Published:Updated:

கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி..!

கே.அருண்
கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி..!
கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி..!

நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், டி.டி.வி தினகரன் அணியுடன் இணைவதை விரும்பாத முதல்வர் பழனிசாமி குன்னூரில் நடந்த முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. 

கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி, தமிழ்ப் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அ.தி.மு.க-வினர் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பாகவே பேனர்களை வைத்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகிய 3 பேர் மட்டுமே பங்கேற்றனர். துணை முதல்வர் பங்கேற்காதது, முதல்வருடனான கசப்பு காரணமாக இருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் கிசு கிசுத்துக் கொண்டனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டது குறித்து  கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது,  “தேனியில் நேற்றைக்கு முந்தைய நாள் இரவு பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், மோடி கொடுத்த அழுத்தத்தால் தான் எடப்பாடி அரசுடன் இணைந்து செயல்பட சம்மதித்தேன். அதனால் தான் அமைச்சரவையிலும் சேர ஒப்புதல் தெரிவித்தேன் என பேசியுள்ளார். அதனால் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை அவர் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக இந்த விழாவில், முதல்வர் பங்கேற்க சம்மதிக்காவிட்டால், தினகரனை விழாவுக்கு அழைக்க  நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தயாராக இருந்ததாலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேறு வழியின்றி பங்கேற்க வேண்டியதாயிற்று. இந்தக் கோயில் கோபாலகிருஷ்ணன் எம்.பியின் குடும்பக் கோயில். இவர் இதற்கு முன்பு குன்னூர் நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மாமன் மகள் தான் திருப்பூர் எம்.பி சத்தியபாமா. சத்தியபாமா தற்போது டி.டி.வி தினகரன் அணியுடன் செயல்பட்டு வருகிறார். எனவே, கோபாலகிருஷ்ணன் தினகரன் அணியுடன் இணைவதை விரும்பாத முதல்வர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுள்ளார்” என்றனர்.