`திரிபுராவில் லெனின் சிலையை உடைத்துத் தள்ளியதைப் போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்’ என்று ஹெச்.ராஜா முகநூலில் கூறிய கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டு கால மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. பா.ஜ.க அங்கு ஆட்சி அமைக்க உள்ளதைத் தொடர்ந்து தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர். மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை அடித்து நொறுக்கி, தொண்டர்களையும் தாக்கினர். மேலும், பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில் இதைப்பற்றி பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் பதிவு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க செயல் தலைவர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலையைத் தொட்டுப்பார்க்ககூட யாருக்கும் தகுதி கிடையாது’ எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.