Published:Updated:

தமிழகத்தில் பூரண மது விலக்கு அவசியம் - தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தல்

இரா.மோகன்
தமிழகத்தில் பூரண மது விலக்கு அவசியம் - தமிழிசை  சௌந்தர்ராஜன் வலியுறுத்தல்
தமிழகத்தில் பூரண மது விலக்கு அவசியம் - தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்கள்  காப்பாற்றப்பட வேண்டும் எனில் பூரண மதுவிலக்கு அவசியம். செம்மரக்கடத்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என ராமநாதபுரத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் பட்டினம் காத்தானில் பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, 'ஆந்திராவில் செம்மரங்களைக் கடத்துகிறார்கள் என அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஏழ்மையாக இருப்பவர்களை இனம் கண்டு அவர்களை இடைத்தரகர்கள் மூளைச்சலவை செய்து வேலைவாங்கித் தருகிறோம் என்று கூறி அவர்களை அவர்களுக்கே தெரியாமல் செம்மரங்களை கடத்தப் பயன்படுத்துகிறார்கள்.

சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பெண்கள்  காப்பாற்றப்பட வேண்டும் எனில் பூரண மதுவிலக்கு அவசியம்.பா.ஜ.க.வின் கொள்கைகளில் அதுவும் முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரே கட்சியாக பா.ஜ.க இருந்து வருகிறது. விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவில்லை.

தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் பல்வேறு சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறுவது தவறு. ஊழல் செய்பவர்கள் மீது சி.பி.ஐ எடுக்கும் நடவடிக்கையே தவிர வேறு எதுவுமில்லை. கார்த்திக் சிதம்பரத்தின் ஊழலில் காங்கிரசுக்கும், ப.சிதம்பரத்திற்கும் சம்பந்தம் உள்ளது' என்றார்.