Published:Updated:

''அப்பாவிகளின் உயிர், ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது..!'' - எச்சரிக்கும் ஸ்டாலின் 

''அப்பாவிகளின் உயிர், ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது..!'' - எச்சரிக்கும் ஸ்டாலின் 
''அப்பாவிகளின் உயிர், ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது..!'' - எச்சரிக்கும் ஸ்டாலின் 

''அப்பாவிகளின் உயிர், ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது..!'' - எச்சரிக்கும் ஸ்டாலின் 


''தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் – ஒழுங்கும் இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அப்பாவிகளின் உயிர் என்பது ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது. '' என்று  தி.மு.க செயல் தலைவர் மு.க.  ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, ''அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன்'' என்று தி.மு.க-வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் முன்பாக, பி.காம்., முதலாமாண்டு மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்ட கொடூரச் செய்தி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் செவிகளிலும் இடியாகத்தான் இறங்கியது. அதுதொடர்பான காட்சிகளைப் பார்த்தபோது இதயம் அதிர்ந்தது. காவல்நிலையத்தில் அஸ்வினி தரப்பில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால், இந்தப் படுகொலையைத் தடுத்திருக்க முடியும். 

ஆனால், முதல்வருக்கும் - அ.தி.மு.க அரசின் விழாக்களுக்கும் அளிக்கும் பாதுகாப்பிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடும் காவல்துறை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கல்லூரி வளாகங்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. அதற்கான ரத்த சாட்சிதான் அஸ்வினியின் கொலை செய்யப்பட்ட உடல். சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் மாநாட்டில் முதலமைச்சர் அறிவித்தார். அதன் ஈரம் காய்வதற்குள் இப்படியொரு படுகொலை நடைபெற்று, இளம் மாணவி அஸ்வினியின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பது கொடுமையானது.

சில நாட்களுக்கு முன்பாக, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் சதீஷ்குமார் என்ற உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், பாதுகாப்புப் பணியில் இருந்த மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவை, சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல், காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.

இந்தத் தற்கொலைகளும், படுகொலைகளும் நடைபெற்ற நாட்களுக்கு முன்பாக, சென்னை மாநகர காவல்துறையினரின் குறைதீர்வு முகாம், தமிழக டி.ஜி.பி தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதில், காவலர்கள் சதீஷ்குமார், அருண்ராஜ் ஆகியோரின் மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? அவர்களது குறைகள் என்ன என்பதையெல்லாம் கேட்டு அறியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறைதீர்வு முகாம்கள் முடிந்தவுடனேயே, இப்படிப்பட்ட தற்கொலைகள் நிகழ்கின்றன எனில், காவல்துறையின் தலைவர் நடத்தும் குறைதீர்ப்பு முகாம் என்பது வெறும் கண் துடைப்புக்காகவா? விளம்பரத்திற்காக அவை நடத்தப்படுகின்றனவா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

அதுமட்டுமின்றி, மார்ச் 7 ஆம் தேதி இரவு திருச்சி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரே காரணத்தால், போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் காமராஜ், விரட்டிச் சென்று எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த இளம் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். மகளிர் தினம் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக உஷாவின் உயிர் பறிக்கப்பட்டது என்றால், மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாள் மாணவி அஸ்வினியின் உயிர்ப் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் மகளிர் நலன் காக்கும் அரசாங்கமா? சில நாட்களுக்கு முன்பாக, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், மணிகண்டன் என்ற ஓட்டுநர் ஒருவரை காவல்துறை தாக்கியதால், மனமுடைந்த அவர், அதே இடத்தில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக் கொண்டு, அதன்பிறகு மருத்துவமனையில் இறந்திருக்கிறார். இப்படி, தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் – ஒழுங்கும் இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் கொடுமைக்குள்ளாகிப் பலியானபோது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கான சிறப்புத் திட்டங்களையும், கடுமையான தண்டனைகளையும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவை எதுவும் அவர் பதவியில் இருந்த காலம்வரை நிறைவேறவில்லை. அறிவிப்போடு சரி. அவரது பதவிக்காலத்தை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் இனியாவது, தூசுபடிந்து கிடக்கும் அந்தச் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்பாவிகளின் உயிர் என்பது ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு பொம்மையாகி விடக்கூடாது. எனவே, நீங்கள் கடமை தவறினால், 'ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?', எனப் பொதுமக்கள் ஆவேசக் குரலெழுப்பி, உரிய தீர்ப்பளிப்பார்கள் என்பதையும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு