Published:Updated:

குதிரை, காளை, காஷ்மீர் ஆட்டுக்குட்டி... ஸ்டாலின் பிறந்தாள் விழா ருசிகரம்!

குதிரை, காளை, காஷ்மீர் ஆட்டுக்குட்டி... ஸ்டாலின் பிறந்தாள் விழா  ருசிகரம்!
குதிரை, காளை, காஷ்மீர் ஆட்டுக்குட்டி... ஸ்டாலின் பிறந்தாள் விழா ருசிகரம்!

குதிரை, காளை, காஷ்மீர் ஆட்டுக்குட்டி... ஸ்டாலின் பிறந்தாள் விழா ருசிகரம்!

புத்தகம், சால்வை, பூங்கொத்து என தி.மு.க. தொண்டர்கள் வரிசையில் நின்று, செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தொண்டர் ஒருவர் கொண்டு வந்த பரிசுப் பொருளை பார்த்து ஸ்டாலின் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்த ருசிகரம் பிறந்தநாள் விழாவில் நிகழ்ந்தேறியது.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்குப் படையெடுத்து வந்திருந்த கட்சித் தொண்டர்கள், ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்துச் சொல்லியும், ஆசி பெற்றும் வந்தனர். மார்ச் 1-ம் தேதி அதிகாலையிலேயே ஸ்டாலின் தன் குடும்பத்தாருடன் பிறந்தாளைக் கொண்டாடிவிட்டு, தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக கட்சித் தலைமையகமான அறிவாலயம் வந்தார். 

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர, மற்ற அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து, மேடையிலிருந்த ஸ்டாலினைச் சந்திக்க அனுப்பினார்கள். புத்தகங்கள், சால்வை எனத் தொண்டர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த  பரிசுப் பொருள்களுடன் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சிலர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனர். வரிசையில் காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் திடீரென ஆட்டுக்குட்டி சத்தம்கேட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர். அங்கு தொண்டர் ஒருவர், வெள்ளை நிறத்தில் ஆடு ஒன்றையும், அதன் குட்டிகள் இரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு நின்றதை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், ஆடுகளுடன் வந்த தொண்டரை தனியாக அழைத்துச் சென்று, 'வரிசையில் செல்ல வேண்டாம்; நீங்கள் தனியாகச் சென்றால் போதும்' என்று கூறி, அவரைத் தனியாக நிற்க வைத்தனர். தாய் ஆட்டில் 'D' என்றும், 'M' மற்றும் 'K' என மற்ற இரு ஆட்டுக்குட்டிகளிலும் பேனர்கள் குத்தப்பட்டிருந்தது. அந்த ஆடுகளைப் பிடித்துக் கொண்டு நின்ற தொண்டரைப் பார்த்தவுடன், அவர் யார் என்று நம்மால் உடனடியாக யூகிக்க முடிந்தது. ஆம்..., இதே நபர், கடந்த ஆண்டு ஸ்டாலின் பிறந்த நாளின்போது அவருக்கு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அரங்கிற்குள் கொண்டுவந்து மேடையில் ஏற்றியவர் என்பதை உணர்ந்து கொண்டோம். அவரிடம் நாம் பேசியபோது, “என்னுடைய பெயர் ஜாஹிர். நான் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தளபதி மீது அதிக பாசம் எனக்கு உண்டு. தாயுள்ளத்துடன் தளபதி இருந்து வருவதால், அதை உணர்த்தும்விதமாக தாய் ஆட்டையும், அதன் குட்டிகள் இரண்டையும் இந்தாண்டு அவருக்குப் பிறந்த நாள் பரிசாக அளிக்கக் கொண்டு வந்துள்ளேன். இந்த ஆடு, காஷ்மீர் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. மலைப் பகுதிகளில் வசிக்கும் 'வரையாடு' வகையைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் இரண்டடிக்கு மேல் வளர்வது அரிது. வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வரையாட்டை தளபதிக்குப் பரிசளிக்க முடிவு செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குதிரையைப் பரிசாக வழங்கினேன். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பிரச்னையில் தமிழகமே ஒன்று திரண்டதன் நினைவாக, காளையைப் பரிசளித்தேன். இந்த ஆண்டு ஆட்டுக்குட்டிகளைப் பரிசளிக்க உள்ளேன்” என்றார் உற்சாகமாக.

மேடையில் கூட்டம் குறைந்த பிறகு, ஆட்டுக்குட்டியுடன் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார் ஜாஹிர். ஸ்டாலினிடம் ஆட்டுக்குட்டிகளின் கயிறைக் கொடுத்ததும், அவரும் சிரித்துக்கொண்டே அதைப் பிடித்துக்கொண்டார். ஆட்டுக்குட்டிகளுடன் அறிவாலயத்தில் வலம்வந்த திருவண்ணாமலை தொண்டர் ஜாஹிரை, அங்கு குழுமியிருந்த மற்ற தி.மு.க தொண்டர்கள் அனைவருமே வித்தியாசமாகப் பார்த்தனர்...!

அடுத்த கட்டுரைக்கு