பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாட்ஸ்அப் அரசியல்!

வாட்ஸ்அப் அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்ஸ்அப் அரசியல்!

ஜி.கார்ல் மேக்ஸ்

செய்திக்கும் வதந்திக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. வதந்தியை உருவாக்குபவர்களுக்கு எப்போதும் இருக்கும் கீழ்த்தரமான கிளுகிளுப்பு மனநிலையைத் தாண்டி, இப்போது அரசியல் நிலைப்பாடும் அதிகம் இருக்கிறது என்பதுதான் இதில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம்.

பழநியில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி,

வாட்ஸ்அப் அரசியல்!

அதில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கிறார்கள். அந்த வழியாக வந்த வைகோ தனது வண்டியை நிறுத்தி, ஆம்புலன்ஸை வரவழைத்து உதவினார் என்பது செய்தி. ஆனால், `வைகோ வந்த வாகனத்தில் மோதிதான் அவர்கள் உயிர் இழந்தார்கள்' எனப் படத்துடன் ஒரு செய்தி வதந்தியாகப் பரவுகிறது. இறந்து கிடப்பவர்களின் அருகில் துயரம் தோய்ந்த முகத்துடன் வைகோ நிற்கும் புகைப்படம், அந்த வதந்திக்கு ஒரு பெருமதியை வழங்குகிறது. பிறகு என்ன... அந்தப் புகைப்படத்தைப் பார்த்த வேகத்துக்கு அதை மிக வேகமாகப் பரப்புகிறார்கள் இணையவாசிகள். பரப்பியவர்களில் எல்லா அரசியல் சார்புடையவர்களும் இருக்கலாம். ஆனால், வைகோவைப் பிடிக்காதவர்கள் அதில் கூடுதல் ஆர்வம் காட்டியிருப்பார்கள் என்பது அது வேகமாகப் பரவியதற்கு ஒரு காரணம்.

இதைப் புரிந்துகொள்ள பெரிய சாதுர்யம் ஒன்றும் தேவை இல்லை. இணையத்தில் புழங்கும் பழக்கம் இருந்தாலே போதும். இந்த விவகாரத்தில் வதந்தி மீதான குறுகுறுப்பைத் தாண்டி, அதைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு என்பது மிகவும் ஆபத்தானது; தண்டனைக்கு உரியது.

இதில் மிகவும் ஆபாசமானது என்னவென்றால், தான் பகிர்ந்தது தவறான செய்தி எனத் தெரிந்தால், அதில் தமக்கு எதுவும் பொறுப்பு இல்லை என்பதுபோலவும், தானும் அதில் ஏமாற்றப்பட்டதுபோலவும் சிலர் நடந்துகொள்ள முயல்வதுதான். இது மிகவும் பொறுப்பற்ற மனநிலை. ஒரு செய்தியின் உருவாக்கத்தில் எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதற்கு நிகரான பொறுப்பு அதைப் பகிர்வதிலும் இருக்கிறது.

நம்மிடம் சுயக்கட்டுப்பாடு இல்லை; அதை உறுதி செய்து கொள்ளும் அளவுக்குப் பொறுமை இல்லை என்றால், அதைப் பகிராமல் இருப்பதுதான் அறம். ஏனெனில், தனி மனிதர்களுக்கு அது தரும் மன உளைச்சல் என்பது அளவில்லாதது. இதில், வதந்திக்கு உள்ளாகுபவர் புகழ்பெற்றவராக இருந்தால், திரைத் துறையினராகவோ இருந்து விட்டால், அது தவறான செய்தி எனத் தெரிந்தும்கூட அதைப் பகிர்ந்துகொண்டே இருப்பதும் அது குறித்து தொடர்ந்து விவாதிப்பதன் மூலம் அந்தச் செய்தியை நீண்டகாலத்துக்கு உயிருடனே வைத்திருப்பதும் நடக்கிறது.

வாட்ஸ்அப் அரசியல்!

இதற்கு சமீபத்திய உதாரணம், பால்வளத் துறை அமைச்சர் ரமணா, அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம். இதில் வதந்திக்கான அடிப்படை, மந்திரியுடன் ஒரு பெண் என்பதும், அவர் அழகாக இருக்கிறார் என்பதும்தான். வைகோவுக்கு அவரது சோகமான உடல்மொழி எதிரி என்றால், இங்கு ரமணாவுக்கு அந்தப் பெண்ணின் அழகே எதிரி ஆகிறது. ஆனால், அந்தப் பெண் ரமணாவின் மனைவி எனத் தெரிந்தாலும்கூட கிசுகிசுப்பை நிறுத்துவதற்கு யாருக்கும் மனம் ஒப்பவில்லை. நாம் எவ்வளவு ஆபாசமான சமூகமாக மாறியிருக்கிறோம் என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.

இந்த வன்முறையின் உச்சம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் செயலர் கன்னையா குமாரின் கைது நிகழ்வுகள். திருத்தப்பட்ட ஒரு வீடியோ, போதுமானதாக இருக்கிறது அவரது கைதுக்கு. அவர் `தேசத் துரோகி' எனத் தூற்றப்படுகிறார். அவர் என்ன பேசினார், அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை. எல்லோரும் துப்பும் இடத்தில் துப்பும் கும்பல் மனநிலை வந்துவிடுகிறது. அந்த மோசடியை உருவாக்கி உலவவிட்டவர்கள் மறைவில் இருந்து மெளனமாகப் புன்னகைக்கிறார்கள். மக்களின் பொதுப்புத்தி மீதியைப் பார்த்துக்கொள்கிறது.

உற்று நோக்கினால், கண நேரக் கிளுகிளுப்புக்காக நாம் நமது நேர்மையைப் பணயம்வைக்கிறோம் என்பதும், நிகழும் குற்றத்தில் நம் பங்கும் இருக்கிறது என்பதும் புரியும். யார் மீதும் வதந்தியை உருவாக்குவதோ அதைப் பரப்புவதோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் மாற்று அரசியல் பேசுபவர்களாக, குற்றம் புரிந்தவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, புகழ்பெற்றவர்களாக, யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு எதிரான வதந்தி என்பது, அந்தச் சீரழிவை நியாயப்படுத்திவிடாது. மாறாக, தவறு இழைத்தவர்களை விமர்சிக்கும் தார்மீகத் தகுதியை நாம் இழக்கிறோம் என்பதுதான் கவனத்தில்கொள்ளவேண்டியது.

இணையவெளியில் வீசி எறியப்படும் வதந்தியும் அவதூறும் காலத்துக்கும் மக்காமல் சுற்றிவரக்கூடியவை என்பது பலருக்கும் உறைப்பதே இல்லை. பரப்பப்படும் வதந்தியால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தக் காலத்திலும் நிவாரணம் இல்லை. ஏனெனில், வதந்திக்குத் தரும் முக்கியத்துவத்தை, `அது அல்ல' எனச் சொல்லும் செய்திக்கு நாம் தருவதே இல்லை. வதந்தியின் வசீகரமே அதுதான். அது நம் நினைவில் சென்று தங்கிவிடுகிறது. அது பொய் என்றாலும்கூட நாம் அந்த வந்தந்தியை நம்ப விரும்புகிறோம். ஏனெனில், உண்மைக்கு எந்த வசீகரமும் இல்லை. இணையத்தை கிளுகிளுப்பான பொய் என நினைக்கிறோம். ஆனால், அது அப்படி அல்ல. இணையத்தின் மேலோட்டமான அழகுக்குப் பின்னால் இருப்பது நமது முகத்தில் மோதும் உண்மைதான். அதை நேர்மையுடன்தான் கையாள வேண்டும்!