Published:Updated:

யார் நம் வேட்பாளர்?

யார் நம் வேட்பாளர்?
பிரீமியம் ஸ்டோரி
News
யார் நம் வேட்பாளர்?

யார் நம் வேட்பாளர்?

யார் நம் வேட்பாளர்?

நெருங்கிவிட்டது தேர்தல். இப்போது வாக்களிப்பதற்கு மக்களிடம் இருக்கும் அளவுகோல்கள் என்னென்ன? சாதி, பணம், கட்சி - இவைதான் `யாருக்கு வாக்கு?' என்பதைத் தீர்மானிக்கி்ற மிக முக்கியக் காரணிகள். இந்தத் தேர்தலில் மட்டும் அல்ல... கடந்த சில தேர்தல்களிலும் இதுதான் நிலைமை. ஆனால், கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் முக்கியமான ஒரு பொறுப்புக்கு இவைதான் தகுதிகளா?

இதுவரை சாதி பார்த்து வாக்களித்து, சாதித்தது என்ன? ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள், அந்தந்தத் தொகுதியில் எது பெரும்பான்மை சாதியோ, அந்தச் சாதியைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துகின்றன. ‘முற்போக்கு’க் கூட்டணி, ‘மதச்சார்பற்ற’க் கூட்டணி எதுவாக இருப்பினும் இதுவே யதார்த்தம். மக்களிடம் உள்ள சாதிப்பற்றை, சாதி இறுக்கமாக மாற்றி, அவற்றை வாக்குகளாக அறுவடைசெய்யும் தந்திரமான செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்கின்றன. ஒரு வசதிக்காக சிலவற்றை ‘சாதிக் கட்சிகள்’ என அழைத்தாலும், நடைமுறைச் செயல்பாடுகளில் அனைத்துமே சாதிக் கட்சிகள்தான். மக்களிடம் பகையை உருவாக்கி, வன்மத்தை வளர்க்கும் இந்தச் சாதி அரசியலை, இந்தத் தேர்தலில் ஒதுக்கித் தள்ளுவோம். சாதி பார்த்து வாக்களிக்கும் இழிவை விட்டொழிப்போம்.

நம் ஜனநாயகத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி, நிகழ்கால அரசியலின் ஆகப்பெரிய சரிவு எதுவெனில், தேர்தலில் விளையாடும் பணம். ‘ஓட்டுக்கு எவ்வளவு தருவீர்கள்?’ எனக் கேட்கும் அளவுக்கு, தேர்தல் என்பது ஒரு மளிகைக்கடை பேரம்போல நடைபெறுகிறது. மக்களைப் பொறுத்தவரை, ‘எப்படியும் இவர்கள் வெற்றிபெற்று எதையும் செய்யப்போவது இல்லை. எனவே, இப்போது கிடைப்பதை ஏன் விடவேண்டும்?’ என நினைக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீதான ஆழமான அவநம்பிக்கையில் இருந்துதான் மக்கள் இந்த முடிவுக்குவருகிறார்கள் என்றபோதிலும், அது சரியானதோ, தீர்வுக்கானதோ அல்ல. வாக்குக்குப் பணம் பெறுவதன் மூலம், ஓர் ஊழல் அரசியல்வாதியின் கரைபடிந்த பணத்தில் நாம் கை நனைக்கிறோம். அவர்களின் குற்றங்களை எதிர்த்துச் செயல்படுவதற்கு அல்ல...

சிந்திப்பதற்கான தார்மீக அறத்தையே இழக்கிறோம். வாக்குக்குப் பணம் என்பது, நம்மை மீளாப் படுகுழிக்கு இட்டுச்செல்லும் பழி நிறைந்த பாதை.

இவை இரண்டையும் விடுத்து மூன்றாவதாக இருப்பது கட்சிகளின் செல்வாக்கு. கொள்கை சார்ந்த ஈடுபாடு, தலைவர்களின் வசீகரம், கட்சி மீதான ஈடுபாடு ஆகியவையே கணிசமான வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. ஒருவகையில் இவைதான் ஒரு கட்சியின் நிரந்தர வாக்கு வங்கி. ஆனால், ஒரு தொண்டன் கட்சித் தலைமைமீது கொண்டிருக்கும் விசுவாசம் என்பது மூடநம்பிக்கையைப் போன்றது அல்ல. அது தர்க்க அறிவுக்கு உட்பட்டது. அப்படி தொண்டனின் அர்ப்பணிப்புமிக்க விசுவாசத்தைப் பெறுவதற்கு தகுதிபடைத்த கட்சிகள் இங்கே இருக்கின்றனவா, தலைவர்கள், தொண்டர்களுக்கு விசுவாசமாகச் செயல்படுகிறார்களா, தாங்கள் அறிவிக்கும் கொள்கைக்கு நேர்மையாக இருக்கிறார்களா? `இல்லை' என்பதுதான் நமக்குத் தெரிந்த பதில். எனவே, கட்சிகளின் ஆர்ப்பாட்ட அரசியலையும் தலைவர்களின் பொய் வேடப் பேச்சுக்களையும் கண்டு மயங்கத் தேவை இல்லை. எனில், யாருக்கு வாக்களிப்பது?

நம் ஊரின் அசலான பிரச்னைகளை சமரசம் இன்றி முன்வைப்பவர் எவரோ, அவரே நம் வேட்பாளர். சாலை, குடிநீர், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் என மக்களின் நுண்ணியத் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்பவர் எவரோ, அவரே நம் வேட்பாளர். சாதி வேண்டாம், பணம் வேண்டாம், கட்சி ஆடம்பரம் வேண்டாம் எனச் செயல்படுபவர் வேண்டும். உள்ளூரின் குரல் அறிந்து செயல்படுபவர் வேண்டும். அவரே நம் வேட்பாளர். அவருக்கே நமது வாக்கு!