Published:Updated:

``ஜெயலலிதா மரணத்தில் இருந்தது, புகைப்படத் திறப்பில் ஏன் இல்லை?’’ - விஜயதரணி

``ஜெயலலிதா மரணத்தில் இருந்தது, புகைப்படத் திறப்பில் ஏன் இல்லை?’’ - விஜயதரணி
``ஜெயலலிதா மரணத்தில் இருந்தது, புகைப்படத் திறப்பில் ஏன் இல்லை?’’ - விஜயதரணி

மிழகச் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் தனபால் கடந்த வாரம் திறந்துவைத்தார். ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டதற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை  விமர்சித்துப் பேசியுள்ளார். அதில், “நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த பின்பும் ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி மட்டும் பங்கேற்கலாமா. அது தவறில்லை என்றால், நான் ஆதரவு தெரிவித்ததும் தவறில்லை’’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம். 

“ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், நீங்கள் ஆதரித்துள்ளீர்களே...?’’  

“தனிப்பட்ட முறையில் ஒருபெண் என்ற வகையில் என்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளேன். அதுமட்டுமன்றி, தமிழக மக்களுக்குப் பல நல்ல திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. அவருடைய அந்த விஷயங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. பெண் முதலமைச்சராக இருந்து பெண்களுக்கான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதையெல்லாம் மனதில்வைத்தே என்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளேன். இது, கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயமே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’’.

காங்கிரஸில், உங்களுடைய இந்த ஆதரவுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?’’ 

“காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், சில தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். என்மீது நடவடிக்கை எடுத்தால், அதனை எதிர்கொள்வேன். அதில், எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’’.

“ ‘ஜெயலலிதா ஊழல் செய்துள்ளார்’ என்று நீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது...? அப்படி இருக்கும்போது, ‘பெண் என்பதால் ஆதரவு தெரிவித்தேன்’ என்று நீங்கள் சொல்வது சரியா? பெண் என்பது இங்கு தகுதியாக வைக்கப்படுகிறதா?’’

“அவர், ஒரு பெண் முதலமைச்சராக இருந்து மறைந்தவர் என்ற முறையில் என்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளேன். மேலும், பெண்களுக்கான தளம் என்பது மிகக் குறைவான பங்களிப்பாகவே உள்ளது. குறிப்பாக, அரசியல் மற்றும் மக்கள் தளங்களில் பெண்களுக்கான இடம் என்பது மிகக் குறைவான நிலையில் உள்ளது. சட்டப்பேரவை அரங்குக்குள் ஒரு பெண்ணின் படம் வரக்கூடிய சூழல் உருவாகும்போது,பெண்ணாக இருக்கிற நாமே ஆதரிக்கவில்லை என்றால்,வேறு யார் ஆதரிப்பார்கள் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருக்கிறது. ஊழல் செய்தார்கள் என்று கூறுவது துரதிர்ஷ்டமான ஒன்று. அவர், குற்றவாளி என்று உறுதி செய்யப்படாமலேயே இறந்துபோனார். அந்த நிலையில் இருந்துதான் இதனை அணுக வேண்டும். ஒரு மரண தண்டனை கைதிக்குக்கூடக் கடைசி நிமிடங்களில் அவருடைய மனதில் உள்ள விஷயங்களைத் தெரியப்படுத்த அவகாசம் தரப்படுகிறது. அந்த அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு மறு சீராய்வுக்கு வாய்ப்பிருந்த நிலையில், அவருடைய மரணம் அந்த வாய்ப்பை பறித்துக்கொண்டது. இதனால், அந்த வழக்கிலிருந்து அவரால் தன்னை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. அப்படி ஒரு மறுசீராய்வு கிடைத்திருந்தால், ஒரு சிறிய ஆவணத்தைக் கொண்டாவது அவர் தன்னைக் குற்றமற்றவர் என விடுவித்திருக்க முடியும்’’.

“மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு இடையே ஜெயலலிதா படம் இருக்கலாமா?’’ 

“இந்தத் தலைவர்களின் படங்களுக்கு இடையே ஜெயலலிதாவின் படம் இருப்பது தவறில்லை. காரணம், ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தைகள் திட்டம் பெண்சிசுக் கொலைகளைத் தடுத்துள்ளது. அதேபோன்று, இந்தியாவில் இதுவரை யாருமே நடைமுறைப்படுத்தாத அம்மா உணவகத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிக் கல்வித் தேவை எனச் சட்டமன்றத்தில் நான் பேசியபோது, அதற்கு முக்கியத்துவம் அளித்து அதனை நடைமுறைப்படுத்தினார் ஜெயலலிதா. அதேபோன்று, மகப்பேறு விடுமுறையை ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்த வேண்டும் எனக் கோரியபோது, அதற்கும் முக்கியத்துவம் அளித்து அதனை நடைமுறைப்படுத்தினார். ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், என்னுடைய பல கோரிக்கைகளை ஏற்று, அவர் அதனை நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாக அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையாக இதனைப் பார்க்கிறேன். அதேபோன்று, டாக்டர் கலைஞர் அவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்யத் தவறுவார்களானால், அதற்கும் நான் குரல் கொடுப்பேன். குறிப்பாகக் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த காப்பீட்டுத் திட்டம் இந்திய அளவில் பேசப்படுகிறது.இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியமாகிறது. அவற்றை எல்லாம் ஏன் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை நாம்?’’.

“ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசியது,ஜெயலலிதா படம் வைத்துள்ளதற்கு ஆதரவு போன்ற விவகாரங்களில் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உங்கள் பதில்?’’

“எங்களுடைய தலைவர்கள் ராகுல் காந்தி, முகுல் வாசினிக் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்வில் பற்கேற்றனர். அவர்களுடைய அந்தப் பண்பையும், மாண்பையும் மதிக்கிறேன். அவர்களும் அந்த அம்மையாரின் நல்ல செயல்களை மதித்துத்தான் அதில் பங்கேற்றனர். மரணத்தில் அவருடைய செயல்களை மதித்து சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்த நமக்கு, ஏன் இந்தப் படத்திறப்பு விழாவில் பார்க்க முடியவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், அதுகுறித்து என்னிடம் விளக்கம் கேட்டபிறகே இருக்கும். இதுவரை என்னிடம் எந்தத் தலைவரும் இதுகுறித்து கேட்கவில்லை.’’