
தி.மு.க., கொடிக்கம்பம் அமைக்க இடம் அளித்த உரிமையாளர்மீது வழக்கு!
தூத்துக்குடியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு, 4 இடங்களில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களிலிருந்து கொடியை இறக்கிட ஆட்சியர் அளித்த உத்தரவின்படி, கொடிகள் அகற்றப்பட்டன. இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர்மீது, தென்பாகம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க., இளைஞரணி சார்பில் ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வயதைக்குறிக்கும் வகையில், 65 அடி உயரத்தில் 4 கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதில் 15 அடி உயரம், 25 அடி அகலமுள்ள தி.மு.க., கட்சிக் கொடி, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஏற்றப்பட்டது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் செய்திருந்தார். தூத்துக்குடி விமானநிலையச் சாலை, மாநகர நுழைவுப் பகுதியான எஃப்.சி.ஐ குடோன் எதிர்புறம், துறைமுகச்சாலை உப்பாற்று ஓடை மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகில் என 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கொடியை திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றி வைத்தார்.
கொடி ஏற்றப்பட்ட 24-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்றாலும், தூத்துக்குடியில் தி.மு.க-வின் கொடி ஏற்றிய நிகழ்ச்சிதான் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், `தி.மு.க., கொடிக்கம்பம் கான்கிரீட் பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி பெறவில்லை' என ஆட்சியர் வெங்கடேஷின் உத்தரவின்படி கொடி ஏற்றப்பட்ட 4-வது நாளே அதிகாரிகள் கொடியை கம்பத்திலிருந்து இறக்கினர். இதற்கிடையே, முறையாக அனுமதிபெற்றும் கொடியை அகற்றிட உத்தரவிட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்மீது வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தி.மு.க., இளைஞரணி சார்பில் எஸ்.பி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கொடிக்கம்பம் அமைத்துள்ள இடத்தின் உரிமையாளர் ஜெயக்கொடி மீது 5 பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், 7 நாள்களுக்குள் கொடிக்கம்பம் மற்றும் கான்கிரீட் பீடத்தை அகற்றிட வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோயலிடம் பேசினோம், “முறையான அனுமதிபெற்ற பிறகுதான் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டுள்ளது. கான்கிரீட் பீடத்துக்கு அனுமதி வாங்கவில்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? அமைச்சர் கடம்பூர் ராஜுவின் தூண்டுதலினால்தான் கொடி அகற்றப்பட்டுள்ளது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் கொடிக்கம்பத்தை அகற்ற மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். இறக்கப்பட்ட 4 கொடிகளும் மீண்டும் ஏற்றப்படும்” என்றார்