Published:Updated:

நடிகையைக் கடத்திய கைதிக்கு ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் கிரேவி! - சிறையில் நடந்த தடபுடல் விருந்து

நடிகையைக் கடத்திய கைதிக்கு ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் கிரேவி! - சிறையில் நடந்த தடபுடல் விருந்து
நடிகையைக் கடத்திய கைதிக்கு ஃபிஷ் ப்ரை, ஃபிஷ் கிரேவி! - சிறையில் நடந்த தடபுடல் விருந்து

நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு ஃபிஷ் ஃப்ரை பரிமாறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைப் பரபரப்புக்கு உள்ளாக்கிய நடிகை கடத்தல் சம்பவம், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். 300 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பல்சர் சுனில், திருச்சூரின் வையூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறைச்சாலையில் பல்சர் சுனிலுக்கு சிறப்புக் கவனிப்பு அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இதே சிறையில் கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்பட்ட மற்றொரு கைதி, அங்குள்ள கிச்சன் பணியில் உள்ளார். இருவரின் வழக்கறிஞர்களும் ஏற்கெனவே சந்தித்துப் பேசிய நிலையில், பல்சர் சுனிலுக்கு சிறைக்கு உள்ளேயே மீன் குழம்பும் மீன் பொறியலும் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. 

சிறையில் உள்ள கைதிகளுக்குத் தனியாகவும் அங்குள்ள அதிகாரிகளுக்குத் தனியாகவும் சமையல் செய்யப்படுகிறது. பல்சர் சுனிலின் அறைக்கு அருகிலேயே சமையலறை இருப்பதால் அங்கிருந்து அதிகாரிகளுக்கான உணவுகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று ஃபிஷ் ப்ரை மற்றும் ஃபிஷ் கிரேவி ஆகியவற்றை பல்சர் சுனில் அறையில் கம்பிகளுக்கு ஊடாகக் கொடுக்கும்போது கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, கிச்சனில் பணியாற்றிய அந்தக் கைதியை மாற்றுப் பணிக்கு மாற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறைச்சாலையின் உள்ளேயே கைதி ஒருவருக்கு சிறப்பு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.