Published:Updated:

தோப்பூரில் கட்சி தொடங்கிய விஜயகாந்துக்கும், ஒத்தக்கடையில் தொடங்கிய கமலுக்கும் என்ன வித்தியாசம்?

தோப்பூரில் கட்சி தொடங்கிய விஜயகாந்துக்கும்,  ஒத்தக்கடையில் தொடங்கிய கமலுக்கும் என்ன வித்தியாசம்?
தோப்பூரில் கட்சி தொடங்கிய விஜயகாந்துக்கும், ஒத்தக்கடையில் தொடங்கிய கமலுக்கும் என்ன வித்தியாசம்?

'சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? சினிமாக்காரர்கள் சினிமா எடுக்கட்டும்... ஏன் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்?' இரண்டுமே நீண்ட காலமாக இருக்கும் வாதங்கள்தாம். ஆனால், பலர் வந்து நாட்டை ஆண்டிருக்கிறார்கள். பலர் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். தமிழக அரசியலில், கடைசியாக சினிமாவிலிருந்து வந்து சட்டமன்றத்தில் செல்வாக்காக இருந்தவர் என்றால் அது விஜயகாந்துதான். 21-2-2018 அன்று  கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் எனப் பல்வேறு இந்திய தலைவர்களின் ஆதரவோடு மேடையேறினார் கமல்ஹாசன். 2005- ம் ஆண்டு கட்சியை அறிவிக்க விஜயகாந்த் மேடையேறியதற்கும், இப்போது கமல் மேடையேறியிருப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. 

மதுரையை அடுத்த தோப்பூருக்கும், மதுரையில் உள்ள ஒத்தக்கடைக்கும் 25 கி.மீட்டர்கள்தாம் வித்தியாசம். 2005-ம் ஆண்டு தோப்பூரில் கட்சியை அறிமுகம் செய்த விஜயகாந்துக்கு லட்சக்கணக்கான கூட்டம் கூடியது. அன்று 3 மணிக்கெல்லாம் விழா மேடை நிரம்பிவிட்டது. 4 மணிக்கெல்லாம் விஜயகாந்த் விழா நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். மேடையில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சுந்தர்ராஜன், ராமு வசந்த் ஆகியோர் விஜயகாந்த் அருகில் அமர்ந்திருந்தனர். 5 மணிக்கே கூட்டம் ஆரம்பித்தாலும் இரவு 9:32 மணிக்குதான் ராசி பார்த்து கட்சியின் பெயரை அறிவித்தாராம் விஜயகாந்த். காரணம் கூட்டுத்தொகை 5 வர வேண்டும் என்பது ஜோசியர் கணிப்பாம். 

மைக் பிடித்த விஜயகாந்த் பேசியது எல்லாம்தான் விஜயகாந்தை மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதியாக நிலை நிறுத்தியது. ''இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே'' என்று ஆரம்பித்தார். ''உன் கட்சியோட கொள்கை என்னய்யானு ரொம்ப பேர் கேட்குறாங்க. அதை விலாவாரியா என்னால சொல்ல முடியும். எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடணும், சொந்த வீட்டுல தூங்கணும், அவங்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கணும், பணம் காசு மேல எனக்கு எப்பவுமே ஆசை இருந்தது கிடையாது. அதுனாலதான் என் பொறந்த நாளைக்கு தையல் மெஷின், மூணு சக்கர வாகனம்லாம் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். இதைக் கொடுத்து ஓட்டு கேட்கப்போறேன்னு சொன்னாங்க. அப்படிச் சொன்னவங்க எதுவுமே வாங்கிக் கொடுக்கலையே. நிச்சயமா எனக்குத் தொல்லைகள் இனி அதிகரிக்கும். வருமான வரித்துறை வெச்சு மிரட்டுவாங்க. என்கிட்ட போராட்டக் குணம் அதிகமா இருக்கு. இவங்களுக்காக நான் என்னை மாத்திக்க மாட்டேன்'' என ஆவேசமாகப் பேசியதுதான் அவருக்கு சட்டமன்றத்தில் இடம் கொடுத்தது. 

கட்சியின் பெயரை நீண்ட பேச்சுக்குப் பின் ஒரு பில்டப்போடு கூறினார் விஜயகாந்த். ''தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். திராவிடப் பாரம்பர்யம் நம் ரத்தத்தில் ஊறியுள்ளது. திராவிட மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாடும் சரி இந்தியாவும் சரி இன்னும் முன்னேறவில்லை. முற்போக்கு சிந்தனை வேண்டும். அதனால்தான் கட்சிக்கு இந்தப் பெயர் வைத்துள்ளேன்'' என்று நிறுத்தி நிதானமாக கட்சியின் பெயரை அழகாக விளக்கினார் விஜயகாந்த். 

காவிரி பிரச்னையைப் பேசிய விஜயகாந்த், ''இவங்களுக்கு பதவிதான் முக்கியம், என்ன துறை வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்க. ஆனா மக்களுக்கு என்ன வேணுங்கறதைப் பத்தின கவலையோ அக்கறையோ யாருக்கும் இல்லை. அவர்களுக்கு தே.மு.தி.க பாடம் கற்பிக்கும்'' என்று முழங்கினார். சிவப்பு, கறுப்பு கொடியில் மஞ்சள் நிற வட்டம்; அதில் ஒரு தீபம் உள்ள கொடியை அறிமுகம் செய்தார். ’உண்மையிலேயே விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு படைச்சவர்னு நிரூபிச்சுட்டார்’ங்குற விமர்சனத்தைப் பெற்றார்.

இப்போது ஒத்தக்கடையில் கமலின் கூட்டம் பெரிதுதான் என்றாலும் விஜயகாந்த் அளவுக்கு இல்லை. ஆனால், கமல் விஜயகாந்தைவிட உச்ச நட்சத்திரம். அன்று டிஜிட்டல் உலகம் சிறியது இன்று டிஜிட்டல் உலகம் பெரியது. அதனால் பலருக்கு ஃபேஸ்புக் லைவ் கூட்டம்தான் பொதுக்கூட்ட எண்ணிக்கை என்றாகிவிட்டது. ஆனாலும் அன்று மேடையேறிய விஜயகாந்துக்குப் பின்னால் யாருமே இல்லை. இன்று மேடையேறும் கமல்ஹாசனுக்கு பினராயி விஜயனின் வீடியோ, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆவேசப் பேச்சு என எல்லாமே தேவைப்படுகிறது. 

பொதுக்கூட்டத்துக்கு முன்பாக விஸ்வரூபம் பாடல் ஒலிக்க மேடைக்கு கமல் வருகிறார். முதலில் கொடியேற்றுகிறார். அதன்பின் தனி ஆளாக மேடையேறி கட்சியின் பெயரை அறிவித்தவுடன் கைத்தட்டல்கள்... 'இருக்கட்டும்' என்கிறார். ''மக்கள் கட்சி இது, மக்கள் நீதி மய்யம்'' என்றும் அழுத்திச் சொல்கிறார். கட்சிப் பெயரை அறிவித்த பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனுடன் பொதுக்கூட்ட மேடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். நண்பர்கள், திரைப் பிரபலங்களுக்கு மேடையில் இடமளிக்கப்படுகிறது. பினராயி விஜயன் வீடியோ மூலம் வாழ்த்துகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாற்றத்தை முன்னிறுத்தி கமலை முன்மொழிகிறார். 'ரியல் லைஃப் ஹீரோ' என கமலைப் புகழ்ந்து பேசுகிறார். 

பின்னர் பேசிய கமலஹாசன், '' நான் மதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசும்போது `உங்கள் கட்சிக் கொள்கை என்ன...’ என்று கேட்டார். இடதா, வலதா என இசங்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதே கொள்கை என்றேன். உடனடியாகச் செயலில் இறங்குங்கள் என்று அவர் வாழ்த்தினார். கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நல்ல கல்வி, தரமான கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் போய்ச்சேர வேண்டும். சாதியையும், மதத்தையும் சொல்லிச்சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு பணம் பற்றாக்குறை இல்லை. மனம்தான் பற்றாக்குறை. 

கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள், 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவிலிருக்கும் நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். உற்றுப்பார்த்தீர்கள் என்றால், அதில் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். நீங்கள் இடதா, வலதா  என்று கேட்கிறார்கள். அதற்காகத்தான் பெயரிலேயே மய்யத்தை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொன்னதைக் கலந்து எங்கள் கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்'' என்றார். ''இந்தக் கூட்டத்துக்கு இது போதும். தோண்டித்துருவி கேட்பவர்களுக்குப் புத்தகம் போட்டுத் தரும் அளவுக்குக் கொள்கைகள் வைத்துள்ளோம்'' என்று கூறி முடித்தார்.

காவிரிப் பிரச்னை குறித்துப் பேசும்போது தண்ணீர் என்ன ரத்தமே வாங்கி தருகிறேன். ரத்தம் என்றால் வன்முறை அல்ல ரத்த தானத்தை சொன்னேன் என்று வழக்கமான ட்விட்டர் பாணியில் பேசினார். பின்னர் பிரச்னைக்குத் தீர்வு உட்கார்ந்து பேசினால்தான் கிடைக்கும் சம்பந்தப்பட்டவர்களுடன் உட்கார்ந்து பேசுவோம் என்றார்.

விஜயகாந்த் மக்களிடம் சென்று, நேரடியாக மக்களுக்கு உதவும் விசயங்களைப் பேசியதால்தான் மக்கள் மனதில் நின்றார். மக்கள் அவருக்கு வாக்களித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரைக்கும் கொண்டு சென்றார்கள் என்பது ஆக்டிவாக இருந்த விஜயகாந்தைப் பார்த்த எல்லாருக்குமே தெரியும். இன்று கமல், உட்கார்ந்து பேசுவோம் எனப் பழைய பஞ்சாங்கமே வாசிப்பதை மக்கள் எந்த அளவுக்கு விரும்புவார்கள் எனத் தெரியவில்லை. 'மக்கள் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் மாற்றமாக இருங்கள்' என்பதே இன்று பலரின் கோரிக்கையாக உள்ளது. இது கமலுக்கு மட்டுமில்லை எல்லா புதுமுக அரசியல்வாதிகளுக்குமே பொருந்தும்!