Published:Updated:

பிரதமர் சந்திக்க மறுக்கிறாரா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மலையரசு
பிரதமர் சந்திக்க மறுக்கிறாரா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பிரதமர் சந்திக்க மறுக்கிறாரா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

முதல்வர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டது. முன்னதாக, சென்னை வந்த முதல்வரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அனைத்துக் கட்சி குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், துறை அமைச்சரை சந்திக்கச் சொல்வதாகவும்" குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவித்தார். 

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், "கருத்து வேறுபாடுகளை மறந்து, காவிரிக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு, தொடர்ந்து அழுத்தம்கொடுக்கப்பட்டுவருகிறது. பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுவருகிறது. ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்கச் சொல்லி, பிரதமரிடமிருந்து தகவல் வந்துள்ளது. இதுகுறித்துதான் எதிர்க்கட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தினோம். ஒருமித்த கருத்தோடு பயணிக்கவே, இக்கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் கூறுவதுபோல முதல்வர் தலைமையிலான குழுவைச் சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை.  நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பின்பு, பிரதமரை சந்திக்கலாம். திங்கள் கிழமை தகவல் கிடைக்குமென நினைக்கிறோம். கிடைக்கவில்லை எனில், முதல்வர் தேவையான நடவடிக்கையை எடுப்பார்" என்றார்.