Published:Updated:

மாயமான ‘நீட்’ தேர்வு சட்ட மசோதா: அரசியல் கட்சிகளின் அலட்சியமா?

மாயமான ‘நீட்’ தேர்வு சட்ட மசோதா: அரசியல் கட்சிகளின் அலட்சியமா?
மாயமான ‘நீட்’ தேர்வு சட்ட மசோதா: அரசியல் கட்சிகளின் அலட்சியமா?

மிழகம் உள்பட இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு, நீட் எனப்படும் தேசிய அளவில் தகுதிகாண் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்தத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

தமிழகத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்று, மேல்நிலைத் தேர்வில் (பிளஸ்-டூ) மாணவ-மாணவிகள் பெற்ற தேர்வின் அடிப்படையிலேயே கட்-ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனால், தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்றாலே எம்.பி.பி.எஸ். சீட் உறுதி என்ற நிலை, கடந்தாண்டு முதல் தமிழகத்தில் காலாவதி ஆயிற்று.

'

உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தன் மருத்துவர் கனவு பலிக்கவில்லை' என்ற விரக்தியில், அரியலூரைச் சேர்ந்த அனிதா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழகத்தில் அனிதா மரணம் ஏற்படுத்திய அதிர்வலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்திவருவதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட அவசர மசோதா, இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையிலேயே உள்ளது. ஆளும் அரசுதான், நீட் தேர்வு பிரச்னையில் மெத்தனம் காட்டுகிறது என்றால், தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும், எதிர்காலத்தில் (இந்தாண்டு உள்பட) நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கோரி பெரிய அளவில் எந்தவித போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் தனக்கொரு கவலையில்லை" என்னும் ரீதியில் மத்திய பி.ஜே.பி. அரசு, தமிழகத்தை ஒருபொருட்டாக மதிக்காமல், தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தெளிவுபட அறிவித்துவிட்டது. இதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ, தமிழக கிராமப்புற மக்கள்தானே. 

"இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு வரும் மே 6-ம் தேதி நடைபெறும்' என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. 

நீட் நுழைவுத் தேர்வுக்கு மத்திய அரசு தெரிவிக்கும் விளக்கம், தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்தத் தேர்வுமுறை என்பதாகும்.

ஆனால், மத்திய இடைநிலைக் கல்விக் கழகமான சி.பி.எஸ்.இ. தரத்தில் நீட் தேர்வின் கேள்வித்தாள் இடம்பெற்றிருப்பதால், மாநிலப் பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் கடும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.  

இதுபோன்ற சூழலில் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வுக்கு  இணையதளம் மூலம் ஆன்லைனில் மாணவ-மாணவிகள், மார்ச் 9-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம். பொதுப் பிரிவினர், ஓ.பி.சி-யினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1400-ம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.750-ம் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும் கருத்தில்கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நடத்தப்படும் என்று தெரிகிறது. 

கடந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளின் உடைகளைக் கிழித்தும், முழுக்கை அணியக் கூடாது என்றும் கூறி, பல கட்டுப்பாடுகளை தேர்வுகூட அலுவலர்கள் விதித்தனர். இதனால், மாணவ-மாணவிகளிடையே கடும் அதிப்தி ஏற்பட்டது. தவிர, கேள்வித்தாள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்ததாகவும், வட மாநிலங்களில் கேள்வித்தாள் வேறு விதமாக அச்சிடப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்தாண்டு போக்குவது குறித்து, மத்திய அரசிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ-யிடமிருந்தோ இதுவரை எந்தவோர் அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழக அரசியல் கட்சிகளும், மத்திய அரசிடம் மண்டியிட்டுச் செயல்படும் மாநில அரசும் வரும் மே மாதம் நடத்தப்படவுள்ள நீட் தொடர்பாக எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்கின்றனர் கல்வியாளர்கள். இதற்கிடையே, தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதை தடுக்க முடியாது என்றும், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் அனைவரும் நீட் தேர்வு எழுதியே தீர வேண்டும் என்றும் மாநிலப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை சவுந்தர ராஜன் கருத்து

இதுபற்றி தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்" என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. பின்தங்கிய மாவட்டங்களில் இருந்துகூட அதிகமான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.

தற்போது இந்தாண்டு நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி மாணவர்களை திசைதிருப்பி, அவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். மாணவர்களுக்கு உதவும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பயிற்சி மையங்களை தொடங்கி, முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க, குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்க வழிவகை செய்து, தமிழக மருத்துவ மாணவர்களின் கனவைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகளை முற்றிலும் கெடுத்து, கிராமங்களிலிருந்து, குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களிலிருந்து மருத்துவர்கள் யாரும் உருவாகிவிடக் கூடாது என்ற ஒரே உள்நோக்கத்துடனும், சதி எண்ணத்துடனும், மத்திய பி.ஜே.பி. அரசால் "நீட்" தேர்வு திணிக்கப்பட்டு, தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டாலும் இன்றுவரை அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துக்கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைத்து, மாநில உரிமைகளை அடியோடு பறித்துக்கொள்ள வியூகம் வகுத்து, மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. எதிர்கால தலைமுறையினரின் மருத்துவக்கல்வி விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் நடத்தும் இதுபோன்ற கபட நாடகம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தி.மு.க.-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, நீட் தேர்வு தொடர்பாக ஒருபடி மேலேபோய், "தி.மு.க ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெறமுடியாத நிலையில், நாங்கள் மாணவர்களைக் காப்பியடிக்க விட்டிருப்போம்" என்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

"எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்" 

நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, பதவி விலக வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் ஓர் அறிக்கையில், "நீட் தேர்வு விஷயத்தில், தமிழக அரசு மக்களையும், மாணவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோருவதற்கான சட்ட மசோதாக்கள், கடந்த ஆண்டு இதேகாலத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படும் என்று தமிழக அரசு ஓராண்டாகக் கூறிவந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் தோல்வியடைந்து விட்டதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தவிர, நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து சட்டபூர்வமாக நீதி பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ, தமிழகத்தில் மாணவர்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை, மத்திய அரசுடன் இணக்கம் ஒன்றே போதுமானது, அதற்காக ஒட்டுமொத்த  தமிழகத்தையும், தமிழக மக்களையும் பலிகடா ஆக்குவது போன்றே இப்போதுள்ள ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக எந்தக் குரலையும் எழுப்பாமல், தமிழக அரசு மௌனம் காப்பது, இந்த அரசை மத்திய பி.ஜே.பி. அரசு இயக்குகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்று உள்ளது.

"முதலில் ஒன்றை அமல்படுத்துங்கள்; பின்னர் அதுவே பழகி விடும்" என்ற கூற்றுக்கு ஏற்ப, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்களும் இப்போதே தயாராகிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்...!