Published:Updated:

வி.சி.க தலைவர் திருமாவளவனைக் கைதுசெய்ய வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்

சி.மீனாட்சி சுந்தரம்
வி.சி.க தலைவர் திருமாவளவனைக் கைதுசெய்ய வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்
வி.சி.க தலைவர் திருமாவளவனைக் கைதுசெய்ய வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. அங்கு நடைபெற்றுவந்த வழக்கு ஒன்றில், பல வருடங்களாக திருமாவளவன் நேரில் ஆஜராகாத காரணத்தால், அவர்மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாயிலாடுதுறையில் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், ஏராளமான வி.சி.க தொண்டர்கள் கலந்துகொண்டனர். திருமாவளவன் உட்பட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரும் அந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக அப்பேரணியில் பிரச்னை வெடித்தது. அப்போது, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் தாக்கப்பட்டார். மேலும், மூன்று பேர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு பதியப்பட்டு, மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நேரில் ஆஜராகுமாறு பலமுறை உத்தரவிடப்பட்டிருந்தது. பல வருடங்களாக இவர்கள் ஆஜராகாத காரணத்தால், திருமாவணவன் உட்பட நான்கு பேரை கைதுசெய்ய பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம்.