Published:Updated:

''சட்டவிரோதமாக ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டாரா?”- சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 9

''சட்டவிரோதமாக ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டாரா?”- சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 9
''சட்டவிரோதமாக ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டாரா?”- சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 9

''சட்டவிரோதமாக ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டாரா?”- சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 9

ஜெயலலிதாவை நேரில் ஆஜர்படுத்த கோரும் ஹேபியஸ் கார்பஸ் மனு 1989 ஜூன் 20-ம் தேதி தள்ளுபடியான அடுத்த நாள்தான் 'தராசு' பத்திரிகை மீது அவதூறு வழக்கு போட்டார் ஜெயலலிதா. அதன்பிறகு 10 நாள்கள் வரையில் ஜெயலலிதாவிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

ஜூலை மாதம் பிறந்தது. 'இரண்டு மாத அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, ஜெயலலிதா வெளியே வரப்போகிறார்' எனச் செய்திகள் றெக்கைக் கட்ட ஆரம்பித்தன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என ஜூலை முதல் தேதியிலிருந்தே தகவல்கள் கிளம்பின. இதனால், கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் தலைமை அலுவலகத்திற்கு தினமும் படையெடுத்தார்கள். பட்டாசுகளுடன் தலைவியை தரிசிக்க காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. கடைசியாக, 'ஜூலை 3-ம் தேதி வருவார்' எனத் தகவல் வெளியானது. அன்றைக்கும் ஜெயலலிதா வரவில்லை. ஆனால், அடுத்த நாள் 4-ம் தேதி கட்சியின் சீனியர்கள் சிலரை, கார்டனுக்கு அழைத்துப் பேசினார் ஜெயலலிதா.

ராகவானந்தம், மாதவன், ஹண்டே, காளிமுத்து, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த திருநாவுக்கரசரும் கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற காளிமுத்து ஏனோ கூட்டம் முடிவதற்கு முன்பே வெளியே வந்துவிட்டார்.

கூட்டத்தில் பொரிந்து தள்ளிவிட்டார் ஜெயலலிதா. அவரின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. ''அரசியலில் என்னைச் சிலர் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். நிர்பந்திக்கிறார்கள். நீங்கள் எல்லோருமே என்னை வைத்து வியாபாரம் நடத்த பார்க்கிறீர்கள். எனக்கு அரசியலே வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன். வேறு பொதுச் செயலாளரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.'' என சீறினார் ஜெயலலிதா.

'ஜெயலலிதா விரக்தியில் இருக்கிறார்' என்பது அப்போதுதான் சீனியர்களுக்குத் தெரிய வந்தது. ''ஜெயலலிதா சுய உணர்வுடன் பேசவில்லை. கார்டனுக்குள் இருக்கும் ஒரு கூட்டம் அவரை ஆட்டிப்படைக்கிறது. சசிகலா - நடராசன் பிடியில் அவர் இருக்கிறார்'' என முணுமுணுத்தார்கள் சீனியர்கள். ஆனால், இந்த விஷயத்தை மாதவன், ராகவானந்தம் மறுத்தார்கள். போயஸ் கார்டனில் நடந்த கூட்டம் பற்றி பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, மாதவனும் ராகவானந்தமும் ''சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்றார்கள். ''சொல்லக் கூடாதது எதுவும் இருக்கிறதா?'' என நிருபர்கள் கேட்டபோது, சிரித்தபடியே பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்.

இந்த நிலையில், அடுத்த நாள் அதாவது ஜூலை 5-ம் தேதி அதிரடி ஒன்று கிளம்பியது. 'ஜெயலலிதாவை நடராசன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்' எனப் புகார் கிளம்பியது. 'அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை, அவரது குடும்ப நண்பரும் ஆலோசகருமான நடராசன் உள்ளிட்ட சிலர், சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். எனவே, ஜெயலலிதாவை வெளியே கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.விஸ்வநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் துரையிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதன் நகலை ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர், கவர்னர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு விஸ்வநாதன் அனுப்பி வைத்தார். பொறியாளரான இந்த விஸ்வநாதன் வேறு யாருமில்லை. தேவகி மருத்துமனையின் டாக்டர் சொக்கலிங்கத்தின் சகோதரர். ஜனவரியில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. ஜெ அணியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்தான் விஸ்வநாதன். இத்தனைக்கும் நடராசனுக்கு மிக நெருக்கமானவர். மிக உயர்ந்த விலை கொடுத்துதான் தேர்தல் சீட்டை விஸ்வநாதன் வாங்கினார் என அப்போது கட்சி வட்டாரத்தில் செய்திகள் உளவின.

''வேட்பாளர்களிடம் பணம் வாங்கி அதைத் திருப்பித் தராமல் மிரட்டிய வழக்கில், கைதான நடராசன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் ஜெயலலிதாவை பார்ப்பதற்காகப் பல முறை முயன்றும் முடியவில்லை. அவரை வெளியே நடமாட முடியாமல் நடராசன் உள்ளிட்டவர்கள் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள் என நான் அஞ்சுகிறேன்.' எனப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார் விஸ்வநாதன்.

ஜெயலலிதாவை வெளியே ஆஜர்படுத்த கோரும் ஹேபியஸ் கார்பஸ் மனுவை சில வாரங்களுக்கு முன்பு 'தராசு' பத்திரிகை ஆசிரியர் ஷ்யாம் உயர்நீதிமன்றத்தில் கொண்டு வந்தார். 'இது தொடர்பான புகாரை போலீஸில் அளிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தனது மனுவில் சுட்டிக்காட்டினார் விஸ்வநாதன்.

புகார் மனு அளித்த விஸ்வநாதன் பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேசினார். ''பொது மக்களையும் தொண்டர்களையும் ஜெயலலிதா அடிக்கடி சந்திப்பவர். நடராசனின் நிர்பந்தத்தால் கடந்த சில காலமாக ஜெயலலிதா, யாரையும் சந்திக்கவில்லை. எல்லாத் தொடர்புகளும் நடராசன் மூலமே நடைபெறுகிறது. நடராசன் சிறையில் இருந்தபோது ஜெயலலிதா அனைவரையும் தவறாமல் சந்தித்து வந்தார். நடராசன் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியாமல் செய்து வருகிறார் நடராசன். சட்டசபை கூட்டத்துக்கூட ஜெயலலிதா வரவிடமால் நடராசன் ஆட்கள் தடுக்கிறார்கள் எனச் சந்தேகப்படுகிறேன். கட்சியின் மூத்த தலைவர்களை ஜெயலலிதா சந்தித்தபோது, தான் அரசியலை விட்டு விலக விரும்புவதாக விரக்தியுடன் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நடராசனின் நிர்பந்தம்தான் காரணமாக இருக்கக் கூடும். ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பம். கட்சியே அவர்தான் என்பது எங்களது அசைக்க முடியாத எண்ணம். எனவே, எங்களைப் போன்ற தொண்டர்களைப் பொறுத்தவரையில் அவர் வெளியே வந்து, மக்களை சந்திக்க வழியேற்பட வேண்டும்'' என மீடியாவிடம் விளக்கமாகப் பேசினார் விஸ்வநாதன்.

விஸ்வநாதனின் புகார் மனு வேலை செய்ய ஆரம்பித்தது.

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு