Published:Updated:

பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6

பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6
பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6
பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6

டராசனுக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டதால், போயஸ் கார்டனில் நடராசனுக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

போயஸ் கார்டனைச் சுற்றி நின்றிருந்த பூனைப் படை, 1989 சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காணாமல் போயிருந்தது. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு, பணம் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்த நேரத்தில்தான், 'அரசியலுக்கு முழுக்கு' என அறிவித்தார் ஜெயலலிதா. அப்போது பூனைப் படையும் பதுங்கியது. நடராசனின் ரீ என்ட்ரிக்குப் பிறகு, பூனைப் படையும் கார்டனுக்குள் புகுந்தது. அதற்கு முன்பு வரையில் பூனைப் படைக்குத் தளபதியாக இருந்த திவாகரன், போய் தினகரன் வந்தார்.

பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6

1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ் நொண்டி அடிக்க ஆரம்பித்தது. சசிகலா, சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் ஆகியோர்தான் 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில் பங்குதாரர்களாக இருந்தார்கள். பொருளாதார நெருக்கடியால், 1989-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி 'நமது எம்.ஜி.ஆர்' நிறுத்தப்பட்டது. ஆனால், சசிகலா குடும்பத்தினருக்கு நஷ்டம் இல்லை. அன்றைக்கு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசால் பாட புத்தகங்கள் அச்சடிப்பதற்கான ஆர்டர்கள் நமது எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால் பிசினஸில் நட்டம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள் சசிகலா குடும்பத்தினர்.

சசிகலா குடும்பத்தினரின் நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கும் அளவுக்கு சசிகலா குடும்பத்துடன் ஜெயலலிதா மீண்டும் நெருங்க ஆரம்பித்திருந்தார். 1989 ஜுன் மாதத்தில் சசிகலாவின் தாய் கிருஷ்ணவேணி உடல்நலக் குறைவால் தஞ்சாவூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஜெயலலிதா நேரில் போய் வந்தார். அதன்பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை போயஸ் கார்டன் மீண்டும் மன்னார்குடியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தகவல் தொழில்நுட்பம் வளராத 1980-களில் லேண்ட் லைன்தன் தகவல் தொடர்புக்கு முக்கிய சாதனமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட சீனிவாசன் என்பவர்தான் போயஸ் கார்டனில் வரவேற்பாளர் கம் டெலிபோன் ஆப்பரேட்டராக அமர்த்தப்பட்டார். இந்த சீனிவாசன் வந்த பிறகு, வழக்கமாக கார்டனுக்கு வந்து போய் கொண்டிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு கதவு அடைபட்டது. முத்துசாமி, மாதவன் போன்ற சீனியர்களுக்கு அங்கே மரியாதை கிடைக்கவில்லை. அப்படி ஒரு வி.ஐ.பி-க்கு நேர்ந்த அவமானம் இது. ஜெயலலிதாவைச் சந்திக்கப் போனார் அந்த வி.ஐ.பி. வரவேற்பரையில் சீனிவாசன் இருந்தார். மாடியிலிருந்து சீனிவாசனுக்கு அழைப்பு. ''சரிம்மா..'' என்ற சீனிவாசன், நம்பரைத் தட்டி, மற்றோர் அறையிலிருந்த சசிகலாவிடம் பேசினார். ''அம்மா உங்களை ரூமுக்கு வரச் சொன்னாங்க'' என்றார். திரும்பி, அந்த வி.ஐ.பி-யைப் பார்த்த சீனிவாசன், ''அம்மா வெளியூரில் இருக்கிறார். வருவதற்கு 20 நாள்கள் ஆகும். நீங்க அப்புறம் வாங்க..'' எனச் சொல்லி, அந்த வி.ஐ.பி.யை பேக் அப் செய்ய வைத்தார். அதற்குள் மாடிப்படி வழியாக சசிகலா இறங்கி, போர்ட்டிகோவில் நின்றிருந்த திரை போட்ட காரில் கிளம்பி வெளியே சென்றார். ''உயிர்த்தோழி இல்லாமல் அம்மா வெளியூர் போக மாட்டாரே'' என அந்த வி.ஐ.பி-க்குச் சந்தேகம் எழ.. ''அம்மா எங்கு போனாலும் கூடவே சின்னாவும்தானே போவார்'' எனக் கேட்டபோது, சீனிவாசனிடம் பதில் இல்லை.

நமது எம்.ஜி.ஆரில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர் நடராசனைத் தேடி போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருக்கு அதே ரெடிமெட் பொய். ''நடராசன் தஞ்சாவூர் போயிருக்கிறார். வர ஒரு வாரம் ஆகும்'' என சீனிவாசன் சொன்னார். அந்த நேரம் பார்த்து, அங்கே நடராசன் வர... சீனிவாசனுக்கும் நடராசனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. ''பத்திரிகையை நிறுத்தி ஒரு வாரம் ஆச்சு. என்ன செய்வது என்றே தெரியவில்லை'' என அந்த ஊழியர் நடராசனிடம் சொல்ல.. ''மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுது. அதனால் பத்திரிகையை அம்மா நிறுத்தச் சொல்லிட்டாங்க'' எனச் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் நடராசன்.

'நமது எம்.ஜி.ஆர்' நிறுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தன. அப்போது கட்சியின் மூத்த துணைப் பொதுச் செயலாளராக இருந்த ராகவானந்தம், நமது எம்.ஜி.ஆருக்கு கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார். அப்போது அங்கே சூப்பர் எடிட்டராக இருந்த தினகரன், ''அதை பிரசுரிக்க வேண்டாம்'' எனச் சொல்லிவிட்டார். அதன்பிறகு, பொருளாளர் மாதவன் தொண்டர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதை நமது எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்தார். அதை முதல் பக்கம் கால் பக்கத்துக்குப் போட நடராசன் சொன்னார். ஆனால், அதன்பிறகு தினகரன் ''அதை போட வேண்டாம்'' எனச் சொல்லிவிட்டார்.

'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழுக்குப் பொறுப்பாசிரியராக பி.சி.கணேசன் இருந்தார். பத்திரிகை நிற்பதற்கு முன்பே அவரை வெளியேற வைத்தார்கள் சசிகலா குடும்பத்தினர். நடராசன்தான் பி.சி.கணேசனை 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழுக்கு அழைத்து வந்தார். 'நமது எம்.ஜி.ஆர்' அலுவலகத்தில் பி.சி.கணேசனுக்குத் தனி கேபின் தரப்பட்டிருந்தது. அரசின் பாடநூல்கள் அச்சடிக்கும் ஆர்டர், நமது எம்.ஜி,ஆரின் ஜெயா பப்ளிகேஷனுக்குக் கிடைத்த பிறகு, அந்தப் பாட நூல்களை அடுக்கி வைப்பதற்கு போதிய இடமில்லை. கடைசியில் பி.சி.கணேசன் கேபினையும் எடுத்துக்கொண்டார்கள். மூன்றாம் வகுப்பு சமூகவியல் பாட நூல்களை அங்கே ஸ்டாக் வைத்தார்கள். அவருக்கு உட்காருவதற்குகூட இடமில்லை. வேறுவழியில்லாமல் பி.சி.கணேசன் 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையிலிருந்து விடை பெற்றார்.    

(தொடரும்...)