Published:Updated:

ஒரு மாதத்துக்கு 1.38 லட்சத்துக்கு டீசல்..! காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு

ஜெ.முருகன்
ஒரு மாதத்துக்கு 1.38 லட்சத்துக்கு டீசல்..! காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு
ஒரு மாதத்துக்கு 1.38 லட்சத்துக்கு டீசல்..! காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு

'ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரத்துக்கு டீசல் போட்டதாக பொய்க்கணக்கு காட்டி ஊழல் செய்திருக்கிறார், காங்கிரஸ் எம்.எல்.ஏ' என்று புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திரமோடி வரும் 24-ம் தேதி ஆரோவில்லில் நடைபெறும் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். அன்று, லாஸ்பேட்டை விமானதள மைதானத்தில் பா.ஜ.க ஏற்பாடுசெய்துள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். புதுச்சேரியில் மாற்றம் வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இந்தச் சூழலில் பிரதமரின் வருகை, புதுச்சேரி அரசியலில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும். நம் பிரதமர் புதுச்சேரி மாநிலத்தைச் செல்லப்பிள்ளையைப் போல கருதுகிறார். அதேபோல, ஸ்மார்ட் சிட்டி, துறைமுகம் மற்றும் சுற்றுலாத் திட்டங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதியை ஒதுக்குகிறது.

ஆனால் முதலமைச்சர் நாராயணசாமி, நிதி மேலாண்மையை முறையாகக் கையாள்வதில்லை. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் சுமார் 50 லட்சங்கள் வரை மக்கள் வரிப் பணத்தை வீணடித்து, தங்கள் சமையலறையைப் புதுப்பித்துள்ளனர். இனோவா காரின் டீசல் டேங்க் கொள்ளவு 55 லிட்டர்தான். ஆனால், வாரியத் தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தனவேலு, தனது இனோவா காருக்கு ஒரு நாளில் 135 லிட்டர் போட்டதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்.

அதே காருக்கு, மறுநாளே 135 லிட்டர் டீசல் போட்டதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார். இப்படி கடந்த டிசம்பர் மாதத்துக்கு மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரத்துக்கு டீசல் போட்டதாகக் கணக்குக்காட்டி ஊழல் செய்திருக்கிறார். அதற்கு, அந்தத் துறையின் இயக்குநரும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் இந்தத் தகவலைப் பெற்றிருக்கிறோம். வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என மக்களிடம் வரிப் பணத்தை வாங்கி, அதில் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் முறைகேடு செய்கிறார்கள். அன்றாடம் அரசுப் பணத்தை திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும்தான் குறியாக இருக்கின்றனர். அரசு அதிகாரிகளும் அதற்குத் துணையாக இருக்கின்றனர். இதுகுறித்து ஆளுநர், தலைமைச் செயலாளரிடம் புகார் செய்வோம்” என்றார். இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க எம்.எல்.ஏ., தனவேலுவை பலமுறை தொடர்புகொண்டும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.  இதுகுறித்து எம்.எல்.ஏ., தனவேலு விளக்கம் கொடுத்தால், பரிசீலனைக்குப் பிறகு அதை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.