என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

'அரைக் காசு என்றாலும் அரசாங்க வேலை' என்ற பெருமைக்கு இப்போதும் மரியாதை உண்டு. அரசுப் பணிக் கனவுள்ள பல லட்சம் இளைஞர்கள், அதற்கான தேர்வில் ஜெயிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் சொல்லி மாளாதது. பணியில் அமரும் அவர்களின் திறமையைப் பொறுத்தே அரசு இயந்திரத்தின் சுழற்சி அமையும்.

இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்யும் 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்' இப்போது புயலில் சிக்கி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அதன் 14 உறுப்பினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்திய செய்தி, அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது.

அரசுப் பணித் தேர்வுக்கான கேள்வித்தாள்கள், பெரும்புள்ளிகளிடம் இருந்து வந்த சிபாரிசுக் கடிதங்கள், மர்மமான காசோலைகள் மற்றும் ரொக்கப் பணம் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றி உள்ள ஆதாரங்கள், தேர்வாணையத்தின் செயல்பாட்டை மொத்தமாக கேள்விக்கு இலக்காக்கிவிட்டது.

'இதுநாள் வரை தன்னாட்சியுடன் செயல்பட்டு வந்த தேர்வாணையம், மற்ற அரசு அலுவலகங்கள்போலவே இனி லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வைக்குள் வரும்' என்று புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே இந்த அதிரடிச் சோதனை அரங்கேறி இருக்கிறது. இதனாலேயே, 'அண்மையில் நடந்த ஆட்சி மாற்றமும்... அதையடுத்துத் தீர்க்கப்படும் அரசியல் கணக்குகளும்... அந்த வெப்பத்தில் குளிர்காயப் பார்க்கும் சில அதிகாரிகளின் சூழ்ச்சியும்தான் இந்த சோதனைகளுக்குப் பின்னாலும் இருக்கிறது' என்று ஒரு செய்தி கசிகிறது.  

நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், கணக்குத் தணிக்கைத் துறை ஆகியவை போலவே... இந்தத் தேர்வாணையமும் எவ்வித அரசியல் மிரட்டல்களுக்கும் இணங்கும் நிர்பந்தங்கள் இன்றி, நெருப்பை நிகர்த்த நேர்மையோடு செயல்பட வேண்டிய உயரிய அமைப்பு. அப்போதுதான் அதன் புனிதம் காக்கப்படும்; தகுதியுள்ள இளைஞர்களின் அரசுப் பணிக் கனவும் நிறைவேறும்.

தேர்வாணைய உறுப்பினர்கள் அளவற்ற அந்த சுதந்திரத்தை, தங்கள் சுயலாப நோக்கத்துக்குப் பயன்படுத்தத் துணிந்தால்... ஓட்டுப் போட்டு தங்களைப் பதவியில் அமரவைக்கும் மக்களையே சுரண்டிச் சாப்பிடும் 'அரசியல்' துரோகத்தைவிடப் பன்மடங்கு கொடிய நம்பிக்கைத் துரோகம் அது!