Published:Updated:

`முதல்வர் தொகுதியிலேயே, பா.ஜ.கவினர் மோசடி செய்தனர்!' - திரிபுரா தோல்வியால் கொதிக்கும் மார்க்ஸிஸ்ட்டுகள் 

`முதல்வர் தொகுதியிலேயே, பா.ஜ.கவினர் மோசடி செய்தனர்!' - திரிபுரா தோல்வியால் கொதிக்கும் மார்க்ஸிஸ்ட்டுகள் 
`முதல்வர் தொகுதியிலேயே, பா.ஜ.கவினர் மோசடி செய்தனர்!' - திரிபுரா தோல்வியால் கொதிக்கும் மார்க்ஸிஸ்ட்டுகள் 

திரிபுரா மாநிலத்தைத் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆண்டு வந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. 'தமிழகம் திரிபுராவாக மாறும்' எனப் பேசி வருகின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். 'மோசடியாகப் பெற்ற வெற்றி நிலைக்காது. மீண்டும் மார்க்ஸிஸ்ட்டுகள் ஆட்சியில் அமர்வார்கள்' எனக் கொதிக்கின்றனர் சி.பி.எம் கட்சி நிர்வாகிகள். 

இந்திய மாநிலங்களில் உள்ள முதல்வர்களிலேயே மிகவும் எளிமையானவர் எனப் பெயர் எடுத்தவர் திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார். கடந்த 3-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.கவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது சி.பி.எம். இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ' பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றி சாதாரண வெற்றி கிடையாது. எதிர்மறை அரசியல் செய்பவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். மூர்க்கத்தனம், அச்சுறுத்தல்களை வீழ்த்தி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. பயத்தை மீறி அமைதியும் அகிம்சையும் வென்றுள்ளது. திரிபுரா மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சியை நாங்கள் தருவோம். திரிபுராவில் சாதனை வெற்றியைப் படைத்துள்ளோம்' என்றார். திரிபுரா தேர்தல் தோல்விக்கான காரணங்களை சி.பி.எம் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று திருப்பூரில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஹெச்.ராஜா, ' இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில், தற்போது பா.ஜ.க பெற்றுள்ள வெற்றியால், அங்குள்ள குப்பைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் செய்த பிரசாரங்கள் எதுவும் எடுபடவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்களால் ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி வளாகத்தில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். அன்றைக்குப் பெரியாரைப் பயன்படுத்திய, இந்து விரோத சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள், இன்றைக்குக் கமல்ஹாசனின் உதவியை நாடியிருக்கின்றன. வரும்காலத்தில் தமிழக மக்கள் அனைவரும் பா.ஜ.க-வின் பக்கம்தான் இருக்கப்போகிறார்கள். தமிழகம் திரிபுராவாக மாறிக்கொண்டிருக்கிறது' என்றார். 

ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், " திரிபுரா மாநிலத்தில் மாணிக்கம் அகற்றப்பட்டு குப்பை ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது நிரந்தரமானதல்ல. அங்கு மக்கள் அளித்த முடிவை மார்க்ஸிஸ்ட்டுகள் ஏற்றுக்கொண்டாலும், தேர்தல் எப்படி நடந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கும் மலைவாழ் அல்லாத மக்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையை பா.ஜ.க சீர்குலைத்திருக்கிறது. 3,174 பூத்துகள்தான் மொத்தமாக இருந்தன. அதில், 519 பூத்துகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகிவிட்டது. ஐந்து அல்லது பத்து இயந்திரங்கள் பழுதாகியிருந்தால்கூட பரவாயில்லை. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பொதுவாக, வாக்குப் பதிவு மையங்களுக்கு முதலமைச்சர் செல்ல மாட்டார். முதல்வர் போட்டியிட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் தகராறு ஏற்படுவதைக் கேள்விப்பட்டு, சம்பவ இடத்துக்கே மாணிக் சர்க்கார் சென்றார். ' மூன்று பூத்துகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும்' என பா.ஜ.கவினர் கேட்டனர். 

தேர்தல் முடிந்து அனைத்து பூத் ஏஜென்ட்களும் கையெழுத்துப் போட்ட பிறகு, மீண்டும் மறுவாக்குப் பதிவு  கோரிக்கையை முன்வைத்தனர் பா.ஜ.கவினர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளித்தனர் சீதாராம் யெச்சூரியும் பிருந்தா காரத்தும். அவர்கள் அளித்த புகாரில், 'திரிபுரா மாநில தேர்தல் அதிகாரி அடாவடியாகச் செயல்படுகிறார். வாக்குப் பதிவு மையத்தில் மாணிக் சர்க்கார் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்' என முறையிட்ட பிறகுதான், வாக்குப் பதிவு முடிவில் மாணிக் சர்க்கார் வெற்றி என அறிவிக்கிறார்கள். இந்தளவுக்கு மோசடி நடந்திருக்கிறது.

மக்கள் முடிவை ஏற்றுக்கொண்டாலும், பணபலம், ஆள்பலத்தோடு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் தவறு நடந்திருக்கிறது. 2011-ம் ஆண்டு கேரளாவில் சி.பி.எம், எல்.டி.எஃப் தோற்றுப் போனது. 2016-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். எனவே, வெற்றி என்பது நிரந்தரமானதல்ல. பா.ஜ.கவை அந்த மக்களே மீண்டும் தோற்கடிப்பார்கள். பீகாரில் பா.ஜ.க அமைச்சர் ஒருவர், மாவட்ட கலெக்டரை அடிக்கும் காட்சிகள் பரவின. இதுதான் பா.ஜ.க. அவர்கள் பெற்ற வெற்றி தற்காலிகமானது. ஹெச்.ராஜாவின் பேச்சு கற்பனையில்தான் முடியும். தமிழகம், திரிபுராவாக மாறும் என்ற பேச்சையும் ஏற்க முடியாது" என்றார் கொதிப்புடன்.