Published:Updated:

ஜெயலலிதாவுக்குப் பிடித்த வக்கீல் யார் தெரியுமா? #Jayalalithaa

ஜெயலலிதாவுக்குப் பிடித்த வக்கீல் யார் தெரியுமா? #Jayalalithaa
ஜெயலலிதாவுக்குப் பிடித்த வக்கீல் யார் தெரியுமா? #Jayalalithaa

எவ்வளவு சிறந்த பேச்சாளராக இருந்தாலும் ஓரளவு வரைதான் அவரது பேச்சை ரசிக்க முடியும். மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனால்? ஒன்று, கேட்பவர்கள் எழுந்து போய் விடுவார்கள். அப்படித் தப்பித்துப் போக முடியாத நிலையில் அங்கே உட்கார்ந்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருப்பவர்கள் தூங்கிவிடுவார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும், நஞ்சாகும் என்பார்கள். ஒருவர் தொடர்ந்தாற் போல் 120 மணிநேரம் இடைவேளையே இல்லாமல் பேசியிருக்கிறார் என்றால் அவரைப்பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?

அப்படிப் பேசியவர் லூயீ பர்னார்ட் (1788 - 1858) என்ற புகழ் பெற்ற பிரெஞ்சு வக்கீல். பிறருக்கு வெறுப்பூட்டி தாள முடியாத அளவிற்கு சலிப்பு உண்டாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல. தமது கட்சிக்காரரின் உயிரைக் காப்பாற்றவே அப்படிச் செய்தார்.

1816-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் தளபதி ஜூன் ட்ராவோட் மீது ராஜதுரோகம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவ்வாண்டு மார்ச் மாதம் ரென்ஸ் என்ற ஊரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் தளபதி ட்ராவோட் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடந்தது. ட்ராவோட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் சில மணி நேரங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறி விட்டார்கள்.

ட்ராவோட்டின் வக்கீலாக லூமீ பர்னார்ட் வாதாடினார். பிரான்ஸ் நாட்டு மன்னரிடம் கருணை மனு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை மன்னர் பரிசீலித்து பதில் கூறும் வரை மரண தண்டனையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தமது கட்சிக்காரரின் சார்பில் ஒரு கோரிக்கையை நீதி மன்றத்தின் முன் வைத்தார்.

மன்னர் வர்சேயில்ஸ் என்ற ஊரில் இருந்தார். ரென்ஸ் நகரத்திலிருந்து வர்சேயில்ஸ் வரை குதிரை வண்டியில் பயணம் செய்து திரும்புவதற்கு ஐந்து நாள்களாகும். மன்னரைச் சந்திக்க தளபதி ட்ராவோட்டின் மனைவி புறப்பட்டு விட்டார். அவர் திரும்பி வரும் வரை ஐந்து நாள்களுக்கு மரண தண்டனையை ஒத்தி வைக்க இயலாது என்று நீதி மன்றம் வக்கீலுடைய கோரிக்கையை அனுமதிக்க மறுத்து நிராகரித்துவிட்டது.

வக்கீல் இன்னொரு கோரிக்கையை கோர்ட்டுக்கு முன் வைத்தார். தமது முதல் கோரிக்கையை நீதிமன்றம் ஏன் அனுமதிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி, அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

பர்னார்ட் தமது நியாய வாதத்தைத் தொடங்கினார். தமது முழு விவாதத் திறமையையும், சட்ட அறிவையும், சக்தியையும் செலவிட்டு நம்ப முடியாத அளவிற்கு நீண்ட நேரம் வாதாடிக்கொண்டே இருந்தார். தொடர்ந்தாற்போல் ஐந்து நாள்கள், ஐந்து இரவுகள் பேசினார். ஒரு நிமிடம் அவர் தமது பேச்சை நிறுத்தியிருந்தால்கூட, நீதி மன்றம் மேற்கொண்டு வாதம் செய்ய அனுமதிக்க மறுத்திருக்கும். உடனே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.

இடையிடையே நீதிபதிகள் அவ்வப்பொழுது மாறிக்கொண்டிருந்தார்கள். ஒரு நீதிபதி பெஞ்சில் உட்கார்ந்து தூங்குவார். வக்கீல் பேசிக்கொண்டே இருப்பார். அந்த நீதிபதி குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு எழுந்து போய்விடுவார். அவருக்குப் பதிலாக பெஞ்சில் அமர்ந்து தூங்குவதற்கு அடுத்த நீதிபதி வருவார். வக்கீல் மட்டும் பேசிக்கொண்டே இருப்பார்.

120 மணி நேரங்களுக்குப் பின்னர் தளபதியின் மனைவி திரும்பினார். அவரது கையில் மன்னர் கொடுத்திருந்த மன்னிப்புப் பத்திரம் இருந்தது. வக்கீல் பர்னாட்டின் முகம் களைப்பால் சோர்ந்து போயிருந்த போதிலும், அதில் வெற்றிப் புன்னகை பூத்தது. தமது கட்சிக்காரரின் உயிரைக் காப்பாற்றி விட்டார். இந்த வழக்கு முடிந்த பிறகு, வக்கீலால் பெருத்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நீதிபதி அவருடன் தங்கள் கணக்கைத் தீர்த்துக்கொண்டார்கள்.

''நீதிமன்றத்தின் கடமையைச் செய்ய விடாமல் ஏமாற்றி தடுத்த குடும்பத்திற்காக" வக்கீல் பர்னார்ட் சில நாள்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.


- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.  தகவல் உதவி: குறள் பித்தன்.