Published:Updated:

தற்கொலை செய்ய வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்

தற்கொலை செய்ய வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
தற்கொலை செய்ய வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
தற்கொலை செய்ய வேண்டாம்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: காலம் கனியும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்க வேண்டும் என்றும், அதை விட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும்  திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக தஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் சம்பா பயிருக்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் கருகிய பயிரைக் கண்டு மனம் வெதும்பி, ஏற்கனவே குறுவைப் பயிரும் பொய்த்துப் போன நிலையில், வறுமையின் கொடுமை தாங்க முடியாமல், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்ற விவசாயிகளைப் பற்றிய பரிதாபகரமான செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.

19 ஆம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் நான் பேசும்போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போன ஏழு விவசாயிகளைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மாவட்ட செயலாளர்கள் மூலமாக உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தேன். அவ்வாறே அது வழங்கப்பட்டுள்ளது.

##~~##
அதற்குப் பிறகு நேற்று திருவாரூர் மாவட்டத்தில்  விவசாயி ஆர்.சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயி ரங்கசாமி ஆகியோர் உள்பட இதுவரை 9 பேர் தற்கொலை செய்துள்ளனர். இறந்து போகும் இந்த விவசாயிகளைப் பற்றி தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்களைக்காண அவர்களுக்கு நேரமில்லை. இதிலே இன்னும் கொடுமை என்னவென்றால், நாடாளுமன்றத்திலேயே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலே விவசாயிகள் யாரும் பயிர்கள் கருகியதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பேசியிருக்கிறார்கள்.
எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போதாவது எண்ணிப் பாருங்கள்.சம்பா பயிர் அடியோடு நாசமாகி கருகிகிடப்பது உண்மைதான். அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும், தற்கொலை செய்துகொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்தேன்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்த ஆட்சியிலே கோரிக்கை வைக்கப்பட்டால் அது ஏற்கப்பட்டு விடுமா என்ன? இந்த நிலையில் தமிழகத்திலே உள்ள பரிதாபத்திற்குரிய விவசாயிகளை எல்லாம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம், தற்கொலை செய்து கொண்டு செத்து மடியும் செய்திகள் இதுவரை வந்ததே கடைசியாக இருக்கட்டும். இனி எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்து கொண்டு சாகக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பயிர் கருகி சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், நீங்களும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டால், உங்கள் குடும்பத்தின் கதி என்ன? அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? விவசாயிகள் கண்ணீர் சிந்திடும் நிலை மாறும்; காலம் கனியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமே அல்லாமல்; விலை மதிப்பற்ற உயிரைப்போக்கிக் கொள்ளும் விபரீத முடிவை இனியாவது விவசாயிகள் யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்று தமிழக வேளாண் பெருமக்களின் கரம் பற்றி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொண்டு மாண்டதாக செய்தி வரவே கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள். எனது இந்த வேண்டுகோளை ஏற்று விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.