Published:Updated:

"அராஜகம், விளம்பரம், ஊழல் மட்டுமே உங்கள் அடையாளமா திரு. பழனிசாமி அவர்களே!" - தமிழக முதல்வருக்கு ஒரு சாமான்யனின் கடிதம் #OneYearOfEPS

"அராஜகம், விளம்பரம், ஊழல் மட்டுமே உங்கள் அடையாளமா திரு. பழனிசாமி அவர்களே!" - தமிழக முதல்வருக்கு ஒரு சாமான்யனின் கடிதம் #OneYearOfEPS
"அராஜகம், விளம்பரம், ஊழல் மட்டுமே உங்கள் அடையாளமா திரு. பழனிசாமி அவர்களே!" - தமிழக முதல்வருக்கு ஒரு சாமான்யனின் கடிதம் #OneYearOfEPS

"அராஜகம், விளம்பரம், ஊழல் மட்டுமே உங்கள் அடையாளமா திரு. பழனிசாமி அவர்களே!" - தமிழக முதல்வருக்கு ஒரு சாமான்யனின் கடிதம் #OneYearOfEPS

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு,

வணக்கம். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பதவியை அரும்பாடுபட்டாவது ஓர் ஆண்டு முழுவதும் கைப்பற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் 'மாண்புமிகு சின்னம்மா’ என்று வாயாறப் போற்றிய சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். சசிகலா உங்களை முதலமைச்சராக அறிவிக்கும்வரை கை கூப்பி நின்றுகொண்டிருந்த நீங்கள், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சசிகலாவின் முன், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவர் தூக்கிவிடும்வரை தரையில் கிடந்தபோதுதான் தமிழர்களாகிய நாங்கள் உங்களைக் கண்டுகொண்டோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நீங்கள் இடம்பெற்றிருந்தாலும், அப்போது அ.இ.அ.தி.மு.க என்றால், எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஜெயலலிதாவும், இரட்டை இலையும் மட்டும்தான்.

ஜெயலலிதா மறைந்தபிறகு... இரட்டை இலைக்காக, அணிகளாக பிரிந்து உங்கள் கட்சிக்குள் அடித்துக்கொள்ள ஆரம்பித்தீர்கள். உங்கள் சண்டைக்கு தமிழக மக்கள் பகடைகளாக்கப்பட்டோம். சசிகலாவின் ‘விருப்ப’ முதல்வராக ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஆட்சி என்பதன் அர்த்தம், அதிகாரத்தைக் கையிலேயே வைத்திருப்பது என்று பொருள்கொண்டிருந்தீர்கள். வாடிவாசலுக்காகப் போராடிய மாணவர்கள்மீது... பன்னீர்செல்வம் (துணை முதல்வர்) காவலர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார். நீங்கள் ஆட்சிக்குவந்து சில வாரங்களிலேயே நெடுவாசலில் போராட்டம் நடத்திய மக்கள்மீது உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினீர்கள். உங்கள் மீதான அதிகாரம் பரப்பன அக்ரஹாரத்திலிருந்து மட்டும் செலுத்தப்படவில்லை என்பதைச் சாமான்ய மக்களாகிய நாங்கள் அப்போது நன்கறிந்தோம்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க-வின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டது. தலையில் தொப்பியுடன் வீடுவீடாக மக்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரனுக்காக நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதை மறந்து ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்தீர்கள். ஓர் ஓட்டுக்கு ஏறத்தாழ நான்காயிரம் ரூபாய்வரை கொடுக்கப்பட்டது. 86 கோடி ரூபாய் பணம் மக்களுக்கு வாரி இறைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்குப் பணம் இறைக்கப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக வழக்குப் பதியப்பட்டு தினகரன் சிறைக்குச் சென்றார். சிறைசென்ற சசிகலாவுக்கும், தினகரனுக்கும் விசுவாசமாக இருந்த நீங்கள், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் பன்னீர்செல்வம் அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை உங்கள் பக்கம் இழுப்பதற்குத் தயாரானீர்கள். 'கட்சி, ஆட்சி’  - இவை மட்டும் உங்கள் கவனத்தில் இருந்தன; திட்டங்களும் வாக்குறுதிகளும் கிடப்பில் போடப்பட்டன.

இந்த ரணகளத்திலும் டாஸ்மாக் மட்டும் வழக்கம்போல சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றாமல், புத்திசாலித்தனமாக தேசிய நெடுஞ்சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாகவும், மாவட்ட நெடுஞ்சாலைகளாகவும் மாற்றிக்கொண்டிருந்தீர்கள். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்கள்மீதும் நீங்கள் வன்முறையைக் கட்டவிழ்க்கத் தயங்கவில்லை. நாடாளுமன்றத்தின் முன்பு நிர்வாணமாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை; ஆனால், உச்ச நீதிமன்றத்தில், 'தமிழகத்தில் வறட்சியால் ஒரு விவசாயிகூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை’ என்று சொன்னபிறகு, விவசாயிகளின் குமுறல்களுக்கு ஆளாகினீர்கள்.

மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் மாநில அரசு விவசாய நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து விடுவதால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரப் பிரச்னைகள் முளைத்தன. ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சியில் கியா மோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனம், 'உங்கள் அமைச்சர்கள் கேட்கும் கமிஷனை அளிக்க முடியாது' எனக் கூறிவிட்டு ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. விவசாயமும் இல்லை; தொழிற்துறையும் வளரவில்லை.

இந்தக் காலகட்டத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்தது. நீங்கள் முதலமைச்சராகத்தான் இருந்தீர்கள். உங்களைக் கட்டுப்படுத்தும் ரிமோட், பரப்பன அக்ரஹாரத்திலிருந்து டெல்லிக்குக் கைமாறியது. 'மோடியா... லேடியா’ என்று முன்பு கேட்டார் உங்கள் மாண்புமிகு அம்மா. நீங்களோ, ’லேடி இல்லனா மோடி’ என்று முடிவுசெய்து, பன்னீர்செல்வம் அணியினருடன் போட்டிபோட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்து விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானீர்கள். மாநில சுயாட்சி பற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் உங்கள் ஆட்சி இருந்தது என்பதற்கு ஜி.எஸ்.டி மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றில் உங்களது நிலைப்பாடுகளே சாட்சி.

மருத்துவராகும் மாணவர்களின் கனவு நீட் தேர்வால் கலைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., சிறுகுறு தொழிலாளிகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் பெரிய இடியாக விழுந்தது. 'எந்தப் பொருளை விலைகுறைவாக வாங்குவது, வாங்கினால் மத்திய அரசுக்கு எவ்வளவு, தமிழகத்துக்கு எவ்வளவு என்று சில்லறைகளைக்கூட வரிகட்டச் சேர்க்கத் தொடங்கினோம்.  உற்பத்தி மாநிலமான தமிழகத்துக்கு இதனால் விளையப்போகும் தீங்குகளைப் பற்றிக் கவலைப்படாதவராக, கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களை முடித்து, நல்ல பெயர் வாங்கும் பள்ளி மாணவர் போல் செயல்பட்டீர்கள்.

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம்; கதிராமங்கலத்துக்கு ஆதரவாகத் துண்டறிக்கை விநியோகம் செய்த வளர்மதி மீதும் குண்டர் சட்டம்; போராட்டம் நடத்தினால் குட்கா கம்பெனிக்குத் துணைபோகும் காவல் துறையைக் கொண்டு அடக்குமுறை... இவைதான் உங்கள் ஆட்சியின் ஜனநாயகம். 

'கே.பழனிசாமி என்கிற நான்’ என்று ஆளுநர் முன்பு பதவியேற்றதில் இருந்து நீங்கள் செய்த ஒரே சாதனை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிவந்து படித்துக் காட்டி வதைத்தது தான். பொழுதைக் கழிக்கச் சினிமா சென்றால், அங்கு டிக்கெட் விலையை ஏற்றியதோடு, திரைப்பட இடைவேளையிலும் அதே பேப்பரை வைத்துப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். தமிழகத்தில் செயல்படும் ஒரே துறையாக விளம்பரத்துறை மட்டுமே இருக்கிறது என பெருமைப்படும் வகையில் செயல்படுகிறது உங்கள் கீழ் செயல்படும் விளம்பரத்துறை. மத்திய அரசுடன் இதில் மட்டுமே போட்டி போடுகிறீர்கள். உங்களை எதிர்த்து தர்மயுத்தம் செய்துகொண்டிருந்த பன்னீர்செல்வத்தைத் துணை முதல்வராக்கியதோடு, சசிகலா, தினகரன் ஆகியோரைக் கட்சியைவிட்டு விலக்கி எதிரிகள் ஆக்கினீர்கள். அப்போதும் சாமான்யர்களான எங்களுக்கு, நீங்களும் உங்கள் துணை முதல்வரும் ‘சின்னம்மா... சின்னம்மா’ என்றழைத்ததுதான் நினைவுக்கு வந்தது. அதே காலகட்டத்தில் நீட் தேர்வினால் மருத்துவராகும் தன் ஆசை தகர்ந்துபோனதை எண்ணி, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். 

திராவிட இயக்கத்தின் ஆணி வேர், அது பெற்றுத் தந்த சமூக நீதி, உங்கள் கட்சியின் வரலாறு முதலியவற்றைப் படித்திருக்கிறீர்களா? உங்கள் கட்சியின் வரலாறு, எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு முன்பு இருந்தே வாசிக்கப்பட வேண்டியது. இந்திய அரசியலமைப்பின் முதல் சீர்திருத்தத்தைச் சமூக நீதிக்காகக் கொண்டுவரச் செய்தது தமிழ் மண். இந்த மண்ணில் சமூக நீதிக்கொள்கை நீர்த்துப் போய், ஒரு மாணவி தற்கொலை செய்திருக்கிறார். இது உங்கள் ஆட்சிக்கு மாபெரும் அவமானம் இல்லையா? 'நீட் தேர்வு, சமூக நீதிக்கும் அரசியலமைப்புக்கும் எதிராக இருக்கிறது' என நீங்கள் இதயதெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவே கூறியிருந்தார். எனினும், உங்கள் ஆட்சியில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு நடைபெறப் போகிறது. 'அம்மா வழியில் ஆட்சி’ என்ற உங்கள் முழக்கம் பிரமாதம்! அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கியபோது, காவல் துறையை அனுப்பி அடக்கினீர்கள். 

வறட்சியால் செத்துக்கொண்டிருந்த விவசாயிக்கு திறக்கப்படாத காவிரி ஆறு, நீங்கள் புஷ்கர விழாவில் நீராடுவதற்காகவே திறக்கப்பட்டது, உங்களின் அதிகாரத்தின் வெளிப்பாடு. உங்கள் அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் மேடைகளில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்துகொண்டிருக்கையில், நாங்கள் கொசுக்களோடு போரிட்டுக்கொண்டிருந்தோம். டெங்கு தமிழ்நாட்டின் மாநில நோயாக எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது. ஏடிஸ் கொசுக்களைக் கண்டு நாங்கள் பயந்துகொண்டிருந்தபோது, நீங்கள் சிரித்துக்கொண்டே வண்டலூரில் பிறந்த சிங்கக்குட்டிக்கு ‘விஷ்ணு’ என்று பெயர் சூட்டினீர்கள். உங்கள் ஆட்சியில் தமிழ்நாட்டை டெங்கு காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை முதலிடத்துக்கு வந்து பெருமை தேடித் தந்திருக்கிறது.

பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்; கட்சிக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எந்நேரமும் கவனமாக இருந்த உங்களின் பயணங்கள் மிகச்சிறப்புடையவை. ஆம், ஒவ்வோர் ஊரிலும் வந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்திவிட்டுச் சென்றீர்களே, அதைத்தான் சொல்கிறேன். உங்கள் கொண்டாட்டங்களின் நடுவே கோவையில் அலங்கார வளைவுமீது மோதி உயிரிழந்தார் ரகு என்ற இளைஞர். அப்படியும் கொண்டாட்டங்கள், சாலைகளை மறைக்கும் பேனர்கள் வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.

ஆர்.கே நகர் உங்கள் கைகளையும் மீறி டி.டி.வி.தினகரன் வசம் சென்றது. அப்போது உங்கள் முகத்தில் தொற்றியிருந்த பயத்தை ஒவ்வொரு சாமான்யரும் அறிந்தோம். ஓகி புயல் வந்தது. இயற்கைப் பேரிடர் பற்றிய தெளிவான அறிவிப்பை உங்கள் அரசு மக்களுக்குக் கொடுத்திருந்தால், மாபெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும். எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள் என்ற எண்ணிக்கைகூட உங்கள் அரசிடம் தெளிவாக இல்லை. இன்றும் கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் மீனவர்களின் குடும்பத்தினர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தமிழகத்தின் முக்கியப் பிரச்னையாக உங்கள் ஆட்சியில் உருவெடுத்தது. தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்குத் தர வேண்டிய பணத்தின் சுமையை மக்களாகிய எங்கள்மீது திணித்தது பேரிடியாக அமைந்தது. ஒரே நாளில் இரு மடங்காகிப்போன பேருந்துக் கட்டணத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சாமான்யர்கள் திணறிக்கொண்டிருந்த வேளையில், உங்கள் காருக்கு ‘சி.எம்’ என்ற நம்பர் பிளேட் போட்டு அழகுபடுத்திக்கொண்டிருந்தீர்கள். ரோம் பற்றியெரிந்தபோது, நீரோ மன்னன் என்ன செய்துகொண்டிருந்தான் என்பதை நாங்கள் நேரில் கண்டோம்.

ஓராண்டு ஆட்சியின் இறுதி ஸ்டன்ட் ஆக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைக் கடும் எதிர்ப்புகளையும் மீறித் திறந்து வைத்திருக்கிறீர்கள். ஜெயலலிதாவின் படத்துக்குக் கீழே, ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்று எழுதியும் வைத்திருக்கிறீர்கள். இந்த மூன்று சொற்களும் அந்த படத்தில் மட்டும்தான் இருக்கின்றன. உங்கள் ஆட்சியின் கீழிருக்கும் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. இங்கு இருப்பதெல்லாம், ‘அராஜகம், விளம்பரம், ஊழல்’ மட்டுமே.

இப்படிக்கு,

இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்த ஆட்சியை நினைத்து நொந்துகொண்டிருக்கும் சாமான்யன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு