Election bannerElection banner
Published:Updated:

தேர்தலைச் சந்திக்கவுள்ள சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை!

தேர்தலைச் சந்திக்கவுள்ள சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை!
தேர்தலைச் சந்திக்கவுள்ள சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை!

தேர்தலைச் சந்திக்கவுள்ள சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை!

ந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான சத்தீஸ்கரில் பிஜப்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 10 பேரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். முன்னதாக, நேற்று சுக்மா மாவட்டத்தில் ஒன்பது தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துக் காணப்படும்.

இந்நிலையில் பிஜப்பூர் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இன்று அதிகாலை காவல்துறையினர் அதிரடியாகப் புகுந்து, தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலடித் தாக்குதலில் போலீஸார் ஈடுபட்டதில் 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து நவீனரக துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சம்பவ இடத்திலிருந்து தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காவல்துறை தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரிய வரவில்லை. துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடம் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 415 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், வனப்பகுதிக்குள் மறைந்துகொண்டு, பாதுகாப்புப்படையினரைத் தாக்குவதும், பதிலுக்கு போலீஸார் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்வதும் இம்மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் இத்தகையச் செயல்பாடுகளினால், மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பீகார், சத்தீஸ்கர் போன்ற மத்திய மற்றும் கிழக்குப்பதி மாநிலங்களில் தீவிரவாதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் பல நேரங்களில் பாதுகாப்புப் படையினரும் உயிரிழக்க நேரிடுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2010-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 76 துணை ராணுவப்படையினர், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். 

தீவிரவாதிகள் கைது

இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஒன்பது தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இரு தினங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். இத்தகவலை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பெஜி என்ற இடத்தில் போலீஸாருடன், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ராய்ப்பூரில் தெரிவித்தார்.

கைதானவர்களில் இருவர் மட்டுமே 50 வயதைக் கடந்தவர்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த மாதத்தில் பெஜி வனப்பகுதிக்கு அருகேயுள்ள காவல்நிலையத் தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் இரண்டுபேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். அதே நாளன்று தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தையும் கைதான மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடரும் தாக்குதலைத் தடுக்கும் நோக்கில், அண்மைக்காலமாக போலீஸாருடன், சி.ஆர்.பி.எஃப் படையினரும் இணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தவிர, மாநிலத்தின் வனப்பகுதிக்குள் மறைந்துள்ள தீவிரவாதிகளை முற்றிலுமாக வெளியேற்றும் நடவடிக்கையையும் பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டிருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சத்தீஸ்கரில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்குவதன் மூலம் அரசுக்கான நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ள மத்திய பி.ஜே.பி. அரசு எடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பி.ஜே.பி. அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு