Published:Updated:

'இனி உங்களுக்கு இங்கு இடம் கிடையாது' - திரிபுரா முதல்வரைக் கிண்டலடித்த பா.ஜ.க தலைவர்கள்!

மலையரசு
'இனி உங்களுக்கு இங்கு இடம் கிடையாது' - திரிபுரா முதல்வரைக் கிண்டலடித்த பா.ஜ.க தலைவர்கள்!
'இனி உங்களுக்கு இங்கு இடம் கிடையாது' - திரிபுரா முதல்வரைக் கிண்டலடித்த பா.ஜ.க தலைவர்கள்!

திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் ஏழை முதல்வர் என அழைக்கப்படும் இவர், 1998 முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். இதேபோல், மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் திரிபுராவில் 59 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியை விட பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க கூட்டணி 41 இடங்களிலும், மார்க்ஸிஸ்ட் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க தேவையான 31 இடங்களை பா.ஜ.கவே பெற்றுள்ளது. இதன்மூலம் பெரும்பான்மை பலத்துடன் அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றுகிறது. 

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் கொண்டாட்டத்தில் மிதந்துள்ள பா.ஜ.க தொண்டர்கள் மாணிக் சர்க்காரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஹிமான்தா பிஸ்வா சர்மா என்ற பா.ஜ.க தலைவர், "இனி தங்குவதற்கு வேறு இடத்தை தேடிக்கொள்ளுங்கள். அவர் முன்பு மூன்று வாய்ப்புக்கள்தாம் உள்ளன. ஒன்று மேற்குவங்கம் செல்வது. அங்கு மார்க்ஸிஸ்ட்டுக்குச் சிறிது இடம் இருப்பதாக நினைக்கிறேன். அல்லது அவர் கேரளா செல்ல வேண்டும். அங்குதான் அவர்களது ஆட்சி நடைபெறுகிறது. அதுவும் இல்லை என்றால் அண்டை நாடான வங்கதேசத்துக்குதான் செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். இதேபோல், பா.ஜ.க தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்ததில், "இன்னும் சில மணி நேரத்தில் திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் கரை கரைக்கப்படும்" என்றார்.