Published:Updated:
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு: பிரதமர் உறுதி


புதுடெல்லி: நாட்டில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதை தொடர்ந்து, டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை வெடித்தது.
இதனால் டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
##~~## |
இந்நிலையில் இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றும், மாணவர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்றாலும்,அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் நடைபெற்ற மோதல், வருத்தத்திற்குரிய சம்பவம் என்று குறிப்பிட்ட அவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நலம் பெற அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறினார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையும்,போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும், அமைதியை பேண போலீசாருடன் மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.