Published:Updated:

காவிரி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு

காவிரி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
காவிரி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
காவிரி: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு

சென்னை: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும், தமிழகம் வடிக்கும் கண்ணீரும் என்ற தலைப்பில் நான்(கருணாநிதி) எழுதிய கடிதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தான் எதுவும் கூறாததுபோல ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதா 7.2.2007 வெளியிட்ட அறிக்கையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரவேற்பதாக கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் வரவேற்கத்தக்கத் தீர்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்.

##~~##
இந்த அறிக்கையை எங்கு வேண்டுமானாலும் காட்டத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்ல என்று கூறிய ஜெயலலிதாதான் இப்போது அதே தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதுகிறார்.
அவர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, திமுக ஆட்சியில் 19.2.2007 மற்றும் 15.4.2007 நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனால் இப்போது காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசு அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்கிறது.
அதேசமயம் அதிமுக தலைமையிலான தமிழக அரசை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியும் இதுவரை கூட்டவில்லை. அப்படியிருக்கையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவுகள் எடுத்த தி.மு.க.வை முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பது சரியா?
முட்டுக்கட்டை போடவில்லை: 17.12.2012 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தனர். அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட திமுகவினர் உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கபட நாடகமாடி, இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமில்லை, பிரதமர் அலுவலகத்துக்கே களங்கத்தை ஏற்படுத்துவதுபோல உள்ளது.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியபோது, அவரும் கவனிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
ஆனால் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் தவறாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.