Published:Updated:

போயஸ்கார்டனை சி.பி.ஐ கைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியே வரும்! - தீபா அதிரடி

வீ கே.ரமேஷ்
போயஸ்கார்டனை சி.பி.ஐ கைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியே வரும்! - தீபா அதிரடி
போயஸ்கார்டனை சி.பி.ஐ கைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியே வரும்! - தீபா அதிரடி

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை சார்பாக, சேலம் கோட்டை மைதானத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தீபா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

'காற்றுக்கு எல்லை இல்லை, கடலுக்கு கரை இல்லை, தீபாவின் புகழுக்கு அளவில்லை என்றும், இரும்பு மங்கை, ஜான்சி ராணி, வருங்கால முதல்வர் என்றும், நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, எல்லா கண்ணும் பொசுங்கட்டும், தீபா புகழ் நிலைக்கட்டும்' என்று ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தீபாவின் உச்சி குளிரப் பேசினார்கள்.

இறுதியாகப் பேசிய தீபா, 'அண்ணா, எம்.ஜி.ஆரை  கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் கலங்கத்தை ஏற்படுத்திய கூட்டத்தை மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் மரணத்தை விசாரிப்பதற்கு ஆறுமுகசாமி கமிட்டியை நியமித்தார். அந்தக் கமிட்டி, இதுவரை என்ன கண்டுபிடித்தார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். இன்னும் எத்தனை நாள்கள் மக்களை ஏமாற்றப்போகிறார்களோ தெரியவில்லை. என்மீதும், என் குடும்பத்தின்மீதும், நிர்வாகிகள்மீதும் பொய்யான புகார் கூறி எங்களின் செயல்பாட்டைத் தடைசெய்கிறார்கள்.

தமிழக மக்களை, அம்மா காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றினார். என் லட்சியப் பயணத்திலும் நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கோடிகளை நம்பி அரசியலுக்கு வரவில்லை.  ஏழரைக் கோடி மக்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். அத்தையின் வரலாற்றுப் புத்தகத்தில் நான் ஒரு பதிவாக இருப்பேன். சி.பி.ஐ, போயஸ் கார்டனைக் கைப்பற்றி  விசாரித்தால் மட்டுமே அம்மா மரணத்தின் உண்மை தெரியவரும்' என்றார்.