Election bannerElection banner
Published:Updated:

"அய்யாக்கண்ணு அவதூறாகப் பேசியதால் அடித்தேன்" - நியாயப்படுத்தும் நெல்லையம்மா...!

"அய்யாக்கண்ணு அவதூறாகப் பேசியதால் அடித்தேன்" - நியாயப்படுத்தும் நெல்லையம்மா...!
"அய்யாக்கண்ணு அவதூறாகப் பேசியதால் அடித்தேன்" - நியாயப்படுத்தும் நெல்லையம்மா...!

"அய்யாக்கண்ணு அவதூறாகப் பேசியதால் அடித்தேன்" - நியாயப்படுத்தும் நெல்லையம்மா...!

ய்யாக்கண்ணு... இந்தியா முழுவதும் இந்தப் பெயர் தற்போது தெரிவதற்குக் காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற தொடர் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்பதால்தான். எலிக்கறி சாப்பிட்டும், நிர்வாணமாக பிரதமர் அலுவலகத்தை நோக்கிச் சென்றும் பல்வேறு வடிவங்களில் தங்களின் போராட்டங்களை சக விவசாயிகளுடன் தில்லியில் நடத்தியவர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை நிறுவியதுடன், அதன் தலைவராக இருந்து வருகிறார் பி.அய்யாக்கண்ணு. தற்போது, "மரபணு மாற்ற விதைகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கக்கூடாது; அப்படிச் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கெடுவதுடன், சமூகம் அழிக்கப்படும்" என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார் அய்யாக்கண்ணு. இந்தப் பயணத்திற்கிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று விட்டு, வெளியே வந்தபோது, அவர் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட பி.ஜே.பி. மகளிரணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அய்யாக்கண்ணுவை கையால் அடித்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திரிபுரா தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெற்ற மறுநாளே, அங்கிருந்த கம்யூனிஸத் தலைவர் லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் சிலை குறித்து பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, வெளியிட்ட ட்விட்டர் பதிவு மிகப்பெரும் சர்ச்சையையும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டது. இத்தகைய சூழலில் திருச்செந்தூரில் பி.ஜே.பி. மகளிரணி நிர்வாகியின் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

உண்மையில் திருச்செந்தூர் சண்முக விலாசம் சன்னதிக்கு வெளியே என்ன நடந்தது என்று அறிய, அய்யாக்கண்ணுவிடமும், பி.ஜே.பி. நிர்வாகி நெல்லையம்மாளிடமும் தொடர்பு கொண்டு பேசினோம்.

திட்டமிடப்பட்ட தாக்குதல்

சம்பவம் பற்றி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் கேட்டோம். "தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நஞ்சு இல்லாத உணவை வலியுறுத்தியும், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இறக்குமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாங்கள் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து, எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, துண்டுப் பிரசுரங்களை  பொதுமக்களிடம் வழங்கிக் கொண்டிருந்தோம். மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தால், அந்த தானியங்களை உண்ணும் ஆண்கள் மலட்டுத்தன்மையடைவார்கள்; பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழப்பார்கள் என்பதே எங்களின் கருத்து. அதற்கான நோட்டீஸைத்தான் அளித்துக் கொண்டிருந்தோம். 'பிரதமர் மோடி ஐயா, சிறந்த அறிவாளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; என்றாலும், மரபணு மாற்ற விதைகள் விஷயத்தில், மோடிக்கு நல்ல எண்ணத்தைக் கொடுக்க வேண்டும் ஆண்டவா... வெளிநாட்டிலிருந்து அந்த விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது' என்று வேண்டினோம். நாங்கள் எங்கள் கடமையைச் செய்துகொண்டிருந்தோம். அப்போது எங்கோ இருந்து ஓடிவந்த ஒரு பெண், அவர் பி.ஜே.பி. நிர்வாகியாம், நோட்டீஸ் கொடுத்த எங்களைத் தடுத்தார். 'நீ யாரும்மா, எங்களைத் தடுப்பதற்கு, கோயில் அதிகாரிட்டயோ அல்லது போலீஸிடமோ போய்ச் சொல்லு' என நானும், என்னோடு வந்தவர்களும் சொன்னோம். 

அதற்குள் அந்தப் பெண், 'என்னைப் பார்த்து, அய்யாக்கண்ணுன்னாலே ஃப்ராடு, இந்த ஆள் கொடுக்கும் நோட்டீஸை வாங்காதீங்க' என்றதும், நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். நொடிப்பொழுதில் எதிர்பாராமல் அந்தப் பெண், என்னைக் கன்னத்தில் அறைந்தார். என்னோடு வந்தவர்கள், குறுக்கே புகுந்து, விலக்கி விட்டனர். நாங்கள், 'மோடி ஐயா, விவசாயிங்களக் காப்பாற்றுங்க ஐயா, விவசாயிங்கள எல்லாம் கொன்னுராதீங்கய்யா' என்று கூறிக் கொண்டிருக்கிறோம். எங்களின் இந்தப் பிரசாரப் பயணத்தைத் திட்டமிட்டு, ரத்து செய்யும் நோக்கில் அப்பெண் யாருடைய தூண்டுதலின்பேரிலோ அந்தப் பெண் வந்துள்ளார் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். 

உடனே, எங்கள் பயணம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் அந்தச் சம்பவத்தை பெரிசா எடுத்துக்கல. கோயிலை விட்டு வெளியே வந்த பின் அந்தப் பெண், என்னிடம் இயல்பாகத்தான் பேசினார். ஆனால், பின்னர் ஏனோ எங்களுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்து விட்டு, அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகத் தகவல். ஒருவேளை என்னை ஓங்கி அடித்ததால், அந்தம்மாவுக்கு கைவலி ஏற்பட்டு, 'பெட்டில்' சேர்ந்து படுத்திருக்கலாம். இப்போ ஹெச். ராஜாவும், தமிழிசையும் எங்களைக் கைதுசெய்ய வேண்டும் என்கிறார்களாம். பி.ஜே.பி-யில் இந்தப் பெண்ணை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, எங்களை கைதுசெய்யப் பார்க்கிறார்கள். எய்தவர் இருக்க அம்பை நொந்து என்ன பிரயோஜனம்? எய்தவர் ஹெச். ராஜா. ஏனென்றால், என்னை இதற்கு முன்பு ஏற்கனவே இதே வார்த்தையை அவர்தான் சொன்னார். 

வயிற்றில் அடித்த மோடி,,

மோடி ஐயா எங்கள் வயிற்றில் அடித்தார். அவரின் பி.ஜே.பி. தொண்டர்கள் எங்கள் கன்னத்தில் அடிக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டோம். அதற்குக் காரணம், நாங்கள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், 'நான் பிரதமரானால் விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கொடுப்பேன். இரண்டுமடங்கு விலை கிடைக்கச் செய்வேன்' என்றார். ஆனால், அவர் சொன்னதை மறந்து விட்டார். இப்போது அவர் பிரதமராகி நான்காண்டுகளாகி விட்டது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களை 'வாங்க, வாங்க' என்று இந்தியாவுக்கு அழைக்கிறார். எல்லா வெளிநாட்டு நிறுவனங்களையும் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்களே தவிர, ஜனநாயக நாடு என்று நினைக்கவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, விழிப்புஉணர்வு நோட்டீஸ் கொடுப்பதற்கான உரிமைகள்கூட தடுக்கப்படுகின்றன. எங்களைத் தடுக்க இந்தம்மா யார்? 

'ஜனநாயக நாட்டில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால், யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் என்ன வேணாலும் செய்வோம்' என்ற அடிப்படையில் பி.ஜே.பி. செயல்படுகிறது. இவர்கள், தங்களின் அரசியலுக்காக வருங்கால சமுதாயத்தை திட்டமிட்டேஅழிக்கப்பார்க்கிறார்கள். மறைமுகமாக ஜனத்தொகையைக் குறைக்க நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற சம்பவங்களில் பி.ஜே.பி-யினர் ஈடுபடுவது. என்னை அடித்ததன் மூலம் சிலை தொடர்பான ஹெச். ராஜா பிரச்னையை திசைதிருப்பி விட்டனர்" என்றார்.

அடித்தது ஏன்? 

சம்பவத்தில் தொடர்புடைய பி.ஜே.பி. நிர்வாகி நெல்லையம்மாளிடம் பேசினோம். "பிரதமர் மோடி அரசைப் பற்றி தவறாக விமர்சித்து நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருப்பதாக அறிந்து, கோயில் அருகே சென்றேன். கோயிலுக்குள் இருந்து வெளியே வந்த அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், வளாகத்திற்குள்ளேயும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ரிப்போர்ட்டர்கள் எல்லாம் தயாராக இருந்தனர். அய்யாக்கண்ணுவிடமே நேரடியாகச் சென்று கேட்டேன்.  வெளில எங்க வேண்டுமானாலும் கொடுத்துக்கோங்க. கோயில் வளாகத்தில சன்னதி முன்பு இதுபோன்ற நோட்டீஸ் கொடுக்காதீங்க என்றேன். அங்கிருந்த பெண்களிடம் நோட்டீஸை வாங்காதீங்கன்னு சொன்னேன். அதற்குள் அய்யாக்கண்ணு என்னை தகாத வார்த்தைகளைக் கூறி, 'நீ எப்படி இதைக் கேட்கலாம் என்று கேட்டு, என்னை அடிக்கப் பாய்ந்தார். நான் அதைத் தடுத்து, அவரை திருப்பி அடித்தேன். அவருடன் வந்தவர்கள் என்னை தள்ளிவிட்டதுடன், அடிக்கவும் செய்தனர். என்னுடன் அவர் வாக்குவாதம் செய்திருக்கலாம். அதை விடுத்து, மோசமான வார்த்தைகளால் திட்டினார். ஒரு பெண்ணான என்னை இழிவாக அவர் பேசியது நியாயமா? எனக்குப் பாதுகாப்பில்லாத சூழலில்தான், நான் அவரை அடிக்க வேண்டியதாயிற்று. இதனால், சிறிதுநேரம் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பின்னர், அதுபற்றி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இருப்பினும், அவர்கள் அடித்ததில் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், நான் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பி.ஜே.பி-யினரும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவது போன்ற தோற்றம் உருவாகாதா என்று கேட்கிறீர்கள். அப்படி நான் கருதவில்லை. அன்றைய சூழ்நிலையில், எனக்கு வேறு வழியில்லாததால் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று. நடந்த சம்பவம் குறித்து, மாநில பி.ஜே.பி. தலைமையிடம் நான் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்" என்றார்.

பி.ஜே.பி-யினர் நடந்து கொள்ளும் விதம் குறித்து, தமிழக அரசு வாய்மூடி மௌனியாக இருப்பதைப் பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசை, மத்திய பி.ஜே.பி. அரசுதான் இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையோ என எண்ணத் தோன்றுகிறது. இந்த மாயையை மாற்றவாவது, செயல்படுமா இந்த அரசு?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு