Published:Updated:

“அ.தி.மு.க என்றால் ஊழல்!” - துரைமுருகன்

   “அ.தி.மு.க என்றால் ஊழல்!” - துரைமுருகன்
“அ.தி.மு.க என்றால் ஊழல்!” - துரைமுருகன்

நா.சிபிச்சக்கரவர்த்தி

மீம்ஸ் பிரசாரங்கள் ஓவர்... ரியல் பிரசாரத்துக்கு அரசியல் களம் தயார். தமிழகம் முழுக்க தி.மு.க - அ.தி.மு.க மேடைகளில் முழங்க இருக்கும் துரைமுருகன் - நாஞ்சில் சம்பத் இருவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்டோம். பதில்கள் இதோ...

“அ.தி.மு.க-வின் ஐந்து வருட ஆட்சி எப்படி?”

துரைமுருகன்: “ஐந்து வருடம் இங்கே எங்கே ஆட்சி நடந்தது? ஏதாவது நடந்தால்தானே சொல்வதற்கு. அதிகார மையத்தில் இருந்தவர்கள் அனைவரும் சம்பாதித்துக்கொண்டார்களே தவிர, மக்களுக்கு ஒரு நல்லதுமே செய்யவில்லை. தமிழகம் எங்கும் கொலை, கொள்ளை, ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்கள்தான் நடந்தன. அ.தி.மு.க ஆட்சி வெறும் பூஜ்ஜியம்.”

நாஞ்சில் சம்பத்:
“விளிம்புநிலை மக்களை சமவெளிக்குக் கொண்டுவந்ததிலும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும், அச்சத்தில் இருந்தும், பசியில் இருந்தும், அறியாமையில் இருந்தும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்ததில் அம்மாவின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மாட்சிக்கு இதுவே போதுமானது.”

   “அ.தி.மு.க என்றால் ஊழல்!” - துரைமுருகன்

“மக்களிடத்தில் என்ன சொல்லி வாக்கு கேட்பீர்கள்?”

துரைமுருகன்: “இந்த அம்மா ஆட்சியில் நடந்தவை எல்லாமே முறைகேடுகள், ஊழல்கள்தான். மக்களிடம் இப்போது பேச ஆரம்பித்தாலே, தேர்தல் முடியும் வரை மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டே இருக்கலாம். அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகம் தாங்கும்.”

 நாஞ்சில் சம்பத்: “ `தமிழ்நாடு, அம்மாவின் கையில் பத்திரமாக இருக்கிறது... இன்னும் இருக்க வேண்டும். அதனால் அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்’ என்போம். அண்மையில் 42 லட்சம் மக்கள் கும்பகோணம் மகாமகத்துக்காகக் குவிந்தபோதும் ஒரு சின்ன அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. இப்படி சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுகிற ஆட்சி, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. அம்மா ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம். அம்மாவின் இமாலய சாதனையை எல்லாம் வீதிகள்தோறும் கொண்டுசெல்வோம்... வெல்வோம்.”

“தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் உள்ள வேறுபாடு என்ன?”

துரைமுருகன்: “DMK is a Movement; ADMK is a Party. Movement - ஜனநாயக நாட்டில் காலம் கடந்து வரலாறு கடந்து நிற்கும். Party - சில ஆண்டுகளில் காணாமல்போகும். அ.தி.மு.க காணாமல்போகும் காலம் வந்துவிட்டது.”

நாஞ்சில் சம்பத்: “தி.மு.க - தரகுக்கடை. அ.தி.மு.க - தமிழர்களின் கோட்டம். தி.மு.க - வர்த்தகப் பண்ணை. அ.தி.மு.க - வித்தகப் பாசறை. தி.மு.க - எலெக்‌ஷனுக்காகவும் கலெக்‌ஷனுக்காகவும் இயங்குகிற கட்சி. அ.தி.மு.க - சர்வீஸுக்காகவும் சேக்ரிஃபைஸுக்காகவும் இயங்கும் கட்சி. தி.மு.க - கொள்ளையர்களின் கூடாரம். அ.தி.மு.க - சாமானியர்களின் சகாப்தம்.”

“எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாடு?”

துரைமுருகன் : “சுத்த மோசம். அவர் சட்டமன்றத்துக்கு வருவதே இல்லை. எந்தவிதமான விவாதங்களிலும் பங்கேற்பது இல்லை. மன்றத்தில் மக்களுக்காக ஒரு கேள்விகூட எழுப்பியதே இல்லை. அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன பேசுவது எனப் புரியவில்லை. இதுதான் விஜயகாந்த்தும், அவரது கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடும்.”

நாஞ்சில் சம்பத்: “ஜனநாயகத்திலும் தீமை உண்டு என்பதற்கு ஓர் உதாரணம் விஜயகாந்த். முல்லைப் பெரியாறு உரிமையைக் காக்க சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியபோது, ஓர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் வாய் திறந்து பேசாமல் மெளனமாக இருந்தார். அம்மாவின் தயவால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர், தமிழக மக்களைப் பற்றி ஒரு நாள்கூட அவர் கவலைப்பட்டது இல்லை. சட்டமன்ற விவாதங்களிலும் பங்கெடுத்துக் கொண்டது இல்லை. கேள்விகளைத் தொடுத்தது இல்லை. சட்டமன்றத்துக்கு வருவதே இல்லை.”

“சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி பற்றிய அறிவிப்பு?”

துரைமுருகன்: “அது, அவர் கட்சியின் முடிவு. அதைப் பற்றி என்ன கருத்துச் சொல்வது?”

நாஞ்சில் சம்பத்:
“பழத்தோடு சேர்த்து கொட்டையையும் தின்றுவிட்டார் விஜயகாந்த். தன்னுடைய கட்சியை ஒரு பந்தயப் பொருளாக வைத்து சூதாடிய இவரைப்போல கேவலமான ஒரு தலைவரை சரித்திரம் இதுவரை சந்தித்தது இல்லை.”

“ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம், இந்தத் தேர்தலில் பயன் தருமா?”

துரைமுருகன்: “ ‘நமக்கு நாமே’ பயணத்தால் தமிழக மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ஆட்சியில் தங்களுக்கு என்னென்ன கொடுமைகள் நடந்தன என்பதை பட்டியல் போட்டு ஸ்டாலினிடம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். இந்தப் பயணம், மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.”

நாஞ்சில் சம்பத்:
“தி.மு.க-வில் அவருடைய இருப்பை உறுதிசெய்வதற்கு இந்தப் பயணம் பயன்படும் என நம்பினார். ஆனால், முதலமைச்சர் கனவில் மூழ்கி ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு மருமகன் சொல் கேட்டு தி.மு.க-வை அடகுவைத்தார் இந்த ஸ்டாலின். இவர் முதல்வர் பதவிக்குக் குறிவைக்க ‘முதல்வர் பதவியை ஸ்டாலினுக்குக் கொடுக்க முடியாது’ என்பதில் கருணாநிதி மிகத் தீவிரமாக இருப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. வாரிசு அரசியல் என்ற விஷவாயு தி.மு.க-வைக் காவு கேட்கிறது.”

“மக்கள் நலக் கூட்டணி?”

துரைமுருகன்: “இப்படி ஒரு கூட்டணி இருக்கா என்ன?” எனச் சிரித்தவர்... “ஆமா... ஆமா... தமிழகத்தில் ‘ம.ந.கூ’னு ஒரு கூட்டணி அமைந்திருப்பதாக எங்கோ கேள்விப்பட்டேன். இந்தக் கூட்டணி இப்போதும் இருக்கிறதா என எதற்கும் விசாரித்துக்கொள்ளுங்கள்” - சிரிக்கிறார்.

நாஞ்சில் சம்பத்: “ `மக்கள் நலத்துக்காக அந்தக் கூட்டணி’ எனச் சொல்கிறார்கள். நான்கு கட்சிகள் ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள். தமிழக அரசியலில் இது ஒரு புதிய முயற்சிதான். ஆனால், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதுபோல என் கண்ணுக்குத் தெரியவில்லை.”

   “அ.தி.மு.க என்றால் ஊழல்!” - துரைமுருகன்

“பா.ம.க?”

துரைமுருகன்: “இது ஒரு ஸ்டேஜ் ஷோ பார்ட்டி. அவங்க வழி தனி வழி.”

நாஞ்சில் சம்பத்: “இந்தக் கட்சியும் விளம்பரத்தை நம்பித்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்ற மந்திரத்தை நம்பி வட மாவட்டங்களில் மட்டும் அமைப்பு வைத்திருக்கிற கட்சி, தமிழகத்தை ஆள வேண்டும் என ஆசைப்படுவது தகுதிக்கு மீறிய ஆசை. ‘ஊழலற்ற நிர்வாகம்’ என்ற உபதேசத்தை அன்புமணி செய்கிறார். ஆனால், அன்புமணி சுகாதார அமைச்சராக இருந்தபோது அவருக்கு கீழே பணியாற்றிய ஊழியர் கேதன் தேசாய் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடந்தபோது 1,500 கிலோ தங்கமும் 2,500 கோடி ரூபாயும் கிடைத்து, நாட்டையே அதிரவைத்தது. `கீழே பணியாற்றிய அதிகாரியின் வீட்டிலேயே இவ்வளவு செல்வம் என்றால், அந்தத் துறைக்குத் தலைமை தாங்கிய அன்புமணி எத்தனை கோடி அடித்திருப்பார்?’ என எல்லோரும் கேட்கிறார்கள்.”

“தமிழகத் தேர்தல் களத்தில், இந்த முறை பல முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்களே?’’

துரைமுருகன்: “ஜல்லிக்கட்டு போட்டின்னா பல காளைகள் வரத்தான் செய்யும். சில காளைகள் என்ன செய்வது என்றே தெரியாமல் திருதிருனு முழிச்சுட்டு அடிவாங்கும். சில காளைகள் களத்துலயே தெம தெமனு நிக்கும். சில காளைகள் சீறி ஓடி வெற்றிபெறும். அதுபோலத்தான் தற்போதைய தேர்தல் களமும். தி.மு.க என்ற திறமையான காளை வென்று வரும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.”

நாஞ்சில் சம்பத்: “முதல்வர் பதவி காலி இல்லை. அம்மாவைப் பொறுத்தவரை இந்தப் பதவியைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதுதான். முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு தங்களுக்கு இல்லை எனத் தெரிந்தும் களத்தில் நிற்கிற அசாத்தியத் துணிச்சலை நினைத்தால் பாராட்டத்தான் வேண்டும்.”

“தி.மு.க-வின் ஆட்சியில், மதுரை தினகரன் அலுவலக எரிப்பில் மூன்று ஊழியர்கள் பலி. அ.தி.மு.க ஆட்சியில், தர்மபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவிகள் பலி?”

துரை முருகன்: அதிர்ந்தவர் “பார்த்தீங்களா... எக்குத்தப்பா கேட்கிறீங்களே? இந்தக் கேள்விக்கு, இப்படி பதில் எழுதிக்கோங்க. நீதிமன்றத்தில் வழக்கு நடந்துட்டு இருக்கு. அதைப் பற்றி எதுவும் பேச முடியாது. அவ்வளவுதான்.”

நாஞ்சில் சம்பத்: “இப்ப இந்தக் கேள்வி தேவையா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. அடுத்த கேள்வி.”

“ஊழல் குற்றச்சாட்டில் எந்தக் கட்சிக்கு முதல் இடம், தி.மு.க-வுக்கா... அ.தி.மு.க-வுக்கா?”

துரைமுருகன்: “இதில் என்ன சந்தேகம்... அ.தி.மு.க-தான். முதல்வராக இருக்கும்போதே நீதிமன்றம் விசாரித்து, ‘இவர் ஊழல் செய்திருக்கிறார்... குற்றவாளி’ எனத் தீர்ப்பு வழங்கி சிறையில் அடைத்தது. இதைவிட ஊழலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்? ஊழல் என்றாலும் அ.தி.மு.க என்றாலும் ஒன்றுதான்.”

நாஞ்சில் சம்பத்:
“இந்தத் தேசத்தின் பாதுகாப்பையே ஊழலால் அசைத்துப்பார்த்தது தி.மு.க-தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்தத் தேசத்தின் கட்டுமானத்தையே தகர்த்தெடுத்த கட்சி தி.மு.க. ஆனால், அம்மாவின் மீது போடப்பட்ட 12 வழக்குகளும் பொய் வழக்குகள் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி போட்ட பொய் வழக்கில், அம்மா வென்று வருவார். ஊழலுக்காக ஓர் ஆட்சி கலைக்கப்பட்டதும், அதற்காக சர்க்காரியா கமிட்டி அமைக்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான். இதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.”

“பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா, கல்யாணப் பெண்ணுக்கும் அம்மா ஸ்டிக்கர்... இருவரில் யாருக்கு தற்புகழ்ச்சி அதிகம்?”

துரைமுருகன்:
“எங்க தலைவருக்கு நாங்கள் பாசத்தால் பாராட்டு விழா எடுப்பதை யாரும் தவறு எனச் சொல்ல முடியாது. இதனால் யாரும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளத்தில் சென்னை மிதந்துகொண்டிந்தபோது நிவாரணப் பொருட்களில் எல்லாம் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு அராஜகம் செய்தார்கள். அரசுத் திட்டங்கள், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் அந்த அம்மாவின் படம்தான். ஏன் சட்டமன்றத்தை எடுத்துக்கொள்ளுங்கள்... முழு நேரமாக ஜெயலலிதாவின் துதிபாடுதலைத் தவிர வேறு ஏதாவது நடந்ததா? ஜெயலலிதாவுக்கு, தன்னைப் புகழ்ந்து பேசுவது எப்போதுமே பிடித்த ஒன்று. எங்கள் தலைவருக்கு அல்ல.”

நாஞ்சில் சம்பத்: “அரசாங்கத்தில் நாட்டு மக்களுடைய ஒரு காசுகூட வீணாகச் செலவழிந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அக்கறை காட்டுவார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் கூட்டுக் குடிநீர் திட்டமாகட்டும், மெட்ரோ ரயிலைத் திறந்துவைப்பதாகட்டும், அம்மா காணொளிக் காட்சியின் மூலம் திறந்துவைத்ததில் இருந்தே அறிந்துகொள்ளலாம். விளம்பரங்களை விரும்பாத முதல்வர், அம்மா. இன்று சிறந்த ஆட்சி கொடுத்தும் யாரையும் பாராட்டி விழா நடத்த அம்மா அனுமதி கொடுக்கவில்லை. ஏதோ ஒரு திருமண வீட்டில் நெற்றிப்பொட்டில் முதலமைச்சர் படத்தை ஆர்வம் காரணமாக ஒரு கழகத்தின் தொண்டன் கட்டியதைக் குறையாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை.”
 

அடுத்த கட்டுரைக்கு