Published:Updated:

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் செக்; நீட் தேர்வு எழுத வேண்டுமாம்!

எம்.குமரேசன்
வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் செக்; நீட் தேர்வு எழுத வேண்டுமாம்!
வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் செக்; நீட் தேர்வு எழுத வேண்டுமாம்!

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் இனிமேல் `நீட் ' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் புதிய விதியை ஏற்படுத்த உள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுத வேண்டும். 2016- ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு வழியாகவே நடைபெறுகிறது. அதேவேளையில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் Foreign Medical Graduates Examination (FMGE) தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவராகப் பணி புரிய முடியும். இதில், தேர்ச்சி பெறாதவர்கள் போலி டாக்டர்கள்போல செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் இனிமேல் நீட் தேர்வு எழுத வேண்டும் என்கிற விதி உருவாக்கப்பட உள்ளது. 

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 7,000 மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கின்றனர். சீனா, ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ்  நாட்டு பல்கலைக்கழகங்களில் அதிகம் பேர் சேர்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களில் 13 முதல் 26 சதவிகிதத்தினரே Foreign Medical Graduates Examination - தேர்வில் பாஸாகியுள்ளனர். அதேவேளையில், இந்தத் தேர்வு கடினமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், நீட் தேர்வு எழுதி பாஸான பின்னர், தடையில்லா சான்றிதழ் பெற்றால் மட்டுமே இனிமேல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் டாக்டர் படிப்பில் சேர முடியும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ரூ.60 லட்சம் வரை செலவாகிறது.