Published:Updated:

''திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கருக்கு அருகில் ஜெயலலிதாவா!?'' - கொதிக்கும் முத்தரசன், ஜி.ரா, திருமா திருநாவுக்கரசர்

''திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கருக்கு அருகில் ஜெயலலிதாவா!?'' - கொதிக்கும் முத்தரசன், ஜி.ரா, திருமா திருநாவுக்கரசர்
''திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கருக்கு அருகில் ஜெயலலிதாவா!?'' - கொதிக்கும் முத்தரசன், ஜி.ரா, திருமா திருநாவுக்கரசர்

துவரை தமிழக அரசியலில் இப்படியான விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத் திறப்பு விழா அந்த அளவுக்குச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த 12 - ம் தேதி திறந்துவைத்தார். இந்தப் படத்திறப்பு நிகழ்வை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதுமட்டுமன்றி சமூக இயக்கங்கள் பலவும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளன. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் 'குற்றவாளியின் படத்தைத் திறந்துவைக்கலாமா?' என்று நேரிடையாகப் பேசியுள்ளனர். இது குறித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ''சொத்துக் குவிப்பு

வழக்கில், ஜெயலலிதாவைக் குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய நான்குபேரில் மூன்று பேர் தண்டனை பெற்று வருகின்றனர். இதில் முதல் குற்றவாளி என்று கூறப்பட்ட ஜெயலலிதா இன்று உயிரோடு இல்லை. அவர் இல்லை என்பதால், குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

குற்றவாளி என உச்சநீதிமன்றமே கூறியுள்ள நிலையில், அவருடைய படத்தைப் புகழ்மிக்க சட்டப்பேரவையில் திறந்துவைத்திருப்பது சரியான நடவடிக்கை இல்லை. குறிப்பாக மகாத்மா காந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் புகைப்படங்கள் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தலைவர்கள் அனைவரும் புகழ்மிக்க தலைவர்கள். அவர்கள் மீது எந்தப் புகாரும் இல்லை. அதனால் அந்தத் தலைவர்களின் புகைப்படங்களைத் திறக்க எந்த மாறுபட்ட கருத்தும் எப்போதும் எழவில்லை. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படியிருக்கும்போது அவருடைய படத்தை வைப்பது அவைக்கு நல்ல முன்னுதாரணம் அல்ல. ஜெயலலிதாவைக் 'குற்றவாளி' என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை'' என்றார். 

 இதுகுறித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ''சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் அவரும் தண்டனை அனுபவித்து வந்திருப்பார். அவர் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல. நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக் குற்றவாளி என்று அழைக்காமல் வேறு  எப்படி அழைப்பது? எனவே அப்படிப்பட்ட ஒருவரின் படத்தை திறந்துவைப்பது சரியான நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க-வின் கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஓ.பன்னீர்செல்வமோ ஜெயலலிதாவின் படத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளட்டும். சட்டமன்றத்தில் திறந்துவைத்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. அதுவும் அவசர அவசரமாக இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளனர். இதற்குக் காங்கிரஸ் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது'' என்றார்.

இதுகுறித்துப் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 

''ஜெயலலிதாவை அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்கள் கொண்டாடிவிட்டு போகட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட குற்றவாளி என்பதை யாரும் மறுக்க முடியாது.   

 முதலமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்பது அவர்மீதுள்ள குற்றச்சாட்டு. அந்தக் குற்றவழக்கில், 'ஜெயலலிதா குற்றவாளி' என நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சிறைக்குச் சென்றவர். பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அவரை அதிலிருந்து விடுவித்தார். இந்த நிலையில், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா

உள்ளிட்ட நான்குபேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்துவந்துள்ளது. அதில் அவரைத் தெளிவாகக் 'குற்றவாளி' என்று இரண்டுமுறை நீதிமன்றங்கள் கூறியுள்ளது. அப்படியிருக்கும்போது ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. தண்டனைக் கைதியான அவருடைய படத்தைத் திறந்துவைத்திருப்பது அவையை அவமதிக்கும் செயலாகும்'' என்றார். 

இதுகுறித்துப்பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,

''நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பின்படி ஜெயலலிதா அம்மையார் குற்றவாளிதான். ஆனால், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பின்படி அவர் குற்றவாளி அல்ல. அதாவது, முதல்வராக இருந்தபோதும், இறந்தபோதும் 'ஜெயலலிதா குற்றவாளி அல்ல' என்பதே ஆகும். எனவே, அது இப்போதைக்கு பொருத்தமில்லாத விவாதம் என்று கருதுகிறேன். உச்சநீதிமன்றம் அதனைத் தவிர்த்திருப்பதைப் போல நாமும் தவிர்ப்பதே நாகரிகம் என கருதுகிறேன்.''  என்றார்.