Published:Updated:

பெரியோர்களே... தாய்மார்களே! - 76

பெரியோர்களே... தாய்மார்களே! - 76
பிரீமியம் ஸ்டோரி
பெரியோர்களே... தாய்மார்களே! - 76

ப.திருமாவேலன்

பெரியோர்களே... தாய்மார்களே! - 76

ப.திருமாவேலன்

Published:Updated:
பெரியோர்களே... தாய்மார்களே! - 76
பிரீமியம் ஸ்டோரி
பெரியோர்களே... தாய்மார்களே! - 76

ண்ணாவை வழிமொழிந்து நெடுஞ்செழியன் பேசினார்; சம்பத் பேசினார்; சிற்றரசு பேசினார்; தர்மாம்பாள் பேசினார்; மதியழகன் பேசினார்; தில்லை வில்லாளன் பேசினார்; பராங்குசம் பேசினார்; சத்தியவாணி முத்து பேசினார்; அன்பில் தர்மலிங்கம் பேசினார்; சிவசாமி பேசினார்; பழனிச்சாமி பேசினார்; ராஜமாணிக்கம் பேசினார்; கே.ஆர்.ராமசாமி பேசினார்; தில்லை வடிவேலு பேசினார்; நாஞ்சில் மனோகரன் பேசினார்; சி.வி.எம்.அண்ணாமலை பேசினார்; இறுதியில் ஒலிபெருக்கி 27 வயதான அந்த இளைஞர் கையில் தரப்பட்டது. அந்த இளைஞர் பேசினார்.

‘‘வாழ்வு மூன்று எழுத்து; வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; வீரர் செல்லும் களம் மூன்று எழுத்து; களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து; அந்த அண்ணனைத் தலைமை ஏற்க வழிமொழிகிறேன்” - இப்படி அந்த இளைஞர் பேசி முடித்ததும் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ மைதானமே கைதட்டலால் அதிர்ந்தது. அண்ணா பேச வந்தார். ஆனால், கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர் இதயத்தில் அந்த இளைஞரின் வரவேற்பு ஒலித்துக்கொண்டே இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு 1951-ல் நடந்தபோது பேசிய அந்த இளைஞர்தான், 2016 சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வரும் கலைஞர் கருணாநிதி.

அதுவரை தமிழகம் கேட்காத குரல்; அதுவரை தமிழகம் உணராத தமிழ்; அதுவரை அண்ணா பார்க்காத ஆள். கருணாநிதியின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது. ‘‘உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும்?” என்று நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வுகொள்கிறான்” என்று எழுதச் சொன்னவர் கருணாநிதி. அவரை உச்சிக்குக்கொண்டு போய் உட்கார வைத்தது உழைப்பு.

பெரியோர்களே... தாய்மார்களே! - 76

அன்றைய தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்று அழைக்கப்பட்ட திருக்கோளிலி என்ற கிராமத்தில் விவசாயியாகவும் வித்வானாகவும் வைத்தியராகவும் கவிஞராகவும் வாழ்ந்த முத்துவேலருக்கு மகனாகப் பிறந்த கருணாநிதி, திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தனக்கான இடத்தைக் கேட்டு 12 வயதிலேயே, ‘‘எனக்கு நீங்கள் இடமளிக்காவிட்டால் கமலாலயக் குளத்தில் விழுந்து செத்துப் போய்விடுவேன்” என்று பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரிடம் மிரட்டி இடம்பெற்றவர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்ற ஆன்மிக பெருமை கொண்ட ஊரில், சதா கோயிலுக்கு மொட்டைபோடும் வேண்டுதல் செய்துகொள்ளும் அஞ்சுகம் அம்மாளுக்கு மகனாகப் பிறந்தாலும் பள்ளியில் படித்த பனகல் அரசர் பாடப்புத்தகம் கருணாநிதியின் சிந்தனையை, நீதிக்கட்சியின் சமூக நீதிக்குப் பக்கமாக மாற்றியது. ராஜாஜியின் முதல்கட்ட ஆட்சியில் இந்தி திணிக்கப்பட்டபோது 15 வயது மாணவனாக, ‘‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’’ என்று எழுதும் தமிழ் வாய்த்தது. கதை எழுதுவது, அதற்கு வசனம் எழுதுவது, அதையும் தானே நடிப்பது என்ற கலையில் தேர்ந்த கருணாநிதி, ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார். அந்தக் கையெழுத்துப் பத்திரிகைதான் 75 ஆண்டுகளையும் கடந்துவரும் ‘முரசொலி’ நாளிதழாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

‘‘கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக் கூட்டம்; கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை!” என்ற வரிகளை பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது கருணாநிதி நடத்திவந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்துக் காகத்தான். பள்ளிக் காலத்தில் சமூகத்தைப் படிக்கப்போனதால் மூன்றுமுறை பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி அடைந்த கருணாநிதி, எழுத்தும், பேச்சும், நாடகக் கலையுமே தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார்.

‘பழனியப்பன்’ என்ற நாடகத்தைத் திராவிட நடிகர் கழகம் என்ற பெயரில் தயாரித்து விழுப்புரத்தில் அரங்கேற்றினார் கருணாநிதி. புதுச்சேரியில் அதை அரங்கேற்றும்போது தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் மூலமாக பெரியாரின் அரவணைப்பு கிடைத்து ஈரோட்டில் ‘குடியரசு’ இதழில் துணை ஆசிரியர் ஆனார். ஓராண்டு காலம் இவரது எழுத்து ‘குடியரசு’ பரவிய இடமெல்லாம் பரவியது. சினிமாக்காரர் ஏ.எஸ்.ஏ.சாமி, கருணாநிதியை கொத்திச் சென்று ‘ராஜகுமாரி’ படத்துக்குக் கதை வசனம் எழுத வைத்தார். அடுத்த படம் ‘அபிமன்யூ’.

தேர்ந்தெடுக்கும் சொல்லுக்கு ஒரு மயக்கமும் வடிக்கும் வரிகளுக்கு ஒருவித நளினமும் அமைந்துவிட்டால் சினிமா தமிழ் வெல்லும் என்பதை கருணாநிதி உணர்ந்ததால், ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘மணமகள்’, ‘பராசக்தி’, ‘தேவகி’, ‘பணம்’, ‘திரும்பிப் பார்’, ‘நாம்’, ‘மனோகரா’, ‘மலைக்கள்ளன்’, ‘அம்மையப்பன்’, ‘ராஜா ராணி’, ‘ரங்கோன் ராதா’, ‘புதுமைப்பித்தன்’, ‘புதையல்’, ‘குறவஞ்சி’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘அரசிளங்குமரி’, ‘தாயில்லாப் பிள்ளை’, ‘இருவர் உள்ளம்’, ‘பூம்புகார்’, ‘பூமாலை’, ‘அவன் பித்தனா’ என 25 படங்களுக்கு கதை வசனம் எழுதி திரையில் மின்னினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியோர்களே... தாய்மார்களே! - 76

‘‘சர்க்கஸ்காரன் உயரத்தில் இருந்தாலும் அவனது சிந்தனை பூமியிலேயே இருக்கும் என்பதைப்போல தம்பி கருணாநிதி சினிமாவில் இருந்தாலும் சிந்தனை எப்போதும் அரசியலில்தான்” என்று ‘அன்பகம்’ திறப்பு விழாவில் அண்ணா சொன்னதைப்போல அரசியலில் கால் பதித்து நின்றார்.

தி.மு.க தொடங்கியபோது கழகத்தின் பிரசாரச் செயலாளர். கோவில் பட்டியிலும், தூத்துக்குடியிலும் கட்சியைத் தொடங்கிவைக்க அண்ணாவால் அனுப்பி வைக்கப்பட்டவர். திருச்சியில் பேச தன்னை அழைக்க வந்தபோது, ‘‘கருணாநிதியைவைத்து கூட்டம் நடத்து” என்று அண்ணாவே சொல்ல ஆரம்பித்தார். அண்ணாவுக்கு மாற்றாக மட்டுமல்ல, பல ஊர்களில் இவரே அண்ணாவாகப் பார்க்கப்பட்டார். கருணாநிதியைப்போலவும், கருணாநிதியைவிட நன்றாகவும் பேசக்கூடிய எத்தனையோ பேர் கழகத்தில் உண்டு. பேச்சாளராகவே இருந்து பேச்சாளராகவே செத்துப்போனார்கள். ஆனால், ஒரு பேச்சாளர் தலைவர் ஆனது கருணாநிதி மட்டும்தான். ஏனென்றால், அவரிடம் இருந்தது வெறும் பேச்சல்ல. அதை மீறி நின்ற செயல்.

நாடு முழுக்க ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. திருவையாறுக்கு வரும் முதல்வர் ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று தஞ்சை மாவட்டச் செயலாளர் கே.கே.நீலமேகத்திடம் கருணாநிதியும் மன்னை நாராயணசாமியும் போய்க் கேட்டார்கள். ‘‘கட்சி இங்கே இன்னும் வளரவே இல்லை. யாரும் வர மாட்டார்கள்” என்றார் நீலமேகம். இதையே சபதமாக ஏற்று இரவும் பகலுமாக 26 நாட்கள் தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வோர் ஊருக்கும் போய்ப் பிரசாரம் செய்து தொண்டர்களைச் சேர்த்து, காவல் துறையின் தடுப்புக் காவலை மீறி வெண்ணாற்றங்கரையில் உள்ள பள்ளி அக்ரஹாரத்தில் ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டிக் கைதானார் கருணாநிதி. ஆறு மாத காலம் அவரால் எழ முடியாத அளவுக்கு நோயில் படுத்தார். ஆனால், தஞ்சை மாவட்டம் முழுக்கக் கட்சியை வளர்த்தார்.

மும்முனைப் போராட்டத்தில் ‘டால்மியாபுரம்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையில் ‘கல்லக்குடி’ என்ற தாளை ஒட்டுவது மட்டும்தான் அண்ணாவின் கட்டளை. ஒட்டினார் கருணாநிதி. ஆனால், காவல் துறை அமைதியாக இருந்தது. சும்மா திரும்புவதற்காக போராட்டம்? ரயிலை மறிக்க தண்டவாளத்தில் படுத்தார். அண்ணாவுக்கே இதில் உடன்பாடு இல்லை. ஆனால், தமிழகமே திரும்பிப் பார்த்தது தி.மு.க-வை. 1957 தேர்தலில் நாகப்பட்டினத்தில் போட்டியிடவே தொகுதியைத் தயாராக வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால், அண்ணா அறிவித்தது குளித்தலை.
கவலையேபடவில்லை கருணாநிதி. குளித்தலையை தன்வசம் ஆக்கினார்.

1958-ம் ஆண்டுதான் தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ அதிகாரபூர்வமாகக் கிடைத்தது. அதற்கு முன்பே ‘உதயசூரியன்’ நாடகம் தயாரித்து ஊர் ஊராகக் கொண்டுபோய் அந்த நாடகத்தைப் போட்டு, சின்னத்தைப் பிரபலப்படுத்தி வைத்திருந்தவர் கருணாநிதி. தேவகோட்டை இடைத்தேர்தலில்தான் அதிகாரபூர்வமாக ‘உதயசூரியன்’ சின்னத்தில் முதன்முதலாக தி.மு.க நின்றது.

சென்னை மாநகராட்சித் தேர்தல். ‘‘30 பேரை நிறுத்தலாம்’’ என்றார் அண்ணா. ‘‘90 பேரை நிறுத்தலாம்’’ என்றார் கருணாநிதி. இவரின் பிடிவாதத்தால் சம்மதித்தார் அண்ணா. தி.மு.க 45 இடங்களைக் கைப்பற்றியது. கருணாநிதிக்குக் கிடைத்தது சாதாரண மோதிரமாக இருக்கலாம். ஆனால், தி.மு.க-வுக்குக் கிடைத்தது சென்னை மாநகரம். 1963 திருவண்ணாமலை இடைத்தேர்தலில் ப.உ.சண்முகம் வெல்வார் என்று அண்ணா நம்பிக்கை வைக்கவில்லை. கருணாநிதியின் உழைப்பை கடைக்கோடி தொண்டனும் உணர்ந்தது திருவண்ணாமலை வெற்றிக்குப் பிறகுதான். அதன் வெற்றிவிழாப் பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது. ‘‘இன்னும் நான்கு ஆண்டுகளில் பொதுத் தேர்தல் வரப்போகிறது. நாம் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாய் விகிதம் சுமார் 10 லட்சம் ரூபாய் வேண்டும். 10 லட்சம் ரூபாய் திரட்டினால்தான் வெல்ல முடியும். இன்றே நிதி வசூலைத் தொடக்கி வைக்கிறேன்” என்று கருணாநிதி அறிவித்தார். பொருளாளர் என்ற முறையில் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால், பொதுச்செயலாளர் அண்ணா திகைத்துப் போனார். 53 ஆண்டுகளுக்கு முன்னால் 10 லட்சம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை? 10 லட்சம் ரூபாய் அல்ல, 11 லட்சம் ரூபாய் திரட்டிக் காட்டினார் கருணாநிதி.


‘‘ஒரு கட்சியில் பலதரப்பட்டவர்கள் இருந்தாலும் அவர்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் திறமையுள்ளவர்கள் வேண்டும். தம்பி கருணாநிதி, அந்தச் சிறப்புகளை நன்கு பெற்றவர்களில் ஒருவர்” என்றார். 40 வயது கருணாநிதியை 60 வயது, 70 வயது மனிதர்களும் தலைவராக ஏற்றுக்கொள்ளக் காரணம் இந்த உழைப்புதான். கருணாநிதியின் கடந்தகாலச் செயல்பாடுகள் ஆயிரம் விமர்சனங்களுக்கு உரியவை. அதையும்தான் பார்க்க இருக்கிறோம். ஆனால், அவரே தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தி. அவரை ஆதரித்து ஒருவர் கட்சி நடத்தலாம் அல்லது எதிர்த்து ஒருவர் கட்சி நடத்தலாம். கருணாநிதி என்ற பெயரைச் சொல்லாமல் எவரும் கட்சி நடத்த முடியாது.

-குரல் கேட்போம்