Published:Updated:

நெல்லை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை!

பி.ஆண்டனிராஜ்
நெல்லை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை!
நெல்லை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை!

நெல்லையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அவரது சகோதரர் வீட்டிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.முருகன். அ.தி.மு.க பிரமுகரான இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வந்தார். அத்துடன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடமும் நெருக்கமாக இருந்தார். அரசு ஒப்பந்ததாரரான இவர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறையில் நடக்கும் ஒப்பந்தங்களில் கோலோச்சி வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வந்தபோது எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்து வந்த அவர், தற்போதும் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். தற்போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க செயலாளராக நீடித்த போதிலும், கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை காட்டாமலேயே இருந்து வந்தார். 

தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்தங்களை எடுத்துப் பணியாற்றி வரும் இவரது வீடு நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ளது. அங்கு இன்று மாலை வருமானவரிச் சோதனை நடந்து வருகிறது. நெல்லை மண்டல வருமானவரித்துறை துணை ஆணையரான மைக்கேல் ஜெரால்ட் தலைமையில் நடக்கும் இந்த சோதனை ஆர்.எஸ்.முருகனின் வீடு மற்றும் உறவினர்களின் வீடு உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும் வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாகவும் ஏற்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.  

அ.தி.மு.க பிரமுகரின் வீட்டில் அதிரடியாக வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வரக்கூடிய சம்பவம் அறிந்து உள்ளூர் பிரமுகர்கள் அவரது வீட்டின் முன்பாகக் கூடினார்கள். ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் வீட்டின் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.