Published:Updated:

விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம்... ஆச்சர்யப்படுத்திய ரஜினியின் அரசியல் பேச்சு !

விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம்...  ஆச்சர்யப்படுத்திய ரஜினியின் அரசியல் பேச்சு !
விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம்... ஆச்சர்யப்படுத்திய ரஜினியின் அரசியல் பேச்சு !

ரசியல் களத்தில் முரண்பாடுகள் நிறைந்த மனிதராகப் பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சு, முதல்முறையாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது. தன் பேச்சுக்கு தானே விளக்கமும், அந்த விளக்கத்துக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கவேண்டிய சிக்கலில் இருந்த ரஜினிகாந்த், முதல்முறையாக தன் மீதான பெரும்பாலான விமர்சனங்களுக்குத் தெளிவான பதில் அளித்து மீண்டும் அரசியல் உலகின் கவனத்தை தன்பால் திருப்பியிருக்கிறார்.

அரசியல் கட்சி ஆரம்பித்து, சுற்றுப்பயணம், கட்சிப் பணிகள் என கமல்ஹாசன் தீவிரமாக இயங்கும் சூழலில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட.. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்துக்குள்ளாகினர். இந்தச் சூழலில் அரசியல் குறித்து இதுவரை இல்லாத வகையில் தெளிவாகப் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

2017ம் ஆண்டின் இறுதி நாளில் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது, "தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.  "என் 45 வயதில் முதல்வர் பதவியை வேண்டாம் எனச் சொன்னவன், 68 வயதிலா முதல்வர் பதவிக்கு ஆசைப்படப்போகிறேன்" எனப் பேசி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்த சர்ச்சைகள்

அதேசூழலில், "20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தது ஏன், ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்ததால் அமைதியாக இருந்தார்; வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார்; ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்க்கும் துணிச்சல் அவருக்கு இல்லை; கொள்கை என்னவென்று கேட்டால் 'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்கிறார்; ஆன்மிக அரசியல் என்றால் என்ன?; சிஸ்டம் சரியில்லை என்று எதைச்சொல்கிறார்; பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிக்காதது ஏன்?;" என ரஜினிகாந்த்தின் பேச்சை மையப்படுத்தி சர்ச்சைகளும் வரிசைகட்டத் தொடங்கின.

இந்நிலையில், தனது அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் முதல்முறையாகப் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார் ரஜினிகாந்த். சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்துப் பேசிய நடிகர் ரஜினி, பொதுமேடைகளில், சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் தன்மீதான விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்துப் பேசினார்.

இதுவரை இல்லாத வகையில், முன் தயாரிப்புடன் பேசிய பேச்சாகவே இது அமைந்தது. அரசியலில் தீவிரமாக கருத்து தெரிவித்து விட்டு, அதிலிருந்து பின்வாங்குவது என்பதுதான் ரஜினிகாந்த் இதுவரை செய்து வந்தது. ஆனால், தற்போது தன்மீதான விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்துப் பேசி கவனிக்க வைத்திருக்கிறார்.

சினிமாவில் இருந்து ஏன் வரக்கூடாது?

'அரசியலை நினைத்து பயப்படவில்லை. அதன் ஆழத்தை நினைத்து தயங்குகிறேன்' என அரசியல் விமர்சகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் வகையில் பேசும் ரஜினிகாந்த், இந்த முறை பேசியது பலருக்கும் ஆச்சர்யம் அளித்திருக்கும். 'சினிமாவிலிருந்து ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. நான் அரசியலுக்கு வருவேன்' என திடமாகப் பேசினார்.

"சினிமாவிலிருந்து ஒருவர் அரசியலுக்கு வரக்கூடாது' என்கிறார்கள். 'நாங்கள் நடிக்க வரவில்லை. நீங்கள் ஏன் எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்' எனக் கேட்கிறார்கள். என் வேலையை நான் சரியாகச் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.

1996ல் அரசியல் தண்ணீர் என் மீதும் பட்டுவிட்டது.  கலைஞர், மூப்பனார்,  சோ அவர்களிடமிருந்து அரசியல் கற்றுக்கொண்டேன். எனக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதனால்தான் அரசியலுக்கு வருவேன் எனச் சொன்னேன். நீங்கள் என்னை வரவேற்று வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? அரசியல் பாதை, பூப்பாதை அல்ல. முள், பாம்பு, கற்கள் இருக்கும் பாதை என எனக்குத் தெரியும். அது தெரிந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருகிறேன்," எனத் தெளிவாகவே பேசினார். 

'எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாதுதான்..'

'ரஜினி எம்.ஜி.ஆர். ஆக நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அவர் எப்போதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது' என ரஜினி மீது விமர்சனம் அண்மைக் காலங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கும் மிகத்தெளிவான பதிலையே முன்வைத்தார் ரஜினி. "எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது என்கிறார்கள். ஆம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. சத்தியமாக முடியாது. எம்.ஜி.ஆர். ஒரு யுக புருஷர். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மாதிரி ஒருவர் பிறந்து வர முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சியை, ஏழைகளுக்கான, சாமானியர்களுக்கான, மத்திய குடும்பஸ்தர்களுக்கான ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்கள் ஆதரவு, இளைஞர்கள் ஆதரவு, டெக்னோ சப்போர்ட் மற்றும் ஆலோசகர்கள் உதவியோடு எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சியைக் கொடுப்பேன்," என பதிலளித்தார். 

ரஜினியின் பேச்சில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது ஆன்மிக அரசியல். 'ஆன்மிக அரசியல் என்பது வகுப்புவாத அரசியல். ஆன்மிகத்தின் உட்கூறு இந்து அரசியல்தான். ஆன்மிக அரசியல் என்பது பிரதமர் மோடியின் அரசியலுக்கு மிக நெருக்கமான ஒன்று' எனப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது ரஜினியின் ஆன்மிக அரசியல். இதற்கு நேரடியான முழு பதிலை ரஜினிகாந்த் தெரிவிக்காவிட்டாலும், ஆன்மிக அரசியலுக்கான விளக்கத்தை அவர் அளிக்கவே செய்தார். 

'ஆன்மிக அரசியல் என்றால்...?'

"உண்மையான, நேர்மையான வெளிப்படையான சாதி மத சார்பற்ற, தூய்மையான அரசியல்தான் ஆன்மிக அரசியல். இறை நம்பிக்கைதான் ஆன்மிக அரசியல்." என்றார். 'ஏன் திராவிடத்தில் உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை எல்லாம் கிடையாதா?' எனக் கேட்டவர் அதை அப்படியே நிறுத்திக்கொண்டு. 'இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் ஆன்மிக அரசியல் என்னவென்று' எனச்சொன்னார். 

'கொள்கை என்னான்னு கேட்டாங்க. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' எனக் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரஜினி பேசியதுதான் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட இந்த விமர்சனம், அரசியல் மேடைகளிலும் கூட இடம்பிடித்தது. இதற்கும் ரஜினி பதில் சொல்லவே செய்தார்.

"31ம் தேதி அரசியலுக்கு வருவேனா, இல்லையா எனத் தெரிவிக்கப்போகிறேன் எனச்சொன்னேன். ஆனால், 30 ந்தேதி கொள்கை என்னவென்று கேட்டார்கள். அது எப்படி இருக்கிறது என்றால் 'பொண்ணு பார்க்கப்போகும் போது அழைப்பிதழ் வரவில்லையே' எனக் கேட்பதுபோல. ஒரு ரிப்போர்டர், சின்னப்பையன் கேட்டான். அதுக்குத்தான் தலை சுத்திடுச்சுனு சொன்னேன். அதை கிண்டல் செய்கிறார்கள். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட கிண்டல் செய்கிறார்கள்," என்றார் ரஜினி.

'ஜெயலலிதாவைக் கண்டு பயமா?'

ஜெயலலிதா இருக்கும் வரை ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி பேசவில்லை. அவர் இறந்த பின்னர் அதைப்பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றிடம்தான் ரஜினியை அரசியல் நோக்கித்தள்ளுகிறது என்பது ரஜினி மீதான இன்னொரு முக்கிய விமர்சனம். இதற்கும் ரஜினி பதில் சொன்னார். "ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை எனக் கேட்கிறார்கள். அவர் மீது பயமா என்கிறார்கள். மறுபடியும் 1996 சம்பவத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது எல்லோருக்கும் தெரியும். அப்போதே அவருக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தவன் நான். எனக்கு ஏன் பயம்?.

வெற்றிடம் இருக்கிறது என்பதால் வருகிறேன் என்கிறார்கள். ஆம். ஒரு தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதா மிகுந்த ஆளுமையோடு இருந்தார். அவர்போல் இந்தியாவில் யாரும் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாதபோதும், கட்சியைக் காப்பற்றினார் கலைஞர். அவர் இப்போது உடல்நலமின்றி இருக்கிறார். தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவை. அதை நிரப்ப வருகிறேன்," என்றார் தெளிவாக.

சிவாஜியுடன் கமலை ஒப்பிட்டாரா ரஜினி?

கமல் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். தி.மு.க. பலத்துடன் இருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினி நேரடியாக முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு நேரடியாக ரஜினி பதில் சொல்லவில்லை என்றாலும், எம்.ஜி.ஆரோடு தன்னைத் தொடர்புபடுத்தி பேசிய ஒரு பகுதி கமல் குறித்த விமர்சனத்தின் விளக்கம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

"1950 களின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோ. அப்போது சிவாஜி நடிக்க வந்தார். முதல் படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இதுதான் நடிப்பு என சிவாஜியைப் புகழ்ந்தார்கள். சிவாஜி வருகையால் எம்.ஜி.ஆரின் கதை முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால்தானே ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் நாடோடி மன்னன். இதிகாசம் படைத்தது. நான் யார் என்று நிரூபித்தார்.

மறுபுறம், இந்தியாவிலேயே தன்னைப் போன்ற எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி இல்லை என நிரூபித்த கலைஞரை 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாதபடி செய்தவர். இலவச மின்சாரம் கொடுத்தார். 13 ஆண்டுகள் ஒரு கிலோ அரிசி விலை 1.75 ரூபாய் கடக்கவில்லை. மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர். எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் கொடுப்பேன்" என்றார். இதில் கமல்ஹாசனை சிவாஜியோடு, கலைஞரை இப்போதைய தி.மு.க.வோடும் ரஜினி தொடர்புப்படுத்தி பேசியிருக்கக் கூடும் என்ற பார்வை பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இதை மறந்துவிட்டீர்களா ரஜினி?

ரஜினி பதில் சொல்லாதது ஒரு விமர்சனத்துக்குதான். அதுதான் மிக முக்கியமான விமர்சனம். சிஸ்டம் சரியில்லை எனச் சொல்லும் ரஜினி மத்திய அரசின் பிரச்னைகள் பற்றி ஏன் பேசுவதில்லை. பி.ஜே.பி.யை ஏன் விமர்சிப்பதில்லை. மென் இந்துத்துவா கொள்கையுடனே ரஜினி இருக்கிறார். ஆன்மிக அரசியல் என்பது பி.ஜே.பி.யின் இந்துத்துவா அரசியலைத்தான் காட்டுகிறது. என பி.ஜே.பி. ஆதரவாளராக ரஜினிகாந்த் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அத்தோடு யாரையும் அவர் விமர்சிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி என எல்லோரையும் புகழவே செய்தார். தனக்குப் போட்டியாக இருப்பார் என நம்பும் கமல்ஹாசன், இப்போதைய ஆட்சியாளர்கள், தி.மு.க., பி.ஜே.பி., காங்கிரஸ் என யாரையும் அவர் விமர்சிக்கவில்லை.

ரஜினி தற்போது மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அப்படிப்பார்த்தால் 3 படங்கள் வெளிவர வேண்டியிருக்கின்றன. இப்போது அவர் சொல்லும் ஒவ்வொரு விமர்சனமும், செயல்பாடும் அவர் திரைப்படத்தின் வணிக லாபங்களை மாற்றி அமைக்கக் கூடும். ரஜினி முழுநேர அரசியல்வாதி ஆவது என்பது அவர் சினிமாவை விட்டு விலகுவதிலிருந்தே தொடங்கும். அது எப்போது என்பது ஆண்டவன் கையில் இல்லை, ரஜினியின் கையில் தான் இருக்கிறது.

பின் செல்ல