Published:Updated:

”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா? வெற்றிடம்கிறது தவறான சித்திரம்!” - சீறும் மக்கள் அதிகாரம்

”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா? வெற்றிடம்கிறது தவறான சித்திரம்!” - சீறும் மக்கள் அதிகாரம்
”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா? வெற்றிடம்கிறது தவறான சித்திரம்!” - சீறும் மக்கள் அதிகாரம்

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் மூன்று முறை முதலமைச்சராக இருந்து ஊழல்குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவும் இல்லாத தமிழக அரசியல்.! எங்கு திரும்பினாலும் ’வருங்கால முதலமைச்சரே’ பாணி போஸ்டர்கள்... கொள்கை(?) வேறுபாடு இருந்தாலும் இந்த ஒன்றில் மட்டும், ரஜினி உட்பட எல்லா ‘வருங்கால’ங்களும் ஒன்றுபோல நடந்துகொள்கிறார்கள். பேச்சு மட்டுமல்ல, ஆட்டம்பாட்டம், கூட்டம் என ஏக கொண்டாட்டமாக அமர்க்களம் செய்கிறார்கள். 

முன்னர், ’சிஸ்டம் சரியில்லை’ என்ற வாசகத்தால் நையாண்டி அரசியலில் அதிக இடம்பிடித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் நேற்று நடந்த எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில், ” தமிழக அரசியல் தலைமையில் வெற்றிடம்”என்கிறபடி பேச, அதற்கும் பலத்த எதிரொலி எழுந்துள்ளது.  

முக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு, தமிழகமெங்கும் சுற்றிவருகிறார். முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் தன்னுடைய கட்சி அரசியலை விட்டுக்கொடுத்துவிடாமல் இருப்பை வெளிப்படுத்திவருகிறார். பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியன தனித்தனி திக்கிலும் இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற புதிய கட்சிகள் முன்னணி கட்சிகளுடன் கூட்டாகவும் தனியாகவும் வாக்கு அரசியலில் பலம்பெறுவதற்காக அதிகபட்ச முனைப்பில் இறங்கியுள்ளன. 

எந்தக் கட்சியும் சரியில்லை; அரசியலே சாக்கடை எனக் கூறிக்கொண்டே, புதுமுகங்களும் இதே அரசியலில் மூழ்கி முத்தெடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். திரைப்பிரபலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருப்பார்களா? லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்ற திரைப்பட வசனத்தை நிஜமாக்கும்படியாக, தமிழகத்தில் ஆட்சி அமைப்பேன் என நேற்று தன் உள்ளார்ந்த ஆவலையும் போகிறபோக்கில் பதியவைத்துவிட்டார், நடிகர் ரஜினிகாந்த். அதே மேடையில், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளது, பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வாக்கு அரசியலில் கோலோச்சிவரும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக, பல்வேறு அரசியல் இயக்கங்கள் புதிதுபுதிதாக உருவாகி செயல்பட்டும்வருகின்றன. வாக்கு அரசியலில் இல்லாவிட்டாலும், சமூகப் பிரச்னைகளில் அவற்றின் இடத்தைப் புறக்கணித்துவிடமுடியாது. ரஜினிகாந்த் கூறிய ’வெற்றிடம்’ குறித்து, அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?  

மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் அதிரடியான போராட்டங்களில் ஈடுபட்டுவரும்  ’மக்கள் அதிகாரம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவிடம் கேட்டோம். 

”வெற்றிடம்னு பார்க்கமுடியாது. குடிநீருக்குப் பஞ்சம்.. மூணு அடி மணலை அள்ளுன்னா நூறு அடி அள்ளுறான். காரணம், அரசே குற்றமயமாகிவிட்டது. ஜனநாயகத்துக்கு ஆபத்து என பணியில் உள்ள நீதிபதிகளே குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அடிப்படையான போராட்ட உரிமை நசுக்கப்படுது. ஓஎன் ஜிசிக்கு எதிரா போராட்டம் நடத்தினவங்களை ஜாமீன்ல விடுவிக்கணும்னா, இனிமேல் ஓன் ஜிசிக்கு எதிரா போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்னு கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்படி செய்யணும்னு சட்டம் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பு தனியார்கிட்டதான் இனிமேல்னு அரசாங்கம் கைகழுவிட்டுப் போய்கிட்டு இருக்கு. மாணவியைத் தீவைச்சு எரிக்கிறான்.. கந்துவட்டியால உழைக்கிற எளிய மக்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க.. சமூகத்தில நடக்கிற பிரச்னைகளை இந்த அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு முறை மூலமா தீர்க்கமுடியாது. 

ஆனா, இந்தப் பிரச்னைகள் தீர்வதற்கு இருக்குற ஆள் மாறி இன்னோர் ஆள் வந்தா போதும்னு போலி மண்குதிரையைப் போல தனி நபர்களே மாற்றுனு நம்பவைக்கிறாங்க. ஜெயலலிதா போயிட்டாங்கன்னா சசிகலா.. அவங்க சிறையில போனதும் பன்னீர்செல்வம், பழனிசாமினு வந்துகிட்டேதான் இருக்காங்க..கருணாநிதி இல்லைனா மு.க.ஸ்டாலின், அவர் இல்லைனா துரைமுருகனோ வேறு யாரோ வரத்தான் செய்றாங்க... ஆனா என்ன நடந்திருக்கு? வெற்றிடம்கிறது தப்பான ஒரு சித்திரத்தை உருவாக்கச் சொல்லப்படும் வார்த்தை. ஒருத்தருக்கு மாற்று இன்னொருத்தர்ங்கிறது, ஒரு படம் தோத்துட்டா அடுத்த படம் அதுக்கடுத்த படம்னு நம்பவைக்க முயற்சி செய்றாங்க.. இது அறிவியல்பூர்வமானது இல்லை.  

இந்த சிஸ்டம் சரியில்லைனு சொல்ற ரஜினியும் கமலும் டெல்லியை எதிர்த்துப் பேசுறாங்களா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க..மோடியைப் பத்தி இந்துத்துவத்தைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க. ஏன் பேசலை? மாற்றுங்கிறது பாசிச இந்துத்துவா வடிவத்திலயும் வருது.. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருது. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருவது, நாட்டுக்குப் பெரும் கேடு. ஜனநாயகம் இருந்தாத்தானே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எடுத்துகிட்டுப் போகமுடியும்.. !”என அடுக்கிக்கொண்டே போகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்குரைஞர் ராஜு.  

அவர் சொல்வதை முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது!