Published:Updated:

வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!

வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!
வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!

வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!

வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் செயல்பாடுகள்தான், அரசியலில் தற்போதைய டாப் டாபிக். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மல்லை சத்யாவிடம் பலவிஷயங்கள் பற்றிப் பேசினேன்.

‘‘கோவில்பட்டியில் போட்டியிடவில்லை. வேறு தொகுதியில் வைகோ போட்டியிடும் வாய்ப்பு இருக்கா?”

“தலைவர் வைகோ இதுவரை சொன்ன முடிவில் இருந்து மாறமாட்டார். சமூக நல்லிணக்கத்திற்காக, வைகோ எடுத்திருக்கும் இந்த முடிவு கட்சித் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய வருத்தம் அளித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் கலக்கிய குரல், மாநாடுகளின் நாயகனாக ஒலித்த குரல், நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல், ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல். விடுதலைப் புலிகளின் பாசறையில் முழங்கிய குரல்.... ஒலிக்காத ஒரே இடம், தமிழக சட்டசபைதான்! இந்தமுறை, அது நடக்கும் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம். மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்காக, தன்னையே தியாகம் செய்த தலைவராகவே வைகோவைப் பார்க்கிறோம்!”

“ ‘தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறார்களே?”

“இந்த விஷமத்தை அ.தி.மு.கவும், தி.மு.கவும் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். கோவில்பட்டியில் நடந்தேறிய சாதி ரீதியான சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்ததே இந்தக் கட்சிகள்தான். பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் அவர்களுக்கு!”

‘’பொதுவாகவே உங்கள் கட்சியின் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் எல்லாம் தி.மு.க மீது மட்டுமே இருக்கிறதே, ஏன்?”

“நிச்சயமாக இல்லை. அ.தி.மு.க ஏற்கெனவே தலைமைச் செயலகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக போயஸ் கார்டனுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருக்கிறது. அடுத்து நாம்தான் வருவோம் என்று, தி.மு.கவினர்  ‘நமக்கு நாமே’ காமெடி டைம் நடத்தினார்கள். ஆனால், அது தண்ணீரில் கிழித்த கோடுபோல, கடல்பரப்பில் வரைந்த கோலம்போல எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாமல் கரைந்துவிட்டது. மக்களின் பொதுவாழ்க்கையைச் சீர்குலைத்த இரு கட்சிகளும் இனி வேண்டாம் என்பது மக்கள் எண்ணம். பழம்பெரும் தலைவரான கலைஞர், பழத்தில் வழுக்கி விழுந்த கதையும் நடந்தேறியது. மங்காத்தா ஆட்டம்போல ‘உள்ளே வெளியே’ ஆடிக்கொண்டிருந்த இரு கட்சிகளுக்கும் தங்களுக்கான அரசியல் எதிர்காலம் இல்லை என்ற நிலைவரவே... அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். நாங்கள் இரண்டு கட்சிகளுக்குமே மாற்று!”

‘’ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜயகாந்த் எந்த விதத்தில் வித்தியாசப்படுகிறார் என்கிறீர்கள்?”

“நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும், எந்நிலையிலும் தன்னிலை மாறாத கட்சியாகவே இருந்திருக்கிறோம், இருக்கிறோம். ஜனநாயக விரோத அரசியல் செய்யும் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தபோதும் சரி, வருமானத்திற்காக இனமானத்தை அடகுவைத்த தி.மு.கவுடன் கூட்டணிவைத்தபோதும் சரி, சமரசம் செய்யாமல் பயணப்பட்டிருக்கிறோம். குறைந்தபட்ச மனிதாபிமானமும், மனிதநேயமும் எல்லா தலைவர்களுக்கும் வேண்டும். அது கேப்டனிடம் இருக்கிறது. ஏழைகள் அழுதபோதெல்லாம் கலங்குகிற, தன்னுடைய பிறந்தநாளையே ‘வறுமை ஒழிப்பு நாளாக’க் கொண்டாடிக்கொண்டிருக்கிற கேப்டன் மட்டும்தான் முதன்மையாகத் தெரிகிறார்!”

‘‘விஜயகாந்தின் தெளிவில்லாத பேச்சு...?”

“அண்ணியார் பிரேமலதா அதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். சிவாஜிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் நீண்ட நெடிய வசனங்களைப் பேசி அசத்திய ஒரே நடிகர் விஜயகாந்த். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், கடவுள் வேடத்தில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். கேப்டன் அவர்கள், தமிழ் சினிமாவைத் தவிர பிறமொழிகளில் நடிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஏன், சமீபத்தில்கூட தன் உதவியாளருக்கு விசிறிவிட்டதில் தெரிந்திருக்கும் அவருடைய இயல்பான குணம். இப்படி கேப்டனைப் பற்றி ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்கிறது. அவரது உடல்ரீதியான பிரச்னையை வைத்து அரசியல் செய்வது அநாகரீகம்!”

‘’உங்களுடைய ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’ விஜயகாந்தை முதல்வர் ஆக்குவதுதானா?”

“ ‘தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி’ வெற்றி பெறுவதன் மூலம், தமிழக அரசியலில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி மலரப்போகிறது. எங்களுடைய குறைந்தபட்ச செயல்திட்டங்களை நாங்கள் கேப்டனிடம் கொடுப்போம். அதை, அதிகபட்ச நிறைவோடு செய்துமுடிப்போம்!”

‘’சமீபத்துல கட்சி ஆரம்பிச்சவங்களே ‘முதல்வர் வேட்பாளர்’ ஆயிட்டாங்க. வைகோ எப்போ ஆவார்?”

வைகோவும் ஒருநாள் முதல்வர் ஆவார்!

“மவுண்ட் பேட்டன் பிரபுவில் இருந்து, இன்றைய பிரதமர் மோடி வரை... எல்லாருடைய அரசியலையும் விமர்சித்து எழுதும் இந்தியாவின் பழம்பெரும் எழுத்தாளர் குல்தீப் நய்யாரிடம், சில வருடங்களுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். ‘’தமிழகத்தில் தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டு கட்சிகளும்தான் மாறி, மாறி வெற்றி பெறுகின்றன. இரண்டில் எந்தக் கட்சி உங்களுடைய தேர்வு?’ என்று. அவர் தெளிவாகச் சொன்னார், ‘’இரண்டு கட்சிகளுக்குமே ஒரு மாற்று வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இயல்பிலேயே வளரத் தொடங்கிவிட்டது. ஆக, தேசிய மற்றும் தமிழக நலனில் அக்கறை கொண்ட ஒருவர் தேவை என்று கருதுகிறேன். அந்த சக்தியாக நான் நினைப்பது, ம.தி.மு.க தலைவர் வைகோ!’ என்றார் குல்திப் நய்யார். ஆக, இன்று இல்லையேல் நாளை. நாளை இல்லையேல் மறுநாள்... நிச்சயம் தலைவர் வைகோ தமிழக முதல்வராக பதவி ஏற்பார்!”

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு