியா?

மாலத்தீவு அவசர நிலை - ஆப்ரேஷன் காக்டஸை மீண்டும் கையில் எடுக்குமா இந்தியா?
மாலத்தீவு அவசர நிலை - ஆப்ரேஷன் காக்டஸை மீண்டும் கையில் எடுக்குமா இந்தியா?

மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் 300 கி.மீ பரப்பளவு கொண்ட தேசம். இன்று அரசியல் சூழல் மிகவும் மோசமாகி அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தவிக்கிறது மாலத்தீவு. இந்தப் பிரச்னைக்கு இந்தியாவை உதவிக்கு அழைக்கிறார் முன்னாள் அதிபர். இந்தியா உதவக்கூடாது. இந்தியா மாலத்தீவைக் கட்டுக்குள் கொண்டுவரப்பார்க்கிறது எனக் குற்றம் சாட்டுகிறது சீனா எனச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது மாலத்தீவு.

என்ன பிரச்னை?

மாலத்தீவில் முதல்முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நஷீத் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். யாமீன் அப்துல் கயூம் புதிய அதிபராகப் பதவியேற்றார். இதையடுத்து தனது அரசியல் போட்டி எனக் கருதுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் யாமீன் ஈடுபட்டார். அதில் முக்கியமானதுதான் நஷீத் கைது. தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார். ஆனால், உடல்நிலைக்கோளாறு காரணமாக இங்கிலாந்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னார் கொழும்புவிலிருந்து இயங்கி வந்தார் நஷீத்.

இந்நிலையில் நஷீத்தோடு கைது செய்யப்பட்ட 9 பேர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ-க்களை இவர்கள் கைதும், தகுதி நீக்கமும் யாமின் அரசு அரசியல் உள்நோக்கத்துடன் நிறைவேற்றியது. இவர்களை இதிலிருந்து விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

இந்த எம்.பி-க்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து யாமீன் அரசைக் கவிழ்த்துவிடக்கூடும் என்று எண்ணிய அதிபர் யாமீன் அப்துல் கயூம் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுத்தார். இருந்தும் பாராளுமன்றத்தில் நுழைந்த இரண்டு எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த யாமீன் நாட்டில் 15 நாட்கள் அவர்சநிலை அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டார். இரண்டு நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்திலிருந்து நீக்கினார். முக்கிய இடங்களில் ராணுவத்தைக் குவித்துள்ளனர்.

இந்தியா உதவ வேண்டும்?

மாலத்தீவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய அரசுதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் அதிபர் நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கைதிகளை இந்தியா விடுவிக்க வேண்டும். அங்கு அரசியல் சூழலை சீர்குலைக்கும் அரசியல்வாதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா, மாலத்தீவின் அரசியல் சூழலைத் தீவிரமாகக் கவனித்து வருகிறது. ஒருவேளை மாலத்தீவுக்கு உதவ வேண்டும் என்ற நிலை உருவானால் இந்தியாவுக்கு வெறும் 750 கி.மீ தொலைவுதான் ஒருமணி நேரத்தில் போர்க் கப்பல்களுடன் இந்தியாவால் மாலத்தீவுக்குள் நுழையமுடியும். ஆனால், இந்தியா உதவ உள்ளதா.. இல்லையா என்பது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

மறுக்கும் சீனா!

இந்திய ராணுவம் மாலத்தீவுப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கக் கூடாது. மாலத்தீவில் நடக்கும் உள்நாட்டு அரசியல் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். மற்ற நாடுகள் எதுவும் தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. யாமீனுக்கு சீனா தனது முழு ஆதரவையும் அளித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக மாலத்தீவு மாறிவருவதுதான். 

ஆப்ரேஷன் காக்டஸ்!

1988-ம் ஆண்டு இலங்கையில் இயங்கிவந்த இயக்கமான ப்ளாட் திடீரென 60 பேருடன் சென்று மாலத்தீவை முற்றுகையிட்டு தலைநகரைக் கைப்பற்றியது. அப்போதைய அதிபர் அப்துல் கயாம் இந்தியாவின் உதவியை நாடினார். ஆறே மணி நேரத்தில் மாலத்தீவில் ப்ளாட் அமைப்பை விரட்டியடித்து மாலத்தீவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இந்தியா. பின்னர் இதனை தலைமையேற்று நடத்தி வந்த ப்ளாட் அமைப்பைச்சேர்ந்த முகுந்தன் என்பவர் உளவு அமைப்பான ராவுக்கு உளவாளியாகச் செயல்பட்டதாக அவரது இயக்கத்தாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபோன்ற செயல்கள் அரங்கேறிய பிறகு இந்தியாவின் கட்டுப்பாட்டில் மீண்டும் மாலத்தீவு செல்வதை சீனா விரும்பவில்லை. 

3.96 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு ஆண்டுக்கு 14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். இதில் 3 லட்சம் பேர் சீனர்கள். சீனாவின் முக்கியச் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளதுதான் சீனாவின் பதற்றத்துக்கு காரணம். சிங்கப்பூர் அரசு மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதைக் கொஞ்ச காலத்துக்கு தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. 

என்ன செய்யப்போகிறது இந்தியா?

இந்தியாவின் ஆதரவை முன்னாள் அதிபரும், எதிர்கட்சிகளும் எதிர்பார்க்கின்றனர். ஆளும் கட்சிக்கு சீனா உதவுகிறது என மாறி மாறிச் செய்திகள் வருகின்றன. இந்த அரசியல் சூழலால் மாலத்தீவு அமைதியற்று உள்ளது. இது மாலத்தீவு பிரச்னையா.. இல்லை சீனா மறைமுகமாக மாலத்தீவை அடையும் உத்தியா என்பது விரைவில் தெரியவரும்.

இந்தியா நேரடியாக எந்தக் கருத்தையும் மாலத்தீவு பிரச்னை குறித்துத் தெரிவிக்கவில்லை. இந்தியா செயல்பாடுகளைக் கவனித்து வருகிறது. இந்தியா மாலத்தீவில் தடைகளை அறிவிக்குமே தவிர களமிறங்காது என்பதையே தகவல்கள் கூறுகின்றன.