Election bannerElection banner
Published:Updated:

34 ஆண்டுகளில் 71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்திய `சகாயம்'! #PradeepKasni

34 ஆண்டுகளில் 71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்திய `சகாயம்'! #PradeepKasni
34 ஆண்டுகளில் 71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்திய `சகாயம்'! #PradeepKasni

34 ஆண்டுகளில் 71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்திய `சகாயம்'! #PradeepKasni

வால்களைச் சந்திக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே இல்லை. அதிலும் நேர்மையான கெடுபிடியான அதிகாரிகள் என்றால், பல முனைகளிலிருந்தும் நெருக்கடிகளைச் சந்தித்தேயாக வேண்டும். வளைந்துகொடுத்துப் போகத் தெரிந்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பதவி பூமேடை... அல்லாதோருக்கு தீமிதித்தல் போன்றது. சகாயம் ஐ.ஏ.எஸ் போலவே வடநாட்டிலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியல்வாதிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார். பிரதீப் காஸ்னி என்ற பெயரைக் கேட்டாலே, ஹரியானா மாநில ஊழல் பேர்வழிகள் அலறுவார்கள்.  

பிரதீப் காஸ்னி

முதலமைச்சரே பேசினாலும் வளைந்துகொடுக்கும் வழக்கம் பிரதீப் காஸ்னிக்குக் கிடையாது. `சரி' என்று உணர்ந்தால் மட்டுமே இவரிடமிருந்து ஃபைல்கள் நகரும். இல்லையென்றால், ஃபைல் மூடப்பட்டுவிடும். கெடுபிடியான ஆபீஸரை வைத்துக்கொள்ள எந்த முதலமைச்சர்தான் விரும்புவார்? விளைவு... பிரதீப் காஸ்னி 34 ஆண்டுகால சர்வீஸில் 71 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். சென்னை விமானநிலையத்தின் கண்ணாடிகள் உடைவதை நாம் எண்ணிக்கொண்டிருப்பதுபோல், பிரதீப்பின் டிரான்ஸ்ஃபரை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் ஹரியானா மக்கள். இந்தியாவிலேயே அதிக முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர்தான்!

ஒரு துறையில் ஆறு மாதம் இருந்துவிட்டால், இவரைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். பிரதீப்பை டிரான்ஸ்ஃபர் செய்வதில் மட்டும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கைகோத்துச் செயல்பட்டன. குறிப்பாக பாரதிய ஜனதா அரசு, பிரதீப்பை பணிமாற்றம் செய்வதில் புதிய சாதனையே நிகழ்த்தியது. 2014-ம் ஆண்டு ஹரியானா முதலமைச்சராக மோகன்லால் கட்டார் பதவியேற்ற பிறகு, 2016-ம் ஆண்டுக்குள் 12 முறை பணிமாற்றத்தைச் சந்தித்தார் பிரதீப். `ஊழலுக்கு எதிரான கட்சி' என்று கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா அரசில், நேர்மையான அதிகாரி சந்தித்த அவலம் இது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை இடமாற்றத்தை எதிர்கொண்டார் பிரதீப். எத்தனை டிரான்ஸ்ஃபர் வந்தாலும் நேர்மையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை.  மடியில் கனம் இல்லாததால் எந்த இடத்துக்கு மாற்றினாலும் அங்கே போய் திறம்படச் செயலாற்றுவார்.  

பிரதீப் காஸ்னி ஓய்வுபெற ஆறு மாதங்கள் இருக்கும்போது, இன்னும் குரூரமாக `இவரை என்ன செய்யலாம்?' என்று ஆலோசித்தது கட்டார் அரசு. இல்லாத இலாகாவுக்கு அவரை மாற்றியது. அதாவது, ஹரியானா மாநில நிலம் கையகப்படுத்தும் துறைக்கு அவரை ஸ்பெஷல் அதிகாரி ஆக்கியது. பிரதீப், தன் புதிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே எந்த அலுவலரும் இல்லை; ஃபைல்களும் இல்லை. அது அரசு அலுவலகம்போலவே காணப்படவில்லை.  பல நாள்கள் அலுவலகம் சென்றவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. அரசிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. முடிவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அவர் அந்த அதிர்ச்சியான தகவலைப் பெற்றார். 

அதில் ஹரியானா அரசு, 2008-ம் ஆண்டே இந்தத் துறையைக் கலைத்துவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இல்லாத துறைக்கு ஸ்பெஷல் ஆபீஸராக இவரை பணியில் அமர்த்தி, ஆறு மாதங்களுக்கான சம்பளத்தையும் வழங்காமல், கட்டார் அரசு பழிவாங்கியது. மார்ச் முதல் தேதி, சம்பளம் பெறாமலேயே பணியிலிருந்து அவர் விடையும் பெற்றார். பதவியில் இருக்கும்போதும்  போராட்டம்தான்... ஓய்வுபெற்ற பிறகும் சம்பளத்துக்காகப் போராடவேண்டிய நிலை. ஐ.ஏ.எஸ் அலுவலர் நிர்வாக ஆணையத்திடம் பிரதீப் புகார் அளித்துள்ளார். 

இவர் மட்டுமல்ல, இவரின் தந்தை தரம்சிங்கூட போராட்டக்காரர்தான். ஹரியானாவில் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். பிரதீப் இளைஞராக இருந்தபோது தந்தையுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். இந்திரா காந்திக்கு எதிராக உள்ளூர் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரையும் எழுதிவந்தார். 1984-ம் ஆண்டு ஹரியானா சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அரசு அதிகாரியானார். தொடர்ந்து 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்த்தப்பட்டார்.  

``என் தந்தை எனக்குக் கற்றுகொடுத்தது நேர்மை மட்டும்தான். கை சுத்தத்துடன் விடைபெறுகிறேன்'' என்று பெருமையுடன் கூறும் பிரதீப்பை, ஹரியானாவைச் சேர்ந்த மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா விரட்டி வந்துகொண்டிருக்கிறார். சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்தேரா, நிலம் வாங்கிக் குவித்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்தது இவர்தான். அசோக் கெம்கா, 24 ஆண்டுகளில் 51 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்.

இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளால்தான் மக்கள் இப்போதும் நம்பிக்கையுடன் நடமாட முடிகிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு