Published:Updated:

கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!
பிரீமியம் ஸ்டோரி
கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!
பிரீமியம் ஸ்டோரி
கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

`உரைகள் ஒரு தலைவனை உருவாக்கும் என்றால், இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்' - இது புகழ்பெற்ற ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாயின்   கருத்து.

`கன்னையா குமாரின் உரையை பலமுறை கேட்டேன். சிந்தனைத் தெளிவுமிக்க உரை. மக்கள் நினைப்பதை அவர் பேசினார். இந்தப் பையனை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' - இது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து.

`கன்னையா குமார், இப்போது இந்தியாவின் சேகுவேராவைப் போல' - இது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜா சொன்னது.

`இடதுசாரிகள், தங்களின் புதிய கதாநாயகனைக் கண்டுபிடித் திருக்கிறார்கள்' - இது ஊடகவியலாளர் சகரிகா கோஷ் சொன்னது.

இன்னும் எத்தனையோ பேர், என்னென்னவோ சொன்னார்கள். அனைத்தின் சாராம்சமும் ஒன்றுதான், `இதோ... நவீன இந்தியாவுக்கான புதிய தலைவன் கிடைத்துவிட்டான்'.

எல்லோரும் `தலைவன்' எனச் சொன்னாலும், அவன் 29 வயது இளைஞன். டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் பெயர், கடந்த வாரம் உலக அளவில் பேசப்பட்டது. தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்தவர், மார்ச் 3-ம் தேதி இரவு, ஜே.என்.யு வளாகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரை, உலகப் புகழ்பெற்ற உரைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், தேசத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் ஒரு புயல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைகூட இதுவரை பேசவில்லை. இந்தப் பேரமைதி, அவர் விரும்பித் தேர்ந்தெடுத்தது அல்ல. வரிசையாக அம்பலமாகிக்கொண்டிருக்கும் தன் கட்சியினரின், அமைச்சரவை சகாக்களின் பொய் முகங் களின் முன்னால் அமைதியாக இருப்பதைத் தவிர, அவருக்கு வேறு தேர்வுகள் இல்லை. இந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு போர்க்குரலாக ஒலிக்கிறது கன்னையா குமாரின் குரல்.

மாணவன்

புகழ்பெற்ற பத்திரிகையாளர் சீமா முஸ்தஃபா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 70 ஜே.என்.யு மாணவர்களுடன் இணைந்து ஸ்ரீநகர் சென்றிருந்தார். அங்கேதான் முதல்முறையாக கன்னையா குமாரைச் சந்தித்தார். `அவ்வளவு மாணவர்களுக்கு மத்தியில் கன்னையா குமாரை என்னால் இன்று நினைவுகூர முடிவதற்குக் காரணம், வித்தியாசமாக ஒலித்த அவர் பெயர் மற்றும் அவருடைய இயல்பு' என்கிறார்.

`பொதுவாக, மாணவர்களிடம் காணப்படும் தயக்கமும் கூச்சமும் அவரிடம் இல்லை. காஷ்மீர் மக்களிடம் நெருங்கிச் சென்று அவரால் பேச முடிந்தது. மீண்டும் மீண்டும் எங்களிடம் வந்து, `நானும் மேடை ஏறிப் பேசட்டுமா... எனக்கும் சில நிமிடங்கள் ஒதுக்கித்தருகிறீர்களா?' எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். பல சீனியர் மாணவர்கள் இருந்தபோதும் அன்று மேடை ஏறும் வாய்ப்பு அவருக்கே கொடுக்கப்பட்டது’ என்கிறார்.

அதன் பிறகு கன்னையா குமாரைப் பற்றி சீமா முஸ்தஃபா கேள்விப்பட்டபோது, அவர் ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மூன்றாவது முறை கன்னையா குமாரைப் பற்றிய செய்தி வெளிவந்த போது, அவர் ஒரு தேசவிரோதியாக மாற்றப் பட்டிருந்தார். ‘யார்... காஷ்மீரில் நான் பார்த்த கன்னையா குமாரா? முதல்முறை காஷ்மீரில் கால் பதித்து மிக அழகாக உரையாற்றிய அந்த மாணவனா தேசவிரோதி?’

`ஆம்... அவர்தான் இன்றைய இந்தியாவின் நம்பர் 1 தேசவிரோதி' என்கிறார் தற்சமயம் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க இளைஞர் அணித் தலைவர்களில் ஒருவரான குல்தீப் வர்ஷ்னே. தேசத்துக்கு எதிராகப் பேசும் கன்னையா குமாரின் நாக்கைத் துண்டித்து எடுத்துவருபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருக்கிறார் இவர். ஆனால் `பூர்வாஞ்சல் சேனா' என்னும் அமைப்பின் தலைவர் ஆதர்ஷ் ஷர்மாவுக்கு நாக்கு மட்டும் போதவில்லை. கன்னையா குமாரின் உயிரற்ற உடலைக் கொண்டுவருவோருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித் திருக்கிறார்.

பீகாரில், பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பெஹாத் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கன்னையா குமார். 20-ம் நூற்றாண்டு பீகார் அரசியலிலும் விவசாயிகள் இயக்கங்களிலும் குறிப்பிடத்தக்கச் செல்வாக்குடன் திகழ்ந்த `பூமிகார்' சாதியைச் சேர்ந்தவர். உடன்பிறந்தவர்கள் இருவர். அம்மா மீனாதேவி, அங்கான்வாடி தொழிலாளி. அப்பா ஜெய்சங்கர் சிங், விவசாயக் கூலி. வாதநோய் தாக்கியதைத் தொடர்ந்து நகரக்கூட முடியாத நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கிறார். அம்மா சம்பாதிக்கும் 3,000 ரூபாயைக் கொண்டுதான் அந்தக் குடும்பம் வாழ்வை நடத்தியாக வேண்டும்.

பெகுசாராய், நீண்ட காலமாகவே மார்க்சியத் தாக்கம்கொண்ட ஒரு மாவட்டம். கன்னையா குமாரின் கைதைத் தொடர்ந்து பெகுசாராயில் தன்னிச்சையாக வெடித்த போராட்டங்களே இதற்குச் சாட்சி. பீகாரில் உள்ள தொழில்நகரமான பரானியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய கன்னையா குமார், அப்போதே இடதுசாரிகளின் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஏ.பி.பரதனின் கரங்களில் இருந்து பரிசுபெற்ற புகைப்படத்தை வீட்டில் இப்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறார்.


பாட்னாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் 2007-ம் ஆண்டு புவியியல் பட்டப்படிப்பை முடித்தார். அடுத்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினராகச் சேர்ந்தார். முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, ஜே.என்.யு-வில் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் பிரிவில் `ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்' ஆய்வுப் படிப்பில் இடம் கிடைத்தது. செப்டம்பர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். `தேர்தலுக்கு முந்தைய நாள் அவர் ஆற்றிய அற்புதமான உரையே அவரது வெற்றிக்குக் காரணம்' என மாணவர்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.

போராளி

கன்னையா குமார் முதல் முறையாக காஷ்மீர் சென்றது ஜே.என்.யு-வில் சேர்ந்த பிறகுதான். அவரது உலகப் பார்வை விரிவடைந்ததும் இங்கே தான். ஏட்டுப் பாடங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தால் போதாது, அசலான பிரச்னைகளை அனுபவிக்கவும் வேண்டும் எனச் சொல்லி, அவரை வளாகத்தில் இருந்து இழுத்து வந்து சிறைக்குள் தள்ளியதும் இதே ஜே.என்.யு-தான்.
`உங்களுக்கு எதற்கு இந்தத் தேவையற்ற வேலை? படிக்கப்போகிறவர்கள், படிப்பை மட்டும் கவனிக்கவேண்டியதுதானே... அரசியல் உங்களுக்குத் தேவையற்றது அல்லவா?' என்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

`அரசியல் எங்களுக்குத் தேவை. மட்டுமின்றி, அரசியலுக்கு நாங்கள் தேவைப்படுகிறோம்' என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கன்னையா குமார். அரசியல் உணர்வு என்னும் நிலையில் இருந்து அவரை செயலை நோக்கித் தள்ளியதில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு முக்கிய இடம் உண்டு. இருவருமே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இருவருடைய பெற்றோரும் குறைந்த ஊதியத்தில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். வறுமை, ஒடுக்குமுறை, புறக்கணிப்பு ஆகியவற்றை மட்டுமே பார்த்து வளர்ந்த இருவரும், கல்லூரிப் பாடங்களோடு சேர்த்து தங்கள் வாழ்நிலையை இப்படி அழுத்திவைத்திருக்கும் அம்சங்கள் குறித்தும் வாசிக்கத் தொடங்கியது தவிர்க்க இயலாதது. `வழிவழியாக நாம் ஏன் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறோம்... ஏன் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்துள்ளனர்... எது நம்மை கீழேயே வைத்திருக்கிறது... நம் சமூகத்தைப் பீடித்துள்ள இருளை அகற்றும் ஒளி எங்கே உள்ளது?' போன்ற கேள்விகள் அவர்களுக்குள் இடைவிடாமல் எழுந்தன.

விடை தேடிப் புறப்பட்டபோது அவர்கள் கார்ல் மார்க்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார், பகத் சிங்... உள்ளிட்டோருடன் உரையாட நேர்ந்தது. அவர்களிடம் இருந்து பொருளாதார சமத்துவம், ஜனநாயகம், சாதி ஒழிப்பு, கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கொள்கைகளைப் பெற்றுக்கொண்டனர். இதுவே இந்த இருவரையும் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாக மாற்றி அமைத்தது. ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்னொருவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பாய்ந்தது.

மனம் உடைந்த ஒரு தலித் மாணவனின் தற்கொலையாக அல்ல... மேல் சாதி அதிகார வர்க்கத்தின் வன்முறையாகவே ரோஹித் வெமுலாவின் மரணத்தைப் புரிந்துகொண்டார் கன்னையா குமார். அம்பேத்கரையும் மார்க்ஸையும் இணைத்துக் கற்ற ரோஹித்தின் மரணம், ஒரு தனி நிகழ்வு அல்ல; நீண்ட சங்கிலித்தொடரின் ஒரு பகுதி என்பதை கன்னையா உணர்ந்துகொண்டார். தன் போராட்டப் பாதையை அவர் வடிவமைத்துக் கொண்டிருக்கும்போதே கைதும் நிகழ்ந்துவிட்டது.

தலைவன்

தன் மீது சுமத்தப்பட்ட பொய்ப்பழியைத் துடைத்து அழிக்கவேண்டும் என்று மட்டுமே கன்னையா குமார் எண்ணியிருந்தால், தனிப்பட்ட ஒரு போராட்டமாக ஜே.என்.யு விவகாரம் சுருங்கிப்போயிருக்கும். அவர் அதைச் செய்யவில்லை. மாணவர்கள், உழைப்பாளர்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள் என அனைவரையும் உள்ளிழுத்துக்கொண்டார். இதன்மூலம், `நான் என்னைப் பற்றி பேசவில்லை; நம்மைப் பற்றி பேசுகிறேன். நான் உரத்துக் குரல்கொடுப்பது எனக்காக அல்ல, நமக்காக' என்பதை தெள்ளத்தெளிவாக்கினார்.

கருத்துச் சுதந்திரத்தை மட்டும் ஒருவர் தனியாகப் போராடிப் பெற்றுவிட முடியாது. உண்மையான ஜனநாயகம் தழைக்கும்போது, தவிர்க்க இயலாதபடி கருத்துச்சுதந்திரமும் தானாகவே தோன்றிவிடும். எனவே, கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது உண்மையில் ஜனநாயகத்துக்கான போராட்டமே என்பதை கன்னையா குமார் உணர்ந்திருந்தார்.

ஜே.என்.யு மீதான தாக்குதல் என்பது, அங்கு பயிலும் மாணவர்கள், போதிக்கும் பேராசிரியர்கள் ஆகியோர் மீதான தாக்குதல் மட்டும் அல்ல; இந்தியாவின் இதயத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை உரக்க அறிவித்தார் கன்னையா குமார். அவரது கரங்களைப் பற்றிக்கொள்ள தேசத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் பல லட்சம் கரங்கள் நீண்டபோது, கன்னையா குமார் ஒரு தலைவனாகவும் உருப்பெற்று எழுந்திருந்தார்.

`வர்க்கப் பாகுபாடுகளையே முதலில் களைய வேண்டும்' என இடதுசாரிகளும், `சாதிய வேறுபாடுகளைக் களைவதே முதன்மையான பணி' என அம்பேத்கரியவாதிகளும் இரு வேறு முகாம்களில் ஒதுங்கி நீண்ட காலமாக இயங்கி வந்த காரணத்தால், இந்த இரு குழுவினருக்கும் இடையில் வலுவான ஓர் இணைப்பு ஏற்படாமலேயே இருந்தது. கன்னையா குமாரின் வரவு இந்தக் குறைபாட்டைப் பற்றி நேரடியாக உரையாடத் தொடங்கியிருக்கிறது. `அம்பேத்கரும் மார்க்ஸும் இணையவேண்டும்... நீலமும் சிவப்பும் ஒன்று கலக்கவேண்டும்' என்கிறார் கன்னையா குமார்.

சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கன்னையா குமார் அளித்த முதல் பேட்டியின் முதல் கேள்வி அப்சல் குருவைப் பற்றிதான். தயக்கத்துடன் வந்து விழுந்த கேள்வியை லாகவமாகப் பற்றிக்கொண்டு பதில் அளித்தார் கன்னையா குமார். ‘நான் அரசியல்வாதி கிடையாது. அதனால் கேள்விகளைக் கண்டு அஞ்ச மாட்டேன். அப்சல் குரு யார்? இந்த நாட்டின் குடிமகனாக இருந்தவர். எந்தச் சட்டம் அவரைத் தண்டித்ததோ, அதே சட்டம்தான் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் எனக்கு வழங்கியிருக்கிறது. மற்றபடி அப்சல் குரு அல்ல, ரோஹித் வெமுலாதான் என் வழிகாட்டி. நீங்கள் எத்தனை ரோஹித் வெமுலாவைக் கொன்றாலும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு புதிய ரோஹித் தோன்றுவான்’ என்ற கன்னையா, `நாங்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கேட்கவில்லை.

கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்!

இந்தியாவுக்குள் விடுதலை கேட்கிறோம். மதவாதத்திடம் இருந்து விடுதலை; ஊழலிடம் இருந்து விடுதலை வேண்டும்;

ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் இருந்து விடுதலை' என்று முழங்கினார்.

`நாடாளுமன்றத்தைவிட வகுப்பறையே தன்னை அதிகம் வசீகரிக்கிறது' என அறிவித்தாலும் கன்னையா குமார் திட்டவட்டமாக அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டார் என்பதே நிஜம். மாணவராக இருந்தபோதிலும் தன் பலத்தை அவர் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார். அதனால்தான் தேசத்தின் பிரதமரை நோக்கி அவரால் தன் விரலை உயர்த்த முடிகிறது.

`இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா' என 1970-களில் ஒலித்த முழக்கம், இன்று `மோடிதான் இந்தியா; இந்தியாதான் மோடி' என மாறியிருக்கிறது. மோடியை விமர்சிப்பது தேசத்தை விமர்சிப்பதாகவே கொள்ளப்படும் என்பது கன்னையாவுக்குத் தெரியும். இருந்தும் தனது உரைகளிலும் பேட்டிகளிலும் மோடியைக் கிண்டலுடனும் கோபத்துடனும் எள்ளி நகையாடுகிறார்.

‘இந்தியாவுக்கு சேவை செய்தல் என்பது, வேதனைப்படுகிற லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்வது ஆகும். வறுமை, கல்லாமை, நோய், சம வாய்ப்பு இல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதே அந்தச் சேவை. கண்ணீரும் துயரமும் இருக்கும் வரை நம் கடமை முடிந்துவிடாது. அற்பமான, எதிர்மறையான விமர்சனத்துக்கு இது நேரம் அல்ல. வெறுப்புஉணர்ச்சிக்கும் மற்றவர்களைக் குறைசொல்வதற்கும் இது நேரம் அல்ல. சுதந்திர இந்தியா என்னும் உன்னதமான மாளிகையை நாம் நிர்மாணிக்க வேண்டும். இந்தியத் தாயின் எல்லா குழந்தைகளும் அதில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.’ இந்தியாவின் முதல் பிரதமரின் முதல் சுதந்திர தின உரையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவை. நேருவின் பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தின் மாணவர் கன்னையா குமாரின் உணர்வும் இதுவேதான்.

தங்களுக்கான அரசியல் தீர்வுகளைத் தேடித் தவிக்கும் மக்கள், ஒரு தத்துவத்தின் பின்னால் அணி திரள்வதற்குப் பதிலாக ஒரு தனி நபரை ஹீரோவாகக் கருதி, அவரின் பின்னால் செல்லும் போக்கு இந்தியாவில் ஓர் அரசியல் பண்பாடாகவே உள்ளது. இந்த வரிசையில்தான் மோடியும் வந்தார். கன்னையா குமாரை இந்த அளவுகோலில் மதிப்பிட முடியுமா? `முடியாது' எனச் சொல்லும் அரசியல் விமர்சகர்கள், இதற்கு கன்னையா குமாரே பதில் தருவதையும் முன்வைக்கிறார்கள்.

`மாதம் 3,000 ரூபாய் சம்பாதிக்கும் ஓர் அங்கன்வாடி ஊழியரின் மகனான நான் சாதாரண கல்லூரி மாணவன். என்னை ஹீரோவாக நான் முன்னிறுத்தவில்லை. அப்படி மற்றவர்கள் சொல்வதை ஏற்கவும் இல்லை. சமூகச் சிக்கலுக்கு தனிநபர்கள் தீர்வாக முடியாது. அதனால்தான் நான் அம்பேத்கரையும் மார்க்ஸையும் இணைத்து முன்வைக்கிறேன்' என்கிறார். ஆக, கன்னையா குமார் தனி நபர் ஹீரோயிசத்துக்கு ஆட்படவில்லை. அது தரும் போதையில் வீழ்ந்துவிடவில்லை. அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். இந்தத் தெளிவுதான் அவரை நோக்கி மக்களை ஈர்க்கிறது.

ஆனால் `ஒரு தலைவனுக்கு இந்தத் தகுதிகள் போதுமானவையா? படித்தவர்... அழுத்தமாகத் தன் கருத்துகளை முன்வைக்கிறார். எல்லாம் உண்மை தான். அதற்காக அவர் ஒரு தலைவர் ஆகிவிடுவாரா? இந்தப் பண்புகள் மட்டும் போதுமா, அவரை மாற்றுச் சக்தியாக ஏற்றுக்கொள்ள?' என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. `ஏன் முடியாது?' என்பதே இந்தக் கேள்விக்கான பதில். மோடியின் ஆர்ப்பாட்டமான உரைகளையும் `முன்னேற்றம்... வளர்ச்சி’ என்னும் ஜொலிக்கும் வார்த்தைகளையும் மட்டுமே நம்பி வாக்களித்த நடுத்தர வர்க்கம், இன்று முற்றாகச் சோர்வடைந்திருக்கிறது. குஜராத் மாடலை இந்தியா முழுக்க வெற்றிகரமாக அமல்படுத்துவார் என்று நம்பிய முதலாளித்துவ வர்த்தகப் பிரிவினரேகூட இன்று நம்பிக்கை இழந்துகிடக்கிறார்கள். எனவே, நம்பிக்கையோடும் துணிச்சலோடும் சிக்கல்களை அணுகும் ஓர் இளைஞனை மக்களின் மனம், தன்னியல்பாக மாற்றுச் சக்தியாக ஏற்றுக்கொள்கிறது.

அரசியல் களத்தில் கன்னையா ஏற்படுத்திவரும் அதிர்வலைகளை மற்ற அனைவரையும்விட அரசியல்வாதிகள் முன்கூட்டியே உணர்ந்து விட்டனர். எந்தவிதப் பின்னணியும் அற்ற ஓர் எளிய மாணவனால் மோடியின் பிம்பம் பலவீனமடைந்திருப்பது உண்மைதான் என்பதை பா.ஜ.க-வின் உள்வட்டாரம் ஒப்புக்கொள்கிறது. அதேசமயம், கன்னையா குமார் ஓர் எளிய மாணவராகவே நீடிக்கும்பட்சத்தில் அவரால் எந்தவித ஆபத்தும் நேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் பா.ஜ.க கணிக்கிறது. ஆனால், கன்னையா குமாரின் உரைகளையும் பேட்டிகளையும் ஊன்றி கவனிப்பவர்கள், அவர் ஒரு மாணவராகவே இருந்துவிடப்போவதில்லை என உறுதியாக நம்புகிறார்கள். அபூர்வமாகத் தோன்றியுள்ள இந்த நட்சத்திரம் நிச்சயம் ஒரு சூரியனாக விரிவடையும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், மாபெரும் சூதாட்டமும் சிக்கல்களும் நிறைந்த இந்திய அரசியலில் கன்னையா குமாரால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா?  இதற்கு கன்னையா குமார் சொல்லும் பதில் கவித்துவமானது. ``நான் ஒரு விவசாயியின் மகன். ஏதுமற்ற நிலத்தில் விதையைத் தூவி, அதில் இருந்து தாவரத்தை உருவாக்குவார்கள் எங்கள் விவசாயிகள். எனவே நம்பிக்கையோடுதான் எதையும் நான் அணுகுவேன்!''

ஏழைகளின் வரிப் பணம் எங்கே?

சங்கடமான கேள்விகளுக்கும் சிரிப்பைப் படரவிட்டு பதில் தருகிறார் கன்னையா குமார். அவரிடம் பேசியதில் இருந்து...

``நீங்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்துக்கொண்டு தேசத்துக்கு எதிராகச் செயல்படுவதாக ஒரு தரப்பு சொல்கிறதே?''   

``எந்தத் தரப்பு இதைக் கூறுகிறது? ஜே.என்.யூ-வில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தச் சமூகத்தில் பலவீனமானவர்கள். நாங்கள் வரி செலுத்துபவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். அவர்களின் வரிப் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா..? அந்தப் பணம், தேவையற்ற வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கும், விலையுயர்ந்த சூட்டுகளுக்கும் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. விளிம்புநிலையில் இருக்கும் ஓர் ஏழை மாணவனின் கல்விக்கு வரிப் பணத்தைச் செலவிடுவது என்பது எப்படி தேவையற்ற ஒன்றாகும்?''

``பிரதமர் மோடி, வலதுசாரி என்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் அவரை எதிர்க்கிறீர்களா?''

``நாங்கள் இடதுசாரி என்பதற்காக அவரை எதிர்க்கவில்லை. நாங்கள்தான் ‘Right' என்ற ஆங்கில வார்த்தையின் சரியான பொருளுக்கு உரியவர்கள். மோடி எல்லாருக்குமான இந்தியப் பிரதமர். அவர் பிரதமர் பதவியேற்கும்போது, சில சபதங்கள் செய்தார். ஆனால், அவர் அந்தச் சபதத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிட்டார். அதற்கு அவர் நியாயம் செய்ய வேண்டும்.'' 

``வெங்கையா நாயுடு சொல்வதுபோல், படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் என்ன?''

``நாயுடுஜியே ஏ.பி.வி.பி இயக்கத்தில் பங்கெடுத்தவர்; அதுனுடன் தொடர்ந்து இயங்கிவருபவர். நிறுவனத்தில் பிரச்னை இருக்கும்போது எதுவும் செய்யாமல், ஒரு மாணவன் எப்படி தொடர்ந்து படிக்க முடியும்? சுதந்திர காலக்கட்டத்தில், வழக்குரைஞர்கள் அவர்களது கடமையைச் செய்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாங்கள் இந்தச் சமூகத்தை அனைவருக்கும் உகந்த இடமாக மாற்ற முயற்சிக்கிறோம். இதுபோன்ற கருத்துக்களால், நாங்கள் அரசியல் செய்யவில்லை, அவர்தான் அரசியல் செய்கிறார். சிவில் சமூகம் மேம்படுவதையும் தடுக்கிறார்.''