Published:Updated:

உதயமாகிறதா எம்.ஜி.ஆர் அம்மா கழகம்? - டி.டி.வி.தினகரனின் `50,000’ பிளான்

நமது நிருபர்
உதயமாகிறதா எம்.ஜி.ஆர் அம்மா கழகம்? - டி.டி.வி.தினகரனின் `50,000’ பிளான்
உதயமாகிறதா எம்.ஜி.ஆர் அம்மா கழகம்? - டி.டி.வி.தினகரனின் `50,000’ பிளான்

அ.தி.மு.க-வை கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்துக்குத் தள்ளப்பட்ட டி.டி.வி.தினகரன் தரப்பினர், புதிய கட்சியைத் தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் என்ற இலக்கோடு புதிய கட்சிக்காக உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு சரிசெய்துள்ளனர். இருப்பினும், சசிகலா தரப்பினரால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்தவுடன், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இதனால், அவர்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு, நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று, அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். தற்போது, தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். தினகரனை ஆதரிக்கும் முக்கிய நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. அதில் சிலர் வீழ்ந்துள்ளனர். தினகரனுக்குப் பதிலடிகொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அவரது ஆதரவாளர்களைக் கூண்டோடு நீக்கிவருகின்றனர். காலியாக உள்ள பதவிகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் அ.தி.மு.க தலைமை ஈடுபட்டுள்ளது. 

இரட்டைத் தலைமையுடன் செயல்படும் அ.தி.மு.க-வில் அவ்வப்போது முட்டல் மோதல் சம்பவம் நடந்துவருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டத்தில்கூட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரடியாக மோதிக்கொண்டனர். மீனவரணி சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமாரை வறுத்தெடுத்தார் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி. அதுபோல, வக்பு போர்டு விவகாரத்தில், அன்வர்ராஜா எம்.பி-க்கும் எம்.ஜி.ஆர் மன்ற மாநிலச் செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கும் இடையே கருத்து மோதல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. இது, எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் எதிரொலித்தது. அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்தாலும், மனதளவில் நிர்வாகிகள் இணையவில்லை என்பதை பல சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு மதுசூதனன், அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் கொடுத்த பரபரப்புக் கடிதமே அதற்கு சாட்சி. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கூச்சல், குழப்பத்தை சமாளிக்கவே ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அதிக நேரம் செலவழிக்கின்றனர். சமீபத்தில், கரூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது, அ.தி.மு.க-வில் நீண்ட விவாதத்துக்கு வழிவகுத்தது.

 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை தினகரன் தரப்பினரும் அ.தி.மு.க-வினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்ற தினகரனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால், தினகரனுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, அ.தி.மு.க விவகாரத்திலும் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று தினகரன் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் அ.தி.மு.க-வில் இல்லை. இதனால், புதிய கட்சி தொடங்குவதுகுறித்து தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார். மூன்று கட்சிப் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. அதில், எம்.ஜி.ஆர். அம்மா கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தினகரன் தரப்பினர் சொல்கின்றனர். புதிய கட்சி தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து சில ஆலோசனைகளை டி.டி.வி.தினகரன் பெற்றுள்ளார். 

 இதையடுத்து, தினகரன் தரப்பிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உறுப்பினர் படிவங்களும் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கட்சி தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50,000 பேரை சேர்க்க வேண்டும் என்று தினகரன் தரப்பினருக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதனால், உறுப்பினர் படிவத்தோடு தினகரன் ஆதரவாளர்கள் ஆள் பிடிக்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், தினகரனுக்கு பாதகமான தீர்ப்பு வந்தால், புதிய கட்சியை அவர் தொடங்குவார் என்று சொல்கின்றனர், தினகரனுக்கு நெருக்கமானவர்கள். 

 புதிய உறுப்பினர் சேர்க்கையால் தினகரனின் ஆதரவளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். அ.தி.மு.க-வை கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த அவர்கள், புதிய கட்சி தொடங்குவதை விரும்பவில்லை. இதனால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பல மாவட்ட நிர்வாகிகள் ஆர்வமில்லாமல் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே, அ.தி.மு.க-வில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ள அ.தி.மு.க-வை இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுவருகின்றனர். அதற்குப் போட்டியாகத்தான் தினகரன், உறுப்பினர்களைச் சேர்த்துவருகிறார்.

இதுகுறித்து தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறுகையில், 'அ.தி.மு.க-விலிருந்து தினகரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டுவருகின்றனர். இதனால், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதோடு, உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்துவருகிறது. தினகரனின் அடுத்தகட்ட முடிவுக்காகக் காத்திருக்கிறோம். புதிய கட்சியின் பெயர் இதுவரை முடிவாகவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள், புதிய கட்சியில் நிச்சயமாக இடம்பெறும்'  என்றார்.