Published:Updated:

சுனாமியின் கோரத்தாண்டவ நினைவுகள்...!

சுனாமியின் கோரத்தாண்டவ நினைவுகள்...!
சுனாமியின் கோரத்தாண்டவ நினைவுகள்...!

டந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கி கோர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற  சுனாமியின் துயரங்களும்,சோகங்களும் ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும்  சொந்தங்களையும்,உறவுகளையும் பறிகொடுத்தவர்களிடத்தில் நீங்கியபாடில்லை. 

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம்  தேதி,இதே கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கு மறுதினம், சக்தி வாய்ந்த நில  நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால்,  அதுவரை சுனாமி என்றால் என்ன? என்று தெரியாதவர்களுக்கு, ஆழிப்பேரலை தனது   கோர முகத்தை காட்டியது.

சுனாமியின் கோரத்தாண்டவ நினைவுகள்...!

இந்த சுனாமியால் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லந்து உள்ளிட்ட 14  நாடுகளில் மொத்தம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  உயிரிழந்தனர். இந்த சுனாமியால், இந்தோனேஷியா தீவு உருக்குலைந்து போனது.  அங்கு, சுமார், ஒரு லட்சத்து 30,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும், 37 ஆயிரம் பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.  இந்தோனேஷியாவிற்கு அடுத்தபடியாக, இலங்கையில் பெரும் இழப்பு ஏற்பட்டது.  இலங்கையில், 30,000க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறித்துச் சென்றது சுனாமி.

இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.தமிழகத்தில்  உள்ள 13 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது.கடற்கரையை ஒட்டியுள்ள சுமார்,  418 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அங்கு வசித்த,8,000 பேர் உயிரிழந்தனர்.  சுமார்,10,000 க்கும் அதிகமானோர் தங்களது வீடு உள்ளிட்ட உடமைகளை பறிகொடுத்து  வீதியில் நின்றனர்.இந்த சுனாமி தாக்குதலில், காணாமல் போன 846 பேரின் நிலை  என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

இதில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளானது.கன்னியாகுமரி,  மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர்  சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் சுனாமியில் இறந்தவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு  தினம்,சென்னை,கடலூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி,கன்னியாகுமரி உள்ளிட்ட  கடற்கரை பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பகம் சார்பில்  100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த 2004ம் ஆண்டு சுனாமியில்  உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்  சென்றனர்.

குமரி

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நினைவு  திருப்பலி நடத்தப்பட்டது. மேலும் மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு, கன்னி  யாகுமரியில் மவுன ஊர்வலமும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

மேல மணக்குடி புனித மாதா ஆலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடந்தது.  அதைத்தொடர்ந்து சுனாமியில் பலியானவர்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்துக்கு  ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.  அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பெண்கள் துக்கத்தை அடக்க முடியாமல் பலியானவர்களை நினைத்து கண்ணீர்  விட்டு கதறி அழுதனர். இதேபோல கொட்டில்பாடு கே.எஸ்.எஸ்.எஸ். காலனியில்  இருந்து இன்று காலை மவுன ஊர்வலம் தொடங்கியது. 199 பேர் ஒரே இடத்தில்  புதைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியை ஊர்வலம் அடைந்ததும் அங்கு பொதுமக்கள் மலர்  தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.