Published:Updated:

`முதல்வருக்கு நான் ரொம்ப நெருக்கம்!' - புதிய படத்தை வெளியிட்ட சேலம் ரவுடி

எம்.குமரேசன்
`முதல்வருக்கு நான் ரொம்ப நெருக்கம்!' - புதிய படத்தை வெளியிட்ட சேலம் ரவுடி
`முதல்வருக்கு நான் ரொம்ப நெருக்கம்!' - புதிய படத்தை வெளியிட்ட சேலம் ரவுடி

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரவுடி, சுசீந்தரன். இவர்மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இரு நாள்களுக்கு முன், சுசீந்தரனுக்கு 33-வது பிறந்தநாளாம். தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட  சுசீந்தரன் முடிவுசெய்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தொழில்முறை கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்தார். பட்டியலில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனும் இருந்தார்.  சுசீந்தரன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்ற கருணாகரன் , அவருக்கு கேக் ஊட்டியும் மகிழ்ந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரே ரவுடிக்கு கேக் ஊட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ, சேலம் மக்கள் அதிர்ந்தனர்.  உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு விஷயம் சென்றதையடுத்து, கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் கருணாகரனை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடி சுசீந்தரனுக்கு பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இந்தப் புகைப்படங்களை கருணாகரனே சேலத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள்,  போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் வரை தனக்கு செல்வாக்கு உண்டு என்பதைக் காட்டுவதற்காக இதுபோன்ற புகைப்படங்களை திட்டமிட்டு அவர் பரப்புவதாகச் சொல்லப்படுகிறது.  இவர்களைப் போன்றவர்களுக்கு முதல்வர் பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படங்கள் வெளியானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெரிந்தோ தெரியாமலோ ரவுடிக்கு பொன்னாடை போர்த்தியிருந்தாலும், தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்ற புகைப்படங்களைப் பரப்பிவருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.