Published:Updated:

தென்னாப்பிரிக்காவில் ஒரு மன்னார்குடி குடும்பம்: ஜூமாவை வீழ்த்தியது குப்தாக்களா?

தென்னாப்பிரிக்காவில் ஒரு மன்னார்குடி குடும்பம்: ஜூமாவை வீழ்த்தியது குப்தாக்களா?
தென்னாப்பிரிக்காவில் ஒரு மன்னார்குடி குடும்பம்: ஜூமாவை வீழ்த்தியது குப்தாக்களா?

தென்னாப்பிரிக்காவில் ஒரு மன்னார்குடி குடும்பம்: ஜூமாவை வீழ்த்தியது குப்தாக்களா?

ஒரு நாட்டை ஆளும் நபர் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார். சொந்தக் கட்சியே அவரை பதவி விலக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இவருக்குப் பின்னால் ஒரு பெரிய குடும்பம் இயங்குகிறது என்பதும் இந்தப் பதவி விலகலுக்குக் காரணம் என்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டுத் தமிழக அரசியல் சூழல் சிலருக்கு மனதில் வந்து போனால் அதில் ஆச்ச்ர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், இதே மாதிரியான ஒரு நிலையில்தான் தென்னாப்பிரிக்கா உள்ளது. ஆம் ஜேக்கப் ஜூமா தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார். அதிபரின் குடும்பம் இந்திய வம்சாவளியைச் சார்ந்த குப்தாக்கள் குடும்பத்துடன் நெருங்கிய உறவில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி குடும்பத்துடன் இருந்த உறவை ஒட்டியது ஜூமாவுக்கு குப்தாக்கள் குடும்பத்துடன் இருந்த உறவு.

ஜூமா ஏன் பதவி விலகினார்?

மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுத் தப்பித்தவர். 12 மோசடி வழக்குகள், 4 ஊழல் வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் ஜூமா மீது உள்ளதாம், குப்தா குடும்பத்துடனான உறவு, ஜூமா மீது நம்பிக்கையில்லாதது, நாட்டின் மீதான பயம் எனப் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆளும் கட்சியான ஆப்பிரிக்கான் தேசிய காங்கிரஸ் அவரை பதவி விலக வலியுறுத்தியது. 2019-ம் ஆண்டுடன் இவரது காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. 

75 வயதான ஜேக்கப் ஜூமா, பதவி விலகுவதை அறிவிக்கும்போது நான் ஆப்பிரிக்க மக்களுக்காகவும், கட்சிக்காவும் தொடர்ந்து உழைப்பேன். கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நன்றி தெரிவிப்பதற்கு முன்பாக மூன்று உள்ளூர் மொழிகளில் நன்றி மற்றும் விடைபெறுகிறேன் என்கிற வார்த்தையைக் கூறியுள்ளார். 

யார் இந்த குப்தாக்கள்?

அதிபர் பதவி விலகுகிறேன் என்று அறிவிப்பதற்கு முன்பாக குப்தாக்களின் வீட்டில் ரெய்டு நடக்கிறது. அதிபர் தொடர்புடைய தற்போதைய ஊழல்களில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது. இப்படிக் கவனிக்கப்படும் இவர்கள் யார் என்றால் பதிலாய் வருகிறது கால் நூற்றாண்டுகால வரலாறு.

1993-ல் இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் குப்தா குடும்பம். சகோதரர்களான அஜய், அடல் மற்றும் ராஜேஷ் குப்தாக்கள் 40 வயதைத் தாண்டியவர்கள்.  உத்திரப்பிரதேசத்தின் சஹரன்பூரில்  வாழ்ந்த குடும்பம். அடல் குப்தாவின் தந்தை சிவ் குமார் குப்தா ஆப்பிரிக்காதான் இனி உலகின் அமெரிக்காவாக இருக்கும் என்று தனது மகன்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வந்ததுமே தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக சஹாரா கம்ப்யூட்டர்ஸை நிறுவியுள்ளனர். இதனைப் படிப்படியாக வளர்த்து தற்போது 22 மில்லியன் டாலர் வருமானம் கொண்டதாகவும், 10 ஆயிரம் பேருக்கும் வேலை வழங்கும் நிறுவனமாகவும் மாற்றியுள்ளனர்.

கணினி தொழிலில் மட்டுமில்லாமல் அவர்கள் சுரங்கம், விமான சேவை, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மீடியா துறைகளிலும் கால் பதித்துள்ளனர். நம்ம ஊர் போலவே அரசின் பலத்தோடு இந்தத் துறைகளில் காலூன்றியுள்ளனர் குப்தாக்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனத்தின் வருடாந்திர விழாவுக்கு ஜூமாவே சிறப்பு விருந்தினராகச் சென்றுள்ளார்.

ஜுமாவின் ஆறு மனைவிகளில் ஒருவரான மோங்கி ஜீமா ஜூமா குப்தாக்களுக்கு சொந்தமான சுரங்கத்தில் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது 

டுடூசில் ஜூமா, ஜூமாவின் மகள் தந்தை அதிபராக பதவியேற்பதற்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 

ஜூமாவின் மகன் டுடூசேன் ஜீமாவும் குப்தாவின் நிறுவனத்தில் பணியாற்றியுளார் ஆனால் 2016-ல் கட்டாயத்தின் பேரில் பதவி விலகியுள்ளார்,

தென்னாப்பிரிக்காவில் 21 கோடி மதிப்புள்ள எஸ்டேட், தனி ஹெலிபேட், சிறப்பு செஃப்கள் எனத் தென்னாப்பிரிக்காவில் ராஜ குடும்பத்தைப் போல வாழ்ந்து வருகிறார்கள் குப்தாக்கள். 2015-ம் ஆண்டு மந்திரி பதவி வழங்கவிருந்ததாகவும் அதனை குப்தாக்களே மறுத்துவிட்டதாகவும்  கூறப்படுகிறது. ஆனால், யார் மந்திரி ஆகவேண்டும், யாரை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். 

குப்தாக்களின் குடும்பம் அரசை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்றால் 2013-ல் தனது குடும்பத் திருமண விழாவை தென்னாப்பிரிக்காவில் நடத்தத் திட்டமிட்டு ப்ரிடோரியா பகுதியில் உள்ள சன் சிட்டி ரிசார்ட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இங்கு சிறப்பு வ்ருந்தினர்களை அழைத்துச் செல்ல விமான சேவையைப் பயன்படுத்தி ராணுவ விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். அரசின் உதவியோடு செய்த செயலுக்குப் பின்னர் மன்னிப்பும் கோரியுள்ளனர். இப்படி முழுமையாக அரசையும், ஆளும் தலைவர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் குப்தாக்கள். 

அரசு கவிழப்போகிறது என்றதும் குப்தாக்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறது எனும் ஒரு விஷயமே அவர்களுக்கும் அரசுக்குமான தொடர்பை வெளிப்படுத்தும். எந்த ஊராக இருந்தால் என்ன ஃபார்முலா ஒன்றுதானே என்பதைப்போல்தான் உள்ளது ஆப்பிரிக்க அரசியல்.

அடுத்த அதிபர் யார்? 

ஜூமா பதவி விலகிய 16 மணி நேரத்தில் பாராளுமன்றம் கூடி ஓட்டெடுப்பு நடத்துகிறது அதில் சிரில் ரமஃபோசா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபராகப் பதவியேற்றதும் ''அனைத்துத் துறைகளிலும் நாம் முதலிடத்தை அடைவதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். இன்னும் நாம் சுதந்திரம் அடையவில்லை. 1994-ம் ஆண்டிலிருந்து இன்னமும் வளர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம் உயர போராடுவோம்'' என்று கூறியுள்ளார்.

அரசின் பின்னனியில் உள்ள குடும்பம்தான் அரசை இயக்குகிறது என்று அதிபரைப் பதவி விலகச் செய்து ஆட்சியாளரை மாற்றி உண்மையான தர்மயுத்தத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது தென்னாப்பிரிக்கா. குப்தா குழுமத்தின் நிலை இனி என்ன ஆகும், தென்னாப்பிரிக்க அரசியலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பவைதான் தென்னாப்பிரிக்க அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளாக இருக்கும். கார்ப்பரேட்டுகள் நாட்டை ஆள்வது கூடாது என்கிறார்கள் தென்னாப்பிரிக்க மக்கள். இதே விஷயம் நம் நாட்டிற்கும் பொருந்தும். இதனைக் கவனிக்க வேண்டியவர்கள் கவனித்து சுதாரித்தாலே போதும்.

அடுத்த கட்டுரைக்கு