Published:Updated:

“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”

“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”

மா.அ.மோகன் பிரபாகரன்

“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”

``அம்மாவின் பிரசாரத்தைக் கேட்டு, `தமிழ்நாட்டில் இவ்வளவு சாதனைகள் நடந்திருக்கின்றனவா!' என மக்களே வியந்துகிடக்கிறார்கள். அம்மாவின் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம், மக்களை அலைமோதவைத்திருக்கிறது. ஆளும் கட்சியாக ஐந்து ஆண்டுகாலம் இருந்தும், பிரசாரக் கூட்டங்களில் மக்கள் இத்தனை வரவேற்பு தருவது என்பது தமிழக அரசியலில் இதுவரை யாரும் கண்டிராதது. இது ஒரு புதிய அத்தியாயம்'' - டாப் கியர் தட்டுகிறார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க-வின் இந்த ஸ்டார் பேச்சாளர்தான், இணையத்தின் மீம்ஸ் டார்லிங்.

``ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரங்களும், கூட்டத்தில் ஏற்பட்ட மரணங்களும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கின்றனவே?''

``குழந்தைகளுக்கே உரிய குதூகலத்தோடு அம்மாவின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள் தமிழக மக்கள். பசித்த மக்களுக்குப் பால்சோறாகவும், தவிக்கும் வாய்க்குத் தண்ணீராகவும் விளங்கும் முதலமைச்சர் அம்மாவின் தாயுள்ளத்தை மக்கள் அறிவார்கள்.

ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரசாரங்களில் 50 கார்களும், வாகனங்களும் அணிவகுத்துச் செல்வதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது தேவை இல்லாத செலவு; மக்களுக்கும் இடையூறு. ஹெலிகாப்டரில் போவதில் என்ன ஆடம்பரம்? ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் ஸ்டாலின் வலம்வருகிறார். அது ஆடம்பரம் இல்லையா?

பிரசாரத்தில் மரணம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்குக் காரணம் இந்த நேரத்தில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றமும், இறந்தவர்கள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள் என்பதும்தான். இது எந்த வகையிலும் அரசுக்கோ, எங்களின் ஆட்சிக்கோ அவப்பெயரைக் கொண்டுவந்து சேர்க்காது. எதிர்க்கட்சிகள்தான் இந்தப் பிணங்களை வைத்து ஓட்டு வேட்டை நடத்தப்பார்க்கிறார்கள்.''

``ஜெயலலிதாவின் மூன்று அடுக்குப் பிரசார மேடை, பல தரப்பினரிடையே விமர்சனத்துக்குள்ளானது. ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் அமரும் தகுதி உங்கள் வேட்பாளர்களுக்கு இல்லையா?''

``லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்போது, அவர்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தனியாக அமரவைக்கப் படுகிறார்கள். இது படாடோபமோ, ஆடம்பரமோ அல்ல. தேர்தல் ஆணையத்தின் விதியை எந்த இடத்திலும் மீறவில்லை. இதை எல்லாமா ஒரு குறையாகப் பேசுவார்கள்?''

“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”

``ஜெயலலிதாவின் பிரசாரத்தைவிட, கருணாநிதியின் பிரசாரம் மக்களை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?''

``திருச்சியில் 8 நிமிடங்கள்தான் பேசி இருக்கிறார் கருணாநிதி. அம்மா அவர்கள் எல்லாக் கூட்டங்களிலும் 40 நிமிடங்கள் உரையாற்றுகிறார். தி.மு.க பிரசார மேடைகளில் கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் கருணாநிதியின் புகழ்பாடி, நேரத்தை விரயமாக்கு கிறார்கள். அது பிரசாரக் கூட்டம் அல்ல, பஜனை மடம். ஆனால், எங்கள் கூட்டங்களில் பிரசாரத்தை நேரடியாகத் தொடங்குகிறார் அம்மா. `எல்லா இடங்களிலும் ஒரே விஷயத்தைப் பேசுகிறார்' என, தேவை இல்லாமல் ஊடகம்தான் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மதுரையில் நடந்த கூட்டத்தில் கிரானைட் கொள்ளை குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசி இருக்கிறார். இந்தப் பேச்சுக்களின் மூலம்

தி.மு.க-வுக்கு மீண்டும் வாக்களித்துவிடக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.''

`` `தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, அதிகத் தொகுதிகளில் வெற்றிபெறும்' என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?''

``காங்கிரஸ் எங்கும் கரை சேராது. காங்கிரஸில் இருந்து வெளியேறிய பெரியார், அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என முடிவெடுத்தார். அதை உணர்ந்து, அண்ணா அதன் அஸ்தமனத்தைச் செய்து முடித்தார். அன்றும் இன்றும் தமிழர்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்திவரும் காங்கிரஸுக்கு, கருணாநிதி பல்லக்கு தூக்கிவருகிறார். `அண்ணாவின் தம்பி' என்ற பெயரையும், `பெரியாரின் சீடன்' என்ற பதவியையும் கருணாநிதி இழந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. அதனால் காங்கிரஸையோ, அதோடு கூட்டணி கண்டிருக்கும் தி.மு.க-வையோ கண்டு அஞ்சவேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. சைதாப்பேட்டை கூட்டத்தில், ‘நான் சக்தியை இழந்துவிட்டேன். மக்கள்தான் எனக்கு மீண்டும் சக்தி தர வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. ஏற்கெனவே ஐந்து முறை சக்தி கொடுத்ததன் பலனாக, பல தமிழர்களின் வாழ்வைக் காவு வாங்கியவர் அவர். அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.''

``தேர்தல் ஆணையத்தின் சோதனைகளில் அ.தி.மு.க பிரமுகர்களிடம் இருந்து அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டுவருகிறது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறாரே?''

``தி.மு.க-விடம்தான் அதிக அளவில் பணம் இருக்கிறது. எங்களிடம் பணம் இருக்கிறது எனச் சொல்வது பொய். இப்போது நடந்திருக்கும் சோதனைகளுக்கும், கைப்பற்றப்பட்ட பணத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அம்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஒண்ணே முக்கால் ரூபாய்க்கு ஊசி போட்ட ராமதாஸுக்கு, இப்போது இவ்வளவு செலவுசெய்து ஓர் அரசியல் கூட்டத்தைத் திரட்ட காசு எங்கு இருந்து வந்தது என்பதைச் சொல்ல திராணி இருக்கிறதா?''

``தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டிவருகிறாரே?''

``தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகளை, தினம்தோறும் செய்திகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தோல்விக்குக் காரணம் தேடும் ஸ்டாலினுக்கு மட்டும் எங்கு இருந்து இப்படி யோசனைகள் வருகின்றன என்றே தெரியவில்லை. லக்கானி, நேர்மையான ஓர் அதிகாரி. அவருடைய அதிகாரத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்தக் குற்றசாட்டில் உண்மை இல்லை.''

“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்!”

``தேர்தலில் போட்டியிடுவது குறித்து வைகோ மாற்றி மாற்றி முடிவெடுப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``வைகோவின் பேச்சும் நடவடிக்கைகளும் கொஞ்ச காலமாக முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கின்றன. அது அவரை நம்பி இருக்கும் கூட்டணித் தலைவர்களையும், அவர்களது தொண்டர்களையும் எங்கே கொண்டுபோய் நிறுத்துமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் விலகியதற்கு வைகோ சொல்லியிருக்கும் காரணமும் சரியான ஒன்றாக இருக்கிறது. காரணம், அப்படி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் தி.மு.க போகும். கருணாநிதிக்கு இந்த மாதிரி சாதிச் சண்டைகளை ஏற்படுத்துவது பிள்ளை விளையாட்டு. இருந்தும் மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு என்பது, கானல் நீர்தான்.''

``நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை... ஸீட் கேட்டிருந்தீர்களா?''

``தேர்தலில் போட்டியிட வேண்டும் என, நான் எப்போதுமே நினைத்தது இல்லை. அதில் விருப்பமும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை, கடைசித் தொண்டன் வரை கொண்டுசேர்ப்பதே என் இலக்கு. அரசியல் தவிர்த்து இலக்கியம், எழுத்து போன்ற தளங்களில் நான் இன்னமும் இயங்கவேண்டியிருக்கிறது. இந்த நாஞ்சில் சம்பத், அம்மாவின் ஆட்சித் தேருக்கு என்றும் சாரதியாகவே இருப்பான். அதுவே என் விருப்பம்!''