Published:Updated:

பரபரக்கத் தொடங்கும் தமிழக அரசியல்..! களம்காணத் தயாராகும் ரஜினி, கமல்..!

பரபரக்கத் தொடங்கும் தமிழக அரசியல்..! களம்காணத் தயாராகும் ரஜினி, கமல்..!
பரபரக்கத் தொடங்கும் தமிழக அரசியல்..! களம்காணத் தயாராகும் ரஜினி, கமல்..!

மிழகத்தில் கடந்த ஓராண்டாகப் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தவிர, பெரிய அளவில் பரபரப்புக்குப் பஞ்சம் என்றே சொல்லலாம். இந்தச் சூழலில்தான் தமிழகத் திரைத்துறையில் உச்ச நடிகராக கொடிகட்டி வலம் வரும் ரஜினிகாந்த், அவரின் சமகால நடிகரான கமல்ஹாசன் இருவரும் பரஸ்பரம் தங்களில் அரசியல் பிரவேச அறிவிப்புகளை உறுதியாக வெளியிட்டுள்ளனர்.

"தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை" என்ற முத்தாய்ப்புடன் ரஜினியும், "நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டேன்" என்ற அதிரடியுடன் கமலும் அரசியல் அஸ்திரங்களை அவ்வப்போது வீசியெறிந்துகொண்டிருக்கிறார்கள்.

ரஜினிக்கு முன்னரே அரசியல் கட்சியைத் தொடங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ, கமல்ஹாசன், வரும் 21-ம் தேதி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளன்று, அவரின் சமாதி அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் இருந்து தன் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார் . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் அவர்.

ஆனால், ரஜினிகாந்தோ இன்னமும் கட்சியின் பெயர், எப்போது தொடங்கப்போகிறார் என்பது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், "தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே "போருக்குத் தயாராகுங்கள்; இந்தப் போரில் அனைவரின் பங்கும் அவசியம்" என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினி. அவர் தெரிவிக்கும் போர், தமிழக சட்டசபைத் தேர்தல்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து 234 தொகுதிகளையும் பற்றிக் குறிப்பிட்ட ரஜினி, 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றியோ அல்லது தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் "கமல்ஹாசனுடன் இணைந்து, செயல்படுவீர்களா?" என்று கேட்டதற்கு, "காலம்தான் பதில் சொல்லும்" என்றார்.

தான் மேற்கொள்ளவிருப்பது ஆன்மிக அரசியல் என்று தெரிவித்திருந்த ரஜினி, தற்போது, "தமிழ்நாட்டு சிஸ்டத்தை முதலில் சரி செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் கூற்றிலிருந்து அவரின் இலக்கு தமிழ்நாடுதான், 'தேசிய அரசியல் அல்ல' என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ரஜினியின் அரசியல் பிரவேசப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அல்லது எந்தக் கட்சி உள்ளது? என்று நாம் கருதத் தேவையில்லை. ஏனென்றால், அவர் நடித்த ஒரு படத்தில் சொல்லும் வசனத்தைப் போன்று, "ஆண்டவன் சொல்றான்; இந்த அருணாச்சலம் செய்றான்" என்று எடுத்துக்கொள்ளலாம். ரஜினியின் ஆன்மிக அரசியலைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அவர். தவிர, அவ்வப்போது செய்தியாளர்களையும் சந்தித்துப் பேட்டியளித்து வருகிறார். 

நடிகர் கமல்ஹாசனும், "ரஜினியுடன் இணைந்து செயல்படுவது பற்றி காலம்தான் பதில்சொல்ல வேண்டும்" என்கிறார். வழக்கம்போல் ட்விட்டரில் தன் கருத்துகளைப் பதிவிட்டு வரும் கமல்ஹாசன், ராமேஸ்வரத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் முன் கட்சியின் பெயர், கொள்கைகள், கொடி உள்ளிட்டவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி, கமல்... இன்னும் விஷால், விஜய் என திரைத்துறையில் வெற்றிபெற்ற நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஜனநாயகத்தில் எல்லோரும் அரசியலுக்கு வரலாம். அதை யாரும் தடுக்க முடியாது... ஆனால், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? அதிலும் தமிழ்நாட்டு மக்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடு, தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாடு என்ற முடிவை எடுக்கக்கூடியவர்கள். இதற்கு ஏற்கெனவே முன் உதாரணமும் உள்ளது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்று பிறகு வலுப்பெற முடியாமல்  போனதற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட எத்தனையோ பேரைக் குறிப்பிட முடியும்... 

எப்படியிருந்தாலும், அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை எட்டும் என்பது மட்டும் உறுதி...!