Published:Updated:

சிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..!

சிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..!
சிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..!

சிலை என்பது வரலாற்றின், நட்பின், சுதந்திரத்தின், மக்களாட்சியின் அடையாளம் என்கிறார்கள் அமெரிக்கர்கள். அதற்கு சாட்சி தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை என்கிறார்கள். உலகின் ஆகச்சிறந்த சிலையாக கூறப்படுவது டேவிட் எனும் மைக்கல் ஏஞ்சலோவின் சிலை. பைபிள் கதாபாத்திரமான டேவிட் உருவத்தில் மிகப்பெரிய கோலியாத்தை வீழ்த்தினான். வீரத்தின் அடையாளமாக டேவிட்டின் சிலை இத்தாலியில் நிருவப்பட்டுள்ளது. உலகின் தத்ரூபமான சிலை இது என்பது அனைவரும் அறிந்ததே. குமரிக்கடலில் இருக்கும் வள்ளுவனாகட்டும், ரியோ டி ஜெனிரோ கிருஸ்துவாகட்டும் ஒவ்வொரு சிலைக்கு பின்பும் ஒரு வரலாறு இருக்கிறது. 

இன்று திரிபுராவில் லெனின் சிலையை அகற்றிவிட்டார்கள். தமிழ் நாட்டில் பெரியார் சிலையை அகற்றிவிடுவோம் என்று நாட்டை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் ட்விட் செய்கிறார். வேலூரில் பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நிச்சயமாக பிரதமர் மோடி பதிலளிக்கமாட்டார். ஆனால் பிரதமர் மோடி பிரசார மேடைகளில் பேசும் பழைய வரலாற்றை சிலை விவகாரத்திலும் பார்க்க வேண்டியது அவசியம். இந்தியாவில்  குப்தர்களின் காலம் துவங்கிக் கொண்டிருந்த நேரம் அப்போது சிலைகளின் தலைகளை உடைத்தெறிந்து வரலாறுகள் அழிக்கப்பட்டதாக தகவல். அப்போது தான் கனிஷ்கரின் சிலையில் தலை உடைத்தெரியப்பட்டது, இன்று நாம் பார்க்கும், படிக்கும் கனிஷ்கரின் சிலைக்கு தலை கிடையாது. இப்படித்தான் வரலாறுகளை அன்றைய அரசுகள் அழித்தன. ஒரு தலைமுறையை அழிக்க இன்று அணு ஆயுதங்களும், ரசாயன தாக்குதல்களும் தேவைப்படுகின்றன. ஆனால் அன்று ஒரு நாளெந்தாவும், ஒரு யாழ்பாண நூலகமும் கொழுத்தப்பட்டு வரலாறு முற்றிலும் அழிந்து போனதன் இன்னொரு பக்கம் தான் இந்த சிலை உடைப்புகளும், சிலை திருட்டுகளும். 

இரும்பு மனிதனுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை செய்யப்போகிறீர்கள். வீர சிவாஜியின் சிலை உலகத்தின் பெரிய சிலையாக இருக்கும் என்று கூறுகிறீர்கள். வீர சிவாஜிக்கு நீங்கள் செலவழிக்கப்போகும் தொகை 3600 கோடி ரூபாய். இது இந்திய மின்சாரத்துறை அமைச்சகத்துக்கு ஒரு பட்ஜெட்டில் மஹாராஷ்ட்ராவுக்கு ஒதுக்கப்படும் தொகையை விட 5 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவில் கிராமங்களின் சாலையை புதிதாக போட ஆகும் செலவை விட 7 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவின் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியைப்போல 3.5 மடங்கு அதிகம் என்கிறார்கள். இதையெல்லாம் யார் பணத்தில் செய்யப்போகிறீர்கள். இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க எவ்வளவு தொகையை செலவழிக்கப்போகிறீர்கள். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சர்தார் சரோவர் அணைக்கு 3.2 கிமீ தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விஷயங்கள் எழுந்ததை யார் கேட்டார்கள். சிலைகளை நிறுவி நீங்கள் நிலைநாட்ட விரும்புவது என்ன?

தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பு எவ்வளவு வரலாறுகளை அந்த மண் சார்ந்து முன் வைக்கிறார் பிரதமர். அந்த மண்ணில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு  தலைவரை அவமதிப்பதை மட்டும் ஏன் தட்டி கேட்க மறுக்கிறார். தமிழின் பெருமையை உணர்த்த கடற்கரை சாலைகள் முழுவதும் தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. கண்ணகி சிலையை அகற்றியதற்கு பல போராட்டங்கள் நடத்தி கண்ணகி சிலையை மீட்ட வரலாறு எல்லாம் இந்த மண்ணுக்கு உண்டு. திரிபுரா தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா வெளிநாட்டு தலைவர்களுக்கு இருக்கும் மரியாதை இந்திய தலைவர்களுக்கு இந்த மாநிலத்தில் இல்லை என்கிறார். மரியாதை என்பது கேட்டு வாங்குவது அல்ல. தானாக கிடைப்பது என்பது கூடவா ஒரு நாடாளும் கட்சியின் தலைவருக்கு தெரியவில்லை. 

பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று கூறிய 12 மணி நேரத்துக்குள் வேலூரில் ஒரு பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இது கலவரத்தை ஏற்படுத்தும் செயல் இல்லையா? இது தேச விரோதம் இல்லையா? இப்போது நீங்கள் யார் ஆன்டி இந்தியானா? தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது வலியோர் எளியோர் மீது போடப்படும் ஒரு வழக்கு மட்டும் தானா 

2017 அக்டோபரில் பங்கஜ் மிஸ்ரா எனும் ரிசர்வ் படை போலீஸ் ஒருவரை கைது செய்கிறார்கள் காரணம் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள் என்பதற்காக. ஜூலை 3,2017 வாட்ஸ் அப்பில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். இவையெல்லாம் குற்றம் என்றால், ஒரு தனி நபரின் வாக்காளர் அடையாள அட்டையை சமூக வலைதளங்களில் பகிர்வதும், அவரை அவரது மத அடையாளத்தை மையப்படுத்தி விமர்சிப்பதும் குற்றம் தானே. ஏன் ஹெச்.ராஜா மெர்சல் விஷயத்தில் கைது செய்யப்படவில்லை. எந்த ஒரு இந்திய பிரஜையையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் நீ இந்தியன் அல்ல என்று குறிப்பிடுவது தேச விரோத செயல். மோடியை விமர்சித்தாலே அவர்கள் இந்தியன் இல்லை என்று கூறிய ஹெச்.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகித்த வளர்மதி மீதும், தமிழ்ர்களுக்காக குரல் கொடுத்த திருமுருகன் காந்தி மீதும் கண்மூடித்தனமாக பாய்ந்த குண்டர் சட்டம் ஹெச்.ராஜா மீது பாயாதது ஏன்? 

இந்தியாவில் அதிகம் தாக்கப்பட்ட சிலைகளின் பட்டியலில் முன்னணி வகிப்பது அம்பேத்காரின் சிலைகள் தான். பல இடங்களில் விளிப்புநிலை மக்களை பாதுகாக்க போராடியவர் பாதுகாப்பாக கூண்டுக்குள் இருப்பதை பார்த்திருப்போம். எங்கு இது போன்றவர் தாக்கிவிடுவார்களோ என்பதற்காக தான் அந்த கூண்டுகள் போடப்பட்டுள்ளன. உங்களால் சிலைகளை தான் அகற்ற முடியும், சித்தாந்தங்களை அகற்ற முடியாது. உங்களைப்போன்றவர்களால் அடுத்த தலைமுறை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற தொலைநோக்கு பார்வையில் ஊரில் பாதி பேருக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் என்று பெயர் வைத்து வரலாற்றை நிலை நிறுத்திய ஊர் இது. இந்தியாவின் 22 மாநிலங்களில் வெற்றி வாகை சூடும் உங்களால் இங்கு நடக்கும் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் கூட ஜெயிக்க முடியாததன் காரணம் இப்போது புரிந்திருக்கும். 

டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா, மேக் இன் இந்தியா என புதிய இந்தியாக்களுக்கு வடிவம் கொடுக்கும் பிரதமர் மோடிக்கு இந்தியாவை பழைய இந்தியாவாகவே வைத்திருக்க போராடிக்கொண்டிருக்கும் இந்த ஹெச்.ராஜா போன்றவர்கள் கண்ணுக்கு தெரியாதது ஏன்?